– இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நல்லூர் கிட்டு பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“இனிமேலும் இந்த நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை. இங்கு மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை. அரசியல்வாதிகளுக்கே இனவாதம் தேவைப்படுகின்றது.
திஸ்ஸ விகாரையை மையமாகக் கொண்டு பிரச்சினை ஒன்று காணப்படுகின்றது. திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை இலகுவாக முடிவுக்குக் கொண்டு வர முடியும். இந்தப் பிரச்சினையில் தலையிடும் வடக்கு அரசியல்வாதிகள் விலக வேண்டும். இதை வைத்து தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் இனவாத அரசியல் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அரசியலை நீக்கினால் இந்தப் பிரச்சினைக்கு இலகுவாகத் தீர்வு காண முடியும்.
திஸ்ஸ விகாரையில் இருக்கும் பிக்குமார்கள், மதத் தலைவர்கள், காணி உரிமையாளர்கள் இணைந்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியும். ஆனால், சிலர் இனவாத அரசியலுக்காக இதனைத் தடுக்கின்றனர். மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் செயற்படாது.
இந்த நாட்டில் எந்தவொரு தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெற்றால் அதனைச் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. தொல்லியல் சான்றுகள் எங்கள் நாட்டின் வரலாற்று மரபுரிமையாகவே பார்ப்போம். இனவாதிகள் இவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்.
இனவாதத்தைக் கையிலெடுத்து இந்த நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றார்கள். நாட்டில் எந்த விதத்திலும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம். இனவாதத்தைத் தோற்கடிக்க அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.” – என்றார்.