2
அரசியல் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்கும் நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று (15) திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி இராணுவச் சட்டத்தை அறிவித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என Yonhap செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கிளர்ச்சியில் ஈடுபட்டதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவரைக் கைதுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
இன்று புதன்கிழமை காலை நூற்றுக்கணக்கான பொலிஸார், யூனின் வீட்டை நோக்கி ஏணிகளுடன் கம்பியை வெட்டும் சாதனங்களுடன் சென்றதை வெளியாகியுள்ள வீடியோக்கள் காட்டுகின்றன.
மலைப்பகுதியில் இருக்கும் வீட்டுக்குள் அவர் பல வாரங்களாக தங்கியிருந்துள்ளார். ஜனாதிபதி பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அவருக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தற்காலிகத் தலைவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யூனின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் மூண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
யூனைக் கைது செய்ய 3,200 பொலிஸார் சென்றதாக தென்கொரிய பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
தென் கொரியாவில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.