3
“ஆரம்பத்தில் என்னுடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த அக்காமார்கள் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நீ சாக்கடைக்குள் விழுந்துவிட்டாய்… உன்னுடன் பேசினால் எங்களின் பெயரும் கெட்டுப்போய்விடும் என்றனர். உனக்கு பயமாக இல்லையா, உன்னைக் கடத்திக்கொண்டு போனால் என்ன செய்வாய் என சக தோழிகளே என்னிடம் கேள்வியெழுப்பினர், மற்றவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன். பெண்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது அவ்வளவு மோசமான செயலா?”- நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரின் ஆதங்கமே இது. இலங்கை அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை எவ்வாறான கண்ணோட்டத்தில் இந்தச் சமூகம் நோக்குகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய பெருமை கொண்ட நாடான இலங்கையில், 1960 ஜுலை முதல் 1965 மார்ச் வரை உலகின் முதல் பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவி வகித்தார். தொடர்ந்து 1970 முதல் 1977 வரை அவர் மீண்டும் பிரதமராக பதவி வகித்தார். அவரையடுத்து 1994 ஓகஸ்ட் முதல் 1994 செப்டெம்பர் வரை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராக பதவி வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வெற்றிபெற்றதும் தனது தயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராக்கினார். அதன்படி, 1994 நவம்பர் முதல் 2000 ஓகஸ்ட் வரை ஸ்ரீமாவோ 3ஆவது தடவையாகவும் பிரதமராக செயற்பட்டார்.
2000ஆம் ஆண்டுக்கு பின்னர் ரத்னசிறி விக்ரமநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, திமு ஜயரத்ன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதமர் பதவியை வகித்தனர். தற்போது 2 தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை வரலாற்றில் மீண்டுமொரு பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியில் உள்ளார்.
முன்னைய காலத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது மிகவும் அரிதாகவே காணப்பட்டது. எனினும், தற்காலத்தில் நிலைமை கொஞ்சம் மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது. தமது குடும்பம் மற்றும் சமூக மட்டத்தைக் கடந்து, அரசியல் சக்தியாக பெண்கள் உருவாகி வருகின்றனர். கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்கள் பலர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.
இதற்கு ஆரம்ப புள்ளியாக 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிச் மன்றத் தேர்தலே இருந்தது. 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை மட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, 2017ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடைபெற்ற முதலாவது தேர்தலாக அது உள்ளது. உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கான 25 சதவீதமான ஒதுக்கீட்டைக் கட்டாயப்படுத்தும் வகையில் நடைபெற்ற முதலாவது தேர்தலாகும். உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,486 என்பதிலிருந்து, 8,356ஆகவும் அது அதிகரித்தது.
முன்னைய வருடங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் 1.8 சதவீதமாக இருந்த பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் ஒப்பிடும்போது, 25 சதவீதம் என்பது மிகப் பெரிய முன்னேற்றமாகும். இதனால் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட 56,000 வேட்பாளர்களில் 17,000 பேர் பெண் வேட்பாளராக இருந்தனர். 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 சதவீதத்தை தாண்டியும் பெண்களது வகிபாகம் அமையலாம் என எதிர்வுகூறப்பட்டது. எனினும், 23 சதவீதம் வரை பெண்களது உள்ளூர் மட்ட பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான திருப்புமுனையாக அமைந்தது. 2018இல் தெரிவுசெய்யப்பட்ட 8,326 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுள் 1,919 பெண்கள் இருந்தனர்.
நாகராஜா கனகாம்பிகை
இம்முறை 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் அபிவிருத்தி, குடும்ப நலன், பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய சமூக விடயங்களில் அதிக கவனம் செலுத்தினர். அவ்வாறானதொரு இளம் பெண் வேட்பாளரே நாகராஜா கனகாம்பிகை, இவர் அக்கரப்பத்தனை – நாகசேனை வட்டாரத்தில் மலையக மக்கள் முற்போக்குக் கழகம் என்ற சுயோட்சைக் குழுவில் போட்டியிட்டிருந்தார்.
“பிரதேச மக்களால் மீண்டும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்ட நீண்டகாலமாக பதவிகளை வகித்த பல அரசியல்வாதிகள் இருந்தும், மக்கள் நடந்துசெல்வதற்கு ஏற்ற வீதிகள் கூட இங்கு இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ வசதிகளை பெறுவதற்குக்கூட 5 அல்லது 6 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இவற்றை சரிப்படுத்தும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கே உண்டு. எனவே, அங்கிருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்ற நோக்கத்தில் முதன்முறையாக அவர் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொட்டாஞ்சேனை லூணுபொக்குண வட்டாரத்தில் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்த காயத்ரி விக்கிரமசிங்க, இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பாக கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்.
“பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு” என்று பத்திரிகையில் தான் படித்த செய்தியே தனது வாழ்க்கைப் பயணத்தை மாற்றியதாகக் கூறிய காயத்ரி, தனது தந்தை பிரபல அரசியல்வாதியொருவரின் ஊடக ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட போதும் அந்தக்காலங்களில் தான் அரசியலில் ஆர்வமின்றி இருந்ததாக குறிப்பிடுகின்றார். எனினும், மேற்படி செய்தியைப் பார்த்த பின்னர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஒதுக்கீட்டு முறைமை சட்டரீதியாக்கப்பட்டமையால் அரசியல் கட்சிகள் விரும்பியோ, விரும்பாமலோ பெண்களை உள்ளாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆரம்பத்தில் தனக்கு இது வாய்ப்பளித்ததாகவும் 31 வயதில் தான் அரசியலுக்குள் நுழைந்ததாகவும், தனது ஆரம்பகால அரசியல் செயற்பாடுகள் பற்றி காயத்ரி எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
காயத்ரி விக்கிரமசிங்க
தொடர்ந்து, அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் பற்றி, பல்வேறு பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்றதன் பின்னரே, தான் விளங்கிக்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.
“தமிழ் பெண்கள் அரசியலில் அதிகளவாக இல்லாத நிலையில் நான் வாக்கு சேகரிக்க மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்ற போது, மக்கள் என்னை மிகவும் வரவேற்றனர். குறிப்பாக, பெண்கள் என்னிடம் பேசியதை வசதியாக உணர்ந்தார்கள். அவர்கள் மனம்விட்டு அவர்களின் பிரச்சினைகளை என்னிடம் கூறினார்கள்” என்கிறார் காயத்திரி.
இதேவேளை, ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்களே பதிவாகியிருந்தாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் பெண் பிரதிநிதிகளுக்கு எதிரான வன்முறைகளும் உள்ளன. பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பிரதான கட்சியொன்றின் பெண் அமைப்பாளரை, மதுபோதையில் தொலைபேசி ஊடாக நபரொருவர் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண், பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதுடன், பொலிஸார் முன்னிலையில் குறித்த பெண் அமைப்பாளரிடம் சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்புக் கோரியுள்ளார். அதையடுத்து, பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, அந்நபர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற பல காரணங்களால் பெண்கள் அரசியலில் இருந்து ஒதுங்குகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். 2018ஆண்டு, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக ஆட்சி வலுப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடையாக உள்ள காரணங்கள் குறித்து வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதில் முதன்மையாக உள்ள விடயம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியது போன்ற சமூகத்தின் எதிர்மறையான கண்ணோட்டம்தான்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு எதிராக பரவலாகக் காணப்படுகின்ற வன்முறைகள், குடும்ப கடமைகள், பொருளாதார வளங்களுக்கான மட்டுப்படுத்தப்படல்கள் , ஆணாதிக்க கட்சி அரசியல் மற்றும் மத, பாரம்பரிய கலாசார தடைகளும் முக்கிய காரணங்களாக உள்ளன.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு பொருளாதார விடயங்களும் தாக்கம் செலுத்துகின்றன. தொழிலின்மை, வறுமை மற்றும் பெறுகின்ற வருமானம் குடும்பத்தை கொண்டு செல்வதற்கு போதாமையால் ஆண்களை விட கூடுதலாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலைமையில் அரசியல் போன்ற பொது செயற்பாடுகளில் ஈடுபடுவதிலும் பார்க்க பெரும்பாலான பெண்களுக்கு குடும்பத்தைக் கொண்டு செல்வதற்காக வாழ்கையைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.
சிறுபான்மை கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபையின் உறுப்பினராக செயற்பட்ட பெண் உறுப்பினர் இம்முறை போட்டியிடாது ஒதுங்கினார். எனினும், இதற்கான காரணம் அல்லது கருத்து குறித்து வெளிப்படுத்த கணவன் அனுமதிக்கவில்லை எனக் கூறுகின்றார்.
“வேட்பாளர்களுக்கான வட்டாரத்தை தெரிவுசெய்வதற்காக கட்சி உயர்மட்டத்தால் நேர்முகத் தேர்வு முன்னெடுக்கப்பட்டது. அதில் நீங்கள் தமிழ் பெண் என்பதால், கேட்கின்றோம். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? காரணம், தமிழ் பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் கணவனுக்கு விரும்பம் இல்லையெனக் கூறி விலகிச் செல்வார்கள். அதனால் தான் கேட்கின்றோம்” எனக் கேட்டார்கள். அதற்கு, “நான் திருமணம் செய்யவில்லை. ஒரு வேளை திருமணம் செய்ய வேண்டி வந்தால், அப்போது கணவனுக்கு நான் அரசியலில் ஈடுபடுவது விரும்பம் இல்லை என்றால், நான் கணவனைத்தான் விவாகரத்து செய்வேன்” என்று கூறியே தனக்கான அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன்” என்கிறார் நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத பெண் வேட்பாளர்.
பெண்கள் வீட்டு வன்முறை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் வேலைவாய்ப்பு சமத்துவம் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். பெண் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைகளை நேரடியாக உணர்ந்தவர்களாக இருப்பதால், அதற்கு சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாறான பிரச்சினைகள் குறித்து ஆண் அரசியல்வாதிகள் அறிந்து இருந்தாலும் கூட அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க விரும்புவதாகத் தெரியவில்லை. அதனை செய்திருந்தால் இன்று இந்தப் பிரச்சினைகள் இருந்திருக்காது.
அதேபோன்று, பெண்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகிச் செல்வதற்கும் ஒரு சில பிரதான ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையும் காரணமாக அமைவதை அவதானிக்க முடிகின்றது. தேர்தல் காலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சிக்குத் தான் சென்றிருந்த போது, அதில் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த எதிரணி ஆண் வேட்பாளர்கள் அனைவரும் தன்னை தாக்குவதையே இலக்காக்கிப் பேசியதாக பெண் வேட்பாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அந்நிகழ்வை நெறியாழ்கை செய்தவர்கள் அதனைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும், அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான தடைகள், இடையூறுகள் காரணமாக ஊடகங்களுக்கு முன்னால் சென்று காத்திரமான விடயங்களைக் கூட பேசுவதற்கு தன்னை போன்ற பெண் வேட்பாளர்கள் தயங்குவதாகக் கூறிய அவர், அதிகாரத்தில் உள்ள ஒரு சில தரப்பினரின் செய்பாடுகள் ஒட்டுமொத்த பெண் வேட்பாளர்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அவர் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் பலரை, இந்தக் கட்டுரைக்காக நேர்காணல் செய்ய முயற்சித்த போதும் பலர் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்த முன்வரவில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் ஊடகங்களிடம் இருந்து தாம் விலகியிருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலைமையைதான் மாற்றியமைக்க அனைவரும் முன்வர வேண்டும். அரசியலமைப்பின் ஊடாக அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதும், அரசியல் என்று வந்துவிட்டால் பெண்கள் ஓரங்கட்டப்படுவதுடன், பல்வேறு வழிகளில் அவர்கள் முடக்கப்படுகின்றனர்.
பெண்கள் அரசியலில் அதிகமாக இடம்பிடிக்கும்போது, இளம் பெண்களுக்கு முன்மாதிரிகள் கிடைப்பதுடன், பாலின பாகுபாடு மற்றும் பழைய மரபுகள் உடைக்கப்படுகின்றன. பெண் தலைவர்கள் மக்களின் நலனுக்காக அதிகம் பணியாற்றுவதாக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்போது, இலங்கையின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் துரித முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பாக அமையும்.
ஷ்ரீன் சரூர்
இவ்விடயம் குறித்து கருத்துரைத்த பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் சரூர், தற்காலத்தில் பெண் அரசியல்வாதிகள், நியாயமற்ற ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக ஊழல்கள் குறித்து அதிகார மட்டத்தைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பெண்களை பேசவிடாமல் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் கட்சிமட்டத்துக்குள் அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றார். பெண்கள் பேசா மடந்தையாக இருக்க வேண்டும் எனக் கட்சித் தலைமைகள் எதிர்பார்ப்பதாகவும் இவ்வாறாக தமது உறவினர் பெண்களை ஒதுக்கீட்டு முறைக்காக கொண்டுவர கட்சி ஆணாதிக்கவாதிகள் எப்போதும் முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
“அரசியல் மற்றும் நிர்வாக சட்டங்கள் குறித்த பயிற்சிநெறிகளுக்கு பெண்களை அனுப்பமாட்டார்கள். அவர்களுக்கு வரும் வாய்ப்புகளையும் தடுத்துவிடுகின்றனர். கட்சிக் கூட்டங்களிலும், கட்சிகள் குறித்த ஊடக மாநாடுகளிலும் பெண்களை பேச அனுமதிப்பது இல்லை. நடப்பு பாராளுமன்றத்தில் 22 பெண்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட ஒரு சிலருக்கே உரையாடுவதற்கு நேரம் ஒதுக்கப்படுகின்றது. இவர்களில் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்ட ஒருவரைத் தவிர ஏனைய அனைத்துப் பெண்களும் தேர்தல் களத்தில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று வந்தவர்கள். அமைச்சர், பிரதியமைச்சர்களாக இருக்கும் பெண்களும் கூட அவர்கள் துறை சார்ந்த விடயங்களை ஊடகங்களில் பேசுவதில்லை. என்னதான் பெண்களை உயர்மட்டங்களுக்கு அனுப்பிவைத்தாலும் அவர்களை ஆணாதிக்க கட்சிக்குள் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்” என்கிறார் ஷ்ரீன் சரூர்.
எம்முடன் பேசிய சமூக செயற்ப்பாட்டாளர் ஷ்ரீன் சரூர் கூறிய, “சிறுபான்மைக் கட்சிகளில் பெண் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது உள்ளூராட்சி மன்றங்களிலாவது அதிக பெண்களை உள்ளீர்த்து எதிர்காலத்தில் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகளை சிறுபான்மை கட்சிகள் கண்டிப்பாக முன்னெடுக்கவேண்டும்” என்ற முக்கிய விடயத்தை இங்கு கருத்தில்கொள்ள வேண்டும்.
அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியன இலங்கை உட்பட ஜனநாயக நாடுகளின் அரசியலமைப்புகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சர்வஜன வாக்குரிமை போலவே அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான உரிமையும் ஆண் – பெண் இருசாராருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இதற்கு அரசியலில் பெண்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன், அரசியல் கட்சிகளின் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் உள்ள பதவிகளுக்கு பெண்களை நியமிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
“பெண்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். 25 சதவீத ஒதுக்கீடு வழங்கியதன் முக்கிய நோக்கமே, தொடர்ச்சியான முறையில் அரசியலில் பெண்களை பலப்படுத்தி, உள்ளூராட்சியில் இருந்து மாகாண சபைக்கும், பாராளுமன்றத்துக்கும் அனுப்பிவைப்பதற்குத்தான். இந்த ஒதுக்கீடு முறை எப்பவுமே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு காலத்திற்குப் பிறகு இல்லாமலும் போய்விடலாம். எனவே, அரசியலில் அடிமட்டத்தில் இருந்தே பெண்களை பலப்படுத்த வேண்டும்” என்கிறார் ஷ்ரீன் சரூர்.
திடமான அரசியல் நிலைப்பாடு, சிக்கலான விடயங்களுக்கு இலகுவாக தீர்மானம் எடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதில் பெண்கள் மிகுந்த ஆளுமை மிக்கவர்களாக காணப்படுகிறார்கள். அந்த ஆளுமைகளுக்கு நாம் சந்தர்ப்பம் கொடுக்கும்போது, நிச்சயமாக ஓர் ஆரோக்கியமான அரசாங்கத்தை உருவாக்கலாம்.
ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சம உரிமை என்பதைக் குறிக்கிறது. ஆனால், இலங்கை மக்கள்தொகையில் 52% பெண்கள் இருந்தும், பாராளுமன்றத்தில் 10%க்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கேற்பு என்பது கட்டாயத் தேவையாகும். அதிகரித்த ஒதுக்கீடுகள், அரசியலில் ஈடுபடுவதற்கான தடைகளை நீக்குதல் மற்றும் பெண்களுக்கு அரசியல் பயிற்சி வழங்குவது போன்ற முயற்சிகள் மூலம் இலங்கையை ஒரு சமத்துவமான, முன்னேறிய நாடாக உருவாக்கலாம். பெண்களின் குரல் அரசியலில் கேட்கப்படாவிட்டால், ஒருபோதும் முழுமையான ஜனநாயகம் கைகூடாது என்பதை இந்த இடத்தில் சொல்லி வைக்கலாம்.
ப.பிறின்சியா டிக்சி