• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை | நிலாந்தன்

Byadmin

Oct 22, 2024


 

மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை? எல்லாப் பழியையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீது சுமத்திவிட்டு தமிழ் தலைவர்கள் தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்புக்கூறாமல் தப்பி வந்திருக்கிறார்களா? தங்களால் முடியாமல்போன விடயங்களுக்காக யாராவது தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா? கடந்த பல தசாப்த காலமாக தமிழ் அரசியலில் பொறுப்பு கூறாமை என்பது ஒரு பண்பாடாக வளர்ந்து விட்டது.

தலைமைத்துவம் என்பது வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்புக்கூறுவது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் பொறுப்புக் கூறுவது.வரவுக்கும் செலவுக்கும் பொறுப்புக் கூறுவது.ஆனால் தமிழ் அரசியலில் எத்தனை பேர் அவ்வாறு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்? தமது தேர்தல் அறிக்கைகளுக்கு எத்தனை பேர் பொறுப்புக் கூறியிருக்கிறார்கள்?

இந்த விடயத்தில் ஆயுதப் போராட்டத்தை தனியாக ஆராய வேண்டும்.ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான மிதவாத அரசியலை தொகுத்துப் பார்த்தால் எத்தனை தலைவர்கள் தமது தோல்விகளுக்கு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்?

உள்ளதில் பெரியதும் மூத்ததும் ஆகிய கட்சி தமிழரசுக் கட்சி.அதற்கு ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி என்றும் பெயர் உண்டு.கடந்த 74 ஆண்டுகளாக, தனது பெயரில் உள்ள பெடரலை அதாவது சமஸ்டியை ஏன் அடைய முடியவில்லை என்பதற்கு அந்தக் கட்சி தன் மக்களுக்கு எப்போதாவது பொறுப்புக் கூறியிருக்கிறதா? தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத செல்வநாயகம்,அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்காமல்,மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாரா?

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழர் விடுதலைக் கூட்டணி.சில ஆண்டுகளிலேயே,81ஆம்ஆண்டு மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல்களை நோக்கிச் சரணடைந்தது.அதற்கு அவர்கள் பொறுப்புக் கூறினார்களா? மன்னிப்பு கேட்டார்களா?

நவீன தமிழ் அரசியல் வரலாற்றில் தமிழ்மக்கள் ஆகக்கூடிய நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றிருந்த காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தேர்தல் கேட்ட காலகட்டம் தான். 22 ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் தமிழ் பிரதிநிதித்துவம் உச்சமாக இருந்த அக்காலகட்டத்தில்தான்,2009ஆம் ஆண்டின் முற்பகுதியில்,மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அதிக தொகை மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள். அதாவது ஆகக்கூடுதலான ஆசனங்களை தமிழர்கள் பெற்றிருந்த ஒரு காலகட்டத்தில்தான்,அதிக தொகை தமிழ்மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள்.22 ஆசனங்களினாலும் அந்த இனஅழிப்பை தடுக்க முடியவில்லை.அது கூட்டமைப்பின் தோல்வியும்தான்.அதற்கு கூட்டமைப்பு பொறுப்புக் கூறியதா?

2009க்குப்பின் கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளில் வெவ்வேறு வகைப்பட்ட வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன.இவற்றில் இத்தனை நிறைவேற்றப்பட்டன? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கு எந்தக் கட்சியாவது பொறுப்புக்கூறியதா? அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டதா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது,தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் எதுவரை முன்னேறியுள்ளது?பரிகார நீதியை நோக்கி எதுவரை முன்னேறியுள்ளது?என்று தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுக்குமா? இன அழிப்புக்கு எதிராக இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் விடயத்தில் ஏனைய கட்சிகளைவிட தான் நேர்மையாகவும் துணிச்சலாகவும் உண்மையாகவும் நடப்பதாகக் கூறும் முன்னணி, அந்த விடயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் எதுவரை முன்னேறியிருக்கிறது என்பதனை தமிழ் மக்களுக்கு எடுத்து கூறுமா? தன்னுடைய சமரசத்துக்கு இடமற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தான் பெற்றுக்கொண்ட வெற்றிகளைக் குறித்து அக்கட்சி தமிழ் மக்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறுமா?

எல்லாருமே தமிழ் மக்களின் மறதியின் மீதே தமது தேர்தல் வெற்றிகளை முதலீடு செய்கிறார்களா? ஆம் கடந்த 15 ஆண்டுகளாக மட்டுமல்ல, அதற்கு முன்னரும் பொறுப்புக்கு கூறாமை என்பது தமிழ் அரசியலில் ஒரு பண்பாடாகவே வளர்ந்துவிட்டது.தமிழ்க்கட்சித் தலைவர்களில் பலர் தமது தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் இயலாமைகளுக்கும் மன்னிப்புக் கேட்டதில்லை.அதாவது பொறுப்பு கூறியதில்லை.

ஆனால் கடந்த வாரம் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் முன்னிலையில் மக்களுக்கு உண்மையை கூறினார்கள்; பொறுப்புக் கூறினார்கள்.

பொது வாழ்வில் மக்களுக்கு உண்மையை கூறுவது மகிமையானது. அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு வாழ்க்கை முறை வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடும் பெரும்பாலான பிரமுகர்கள் மக்களுக்குப் பொறுப்பு கூறுவதில்லை.தனது செயல்களுக்குப் பொறுப்புக்கூறும் துணிச்சல் மக்கள் அமைப்பிடம் உண்டு என்பதனால் அது நாடாளுமன்றத் தேர்தலைக் கையாளாமல் விட்டதற்கு மன்னிப்புக் கேட்டது.

மக்களைச் சிதறடித்தது கட்சிகள்தான்.அதற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதும் கட்சிகள்தான்.மக்களை ஆகக்குறைந்தபட்சம் ஒன்றுதிரட்டிய மக்கள்அமைப்பு அதைத்தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாக்காளர்களின் கூட்டுஉணர்வை மதித்து பொறுப்பு கூறியது. அதை கட்சிகள் பின்பற்றுமா? சுயேட்சைகள் பின்பற்றுமா?

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமது மக்களுக்கு உண்மையை கூறாதவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கியவர்கள்,தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியவர்கள் அனைவரும் தமிழ்மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

பிரதான அரசியல்வாதிகளின் அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள் அநேகர் மீது ஊருக்குள் குற்றச்சாட்டுகள் உண்டு.பாலியல் குற்றச்சாட்டுக்கள்,ரகசிய டீல்கள் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.தமது அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்பது தமிழ் படத்தில் வரும் கொமெடி வாக்கியமாக இருக்கலாம். ஆனால் தேசத்தை நிர்மாணிக்கும் அரசியலில் அது பகிடி அல்ல.பொறுப்புக்கூற வேண்டிய விடயம்.தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூறுவார்களா?

நிலாந்தன்

The post அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை | நிலாந்தன் appeared first on Vanakkam London.

By admin