பட மூலாதாரம், PMK
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவர் நீக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பொதுக்குழு தீர்மானத்தின் படியும், தேர்தல் ஆணைய உத்தரவின் படியும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே கட்சியின் தலைவர் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறினார்.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி அதற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரிடமிருந்து விளக்கம் கேட்டிருந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவருக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அன்புமணி எந்த பதிலும் அளிக்காத நிலையில், மீண்டும் அவருக்கு பதிலளிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அன்புமணியிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் இன்று காலை அறிவித்திருந்தார்.
பட மூலாதாரம், PMK
“கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல்தலைவர் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி நீக்கப்படுவதால் கட்சிக்கு பின்னடைவா என்று சிலர் கேட்கின்றனர். பயிரிடும் போது களைகள் வரும், அதை அகற்றிட வேண்டும், இப்போது களை நீக்கப்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் பேசினார்.