• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது – ஜனாதிபதி

Byadmin

Nov 19, 2025


இனவாதத்திற்கு நாட்டில் மீண்டும் எந்த இடமுமில்லை. அது இறந்த கால வரலாற்றுக்குரியது. தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது இந்த நாட்டின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒருபோதும் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் நேற்று (18) பங்கேற்று உரையாற்றியபோது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு:

“பாதுகாப்பு அமைச்சு  மற்றும் பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீது விவாதம் நடைபெறும்  இந்த நேரத்தில், அந்த இரண்டு அமைச்சுக்களும் நம் நாட்டில் பல பணிகளில்  முக்கிய பங்களிப்பை வழங்குவதால்  சில விடயங்களை முன்வைக்க எதிர்பார்க்றேன்.

குறிப்பாக, நம் நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாத போக்குகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டதை நாம் அறிவோம். வரலாற்றில், ஊழலுக்கு எதிரான சக்திகளால் நம் நாட்டில் அரசாங்கங்கள் வீழ்ந்தன. ஆனால், நம் அரசாங்கத்தின் மீது அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.

மேலும், 1994இல் அன்றிருந்த  அரசாங்கம் ஜனநாயகம் சார்ந்த விடயம் காரணமாக வீழ்ச்சியடைந்தது. அது  தொடர்பிலும்  எமது அரசாங்கத்தின் மீது  குற்றம் சாட்ட முடியாது. அண்மைக் காலங்களில் அரசாங்கங்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக சரிந்தன. இந்த அரசாங்கத்தை அதற்காகவும் குற்றம் சுமத்த முடியாது. எனவே, இந்த தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகளுக்கு எந்த பாதகமான கோசமும் எஞ்சியில்லை. எனவே, தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் நோக்கம் இனவாத சூழ்நிலைகளை உருவாக்குவதாக மாறிவிட்டது.

எனவே,  சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய சமூக அமைதியின்மை குறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும். சில துறைகளில், அதனுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும். திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை குறித்து அறிக்கை அளிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நான் அறிவித்துள்ளேன்.

மேலும்,  இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே பொலிஸுக்கு கொண்டுவரப்பட்டது என்று சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருக்கும் குறிப்பில், தெளிவாக உள்ளது. ஆனால்,  இந்த புத்தர் சிலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்படுவதால், இந்த மோதல் பொலிஸாருக்கும் அந்த இனவாதக் குழுக்களுக்கும் இடையே தான் ஏற்படும். எனவே, புத்தர் சிலை மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. அதற்கு முன், நேற்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு குறித்த இடத்திற்கு அனுமதிப்பத்திரம்  வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த இடம் விகாரையாக அழைக்கப்பட்ட போதும் அண்மைக் காலங்களில் இந்த இடம் விகாரையாகப் பயன்படுத்தப்படவில்லை. ஒரு உணவகமாகவே இந்த இடம்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

உணவகத்தில் சட்டவிரோத நிர்மாணப் பணிகள் இருப்பதால் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அகற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், பொலிஸ்  மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தங்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிக்குகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கால அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், இந்த சம்பவம் 16ஆம் திகதி ஏற்பட்டது. மதஸ்தலமொன்றை அமைப்பதைப் போன்றே இதற்குப் பின்னால் மற்றொரு விவகாரமும் இருப்பதாகத் தெரிகிறது.  இந்த இடத்தில் பிக்குவுக்கு உரித்தான காணியொன்று இருந்தது. ஆனால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடம் இருக்கவில்லை. அதுதான் உண்மையான நிலைமை. சம்பந்தப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான அளவீடு செய்ய, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவும் விகாரைக்குச் சொந்தமான காணியை தனித்தனியாக பெயரிட் வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் பழைய வழக்கின் பிரகாரம்  இங்கு புதிய நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனவும் ஏற்கெனவே  உள்ள நிர்மாணங்களை அகற்றக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு  வழங்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, விகாரைக்குச் சொந்தமான காணி ஒதுக்கப்பட்ட பிறகு தொடர்புடைய பணிகளைச் முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பிரச்சினை தற்போது நிறைவடைந்துவிட்டது.

சந்தர்ப்பவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தீ வைப்பு தான் தற்போது நடந்திருக்கிறது. ஆனால் நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த நாட்டில் பழைய இனவாத நாடகங்களை யாராவது மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது  இறந்த வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமோ எதிர்காலமோ அல்ல. நமது நாட்டின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படமாட்டாது.தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பாதுகாப்பு அமைச்சென்ற வகையில், எந்தவொரு பாதுகாப்புப் படையும் நமக்கு எந்த வகையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் தயார் நிலையில் இருக்கிறதுஎன்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

இலங்கையில் மீண்டும் பாரிய  உள்நாட்டுப் போர் சூழ்நிலைகள் ஏற்படாது என்று நாங்கள்  எதிர்பார்க்கிறோம். மேலும் எந்தவொரு மேற்கத்திய நாடும்  ஆக்கிரமிக்கும் நிலைமை எதுவும் இல்லை. தொழில்நுட்பத் துறை, சைபர்  வெளி மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எங்கள் இராணுவ  பொறிமுறையை தற்போது தயார் செய்து வருகிறோம்.

எங்கள் கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்கும் எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது, மேலும் அதற்கு ஒரு அச்சுறுத்தல் உள்ளது. எங்கள் வான்வெளியின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப எங்கள் இராணுவத்தை நாங்கள் தயார் செய்து வருகிறோம். எனவே, நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட இராணுவத்தை உருவாக்குவது எங்கள் அரசாங்கத்தின் கொள்கையாகும்.

கடந்த காலத்தில், எங்கள் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு எமக்கு அதிகளவில்  சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து சுமார் 70 ஜீப்புகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.  எங்கள் இராணுவத்தை மிகவும் திறமையான  இராணுவமாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு அகடமி ஒன்றை அமைப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான ஆதரவும் கிடைத்துள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா எங்களுக்கு TH 57 வகை 10 ஹெலிகொப்டர்களை உதவியாக வழங்க உடன்பட்டது.

மேலும், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில்   C130 விமானங்கள் இரண்டை எங்களுக்கு வழங்க அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. KA 360 எனப்படும் Beechcraft ஒன்றையும், இரண்டு KK 350 Beechcraft ஏற்கனவே அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவியாகப் பெறப்பட்டுள்ளன. எங்கள் விமானப்படை ஹெலிகொப்டர் படை கணிசமாக பலவீனமடைந்துள்ளது. 10 புதிய ஹெலிகொப்டர்கள் கிடைக்கவுள்ளன. தற்போதுள்ள ஹெலிகொப்டர்களைப் புதுப்பிப்பதற்கான டெண்டர்கள் கோரப்பட்டு அனைத்தும் தயாராக உள்ளன. எனவே, நாங்கள் ஒரு சிறந்த நவீன மற்றும் திறமையான இராணுவத்தை உருவாக்கியுள்ளோம். இது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.

நல்லிணக்கம் தொடர்பான ஒரு பிரச்சினை பற்றி நான் சொல்ல விரும்புகிறேன். இது ஒன்றோடொன்று தொடர்புபட்டதாக நான்கு கட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று உண்மை தேடல். என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. உண்மையை விசாரிப்பதற்கான இந்த வழிமுறையை அமைக்க நாங்கள் தயார். அடுத்தது, நீதிக்கான தேடல். குற்றவாளிகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நாங்கள் தயங்க மாட்டோம்.   நீதியை நிலைநாட்டுகையில் இராணுவம் மீதான வேட்டை போன்ற முன்னைய கருத்தாடல் மீண்டும் வர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் 11 மாணவர்களைக் கடத்தி கொலை செய்ததாக கடற்படை அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யுத்தத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதில் கடற்படை முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், அதில் ஈடுபடாத 11 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடென்ற வகையில் நாம் அந்தக் குற்றச்சாட்டிற்காக என்ன செய்யவேண்டும்? முழு கடற்படையும் பலியிட வேண்டுமா? அல்லது அந்தக் குற்றச்சாட்டிற்கான சரியான குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டுமா? கடற்படையின் நற்பெயரைப் பாதுகாக்கவும், அந்தப் பதினொரு பேர் காணாமல் போனதை விசாரிக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம். இந்த விடயத்தில் கடற்படையின் எந்த அதிகாரிகளும் இதை எதிர்க்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் ஏன் தாமதம் என்று சிலர் கேட்கலாம்? சிலர் கைது செய்யப்படுவதைத் தடுக்க ரிட்  உத்தரவுகளை பெறலாம். இருந்தாலும் நாம் அவர்களுக்கு அதற்காக வாய்ப்பளிப்போம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. விசாரணைகள் மிகவும் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். இதை ஒருபோதும் இராணுவம் மீதான வேட்டையாக  கருதக்கூடாது.

மேலும், இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுகள் சில கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை அப்படியே வைத்திருந்து இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு ஒரு கரும்புள்ளியைச் சேர்க்க வேண்டுமா? அல்லது குற்றச்சாட்டு உண்மையா என்று விசாரித்து அந்தக் குழுவைத் தண்டிக்க வேண்டுமா? இது தொடர்பிலான பொறிமுறைகள் உள்ளன.

நடைமுறைகளுக்கு புறம்பாக நடக்கும் சம்பவங்கள் உள்ளன. ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அவை  தெளிவாக வெளியிடப்பட வேண்டும். அதற்காக நமக்கு ஒரு வலுவான புலனாய்வுப் பிரிவு இருக்க வேண்டும். இருப்பினும், அந்த புலனாய்வுப் பிரிவின் நற்பெயரில் பொதுமக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களைப் பார்த்தால், பலருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை சர்வதேச சமூகம், பொதுமக்கள் மற்றும் அந்த நிறுவனங்கள் முன் தூய்மையாகவும் நற்பெயரைப் பெறுவதற்கு உதவுவது நமது பொறுப்பு. லசந்த கொலை குறித்து நாங்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம்.

இந்தக் கொலை நடந்த நேரத்தில் நமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், அவர்கள் இன்னும் சிறையில் இருந்திருப்பார்கள். இந்தக் கொலை தொடர்பில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆனால் நாங்கள் அது தொடர்பில் விசாரித்து வருகிறோம். இந்த நிறுவனங்களின் ஒழுக்கத்தையும் நற்பெயரையும் பாதுகாப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பு. குறிப்பாக தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைகள் தொடங்கியுள்ளன. சில கடற்படை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளைத் தேட வேண்டாமா?அண்மையில் நான் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் நிலைப்பாட்டை வினவினேன். இது  விபத்தா? அல்லது கொலையா? விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற தகவல்களின் படி  இது ஒரு கொலை என்பதை உறுதியாகியுள்ளன.  இந்த விடயங்களை விசாரிக்கும்போது, இதை படைவீரர் வேட்டை என்று கூறவேண்டாம்.

எக்னெலிகொட கொலை மற்றும் கடந்த காலத்தில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நாம் விசாரிக்க வேண்டும். தற்போது  விசாரணைகள் தொடங்கியுள்ளன.  நீதிமன்றத்தில்  இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய  கருத்துக்கள் மட்டும் போதாது. விசாரணைகளை நீதிமன்றத்தில் தான்  நடத்துகிறோம். குற்றங்களை உறுதிப்படுத்த ஆதாரங்கள் தேவை. தொலைபேசி அழைப்புகள் மூலமான தொடர்புகள் இருந்தால், அது பற்றிய தகவல்கள் தேவை. நாம் அடையாளம் காணவேண்டிய பிரதான சூத்திரதாரி கொலையாளி அல்ல. ஈஸ்டர் தாக்குதலை அதே வேகத்துடன் விசாரித்திருக்க வேண்டும். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. பின்னர், கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் குழுக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றது. அதிகாரம் சென்ற பிறகு, நிறைய ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. புத்தகங்களின் பக்கங்கள் கிழிக்கப்பட்டன. நாட்டில் அண்மையில் நடந்த எந்தவொரு கொலைக்கும் மூன்று நாட்களுக்குள் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு வந்ததால், இலங்கையில் முதல் முறையாக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளில் சுமார்  500 பேருக்கு  தடை போடப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள சில அதிகாரிகள் நீக்கப்பட்டனர்.  ஷானி அபேசேகர சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நிறுவனங்கள்  வீழ்த்தப்பட்டன, விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைகளை நடத்துவது கடினமாக உள்ளது.இருப்பினும், எங்கள் விசாரணைக் குழு மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்த விசாரணையை முறையாக நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று எனக்குத் தெரியும்.

நீதியை நிலைநாட்டுவதை  பலிவாங்கலாகக் கருத  வேண்டாம். இந்த விசாரணைகள் அனைவருக்கும் நியாயமான முறையில் நடத்தப்படுகின்றன. யாருக்கும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. நாங்கள் உண்மையைத் தேடுவதையும் நீதியை தேடுவதையும் முறையாகச் செய்கிறோம். அண்மையில் இரண்டு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுக்கு  ஆணைக் குழுக்களை  நியமிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளின்படி விசாரணைக் குழுக்களை நியமித்தோம். அந்த விசாரணைகள் தவறு என்று யாரும் கூற முடியாது. நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். மூன்றாவதாக, ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால், நாங்கள் இழப்பீடு வழங்குகிறோம்.  அண்மையில் புலனாய்வு அமைப்புகள் ஒரு தொகை தங்கத்தை   கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அவற்றின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். தற்போது, அவற்றின் உரிமையாளர்களைக் தேடிப்பிடிக்க முடியவில்லை.

அவற்றை பணமாக மாற்றி அந்தப் பகுதி மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இவற்றுக்கு நாம் நீதியை நிலைநாட்ட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான  திறன் நம்மிடம் மட்டுமே உள்ளது. நாங்கள் அதைச் செய்து வருகிறோம்.

எமது நாட்டில் இனவாத மோதல்கள் மீண்டும் ஏற்பட நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நியாமாக அரசியலில்  தலையிடு செய்வதற்கான அந்த மக்களின் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஒருபுறம், இனங்களுக்கு இடையே மோதல்களை உருவாக்கிய நாடு இது. இனங்களுக்கு இடையேயான மோதல்கள் எரிமலையைப் போன்றவை என்பதால் அதனை தண்ணீரை ஊற்றி அணைக்க முடியாது. நீண்ட காலமாக  இனங்களுக்கு இடையே வெறுப்பும் சந்தேகமும் இருந்து வந்தது.  ஒரு சிறிய தவறு கூட நடக்க விடாமல் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த டிசம்பரில் இன நல்லிணக்கத்திற்காக இலங்கை தினத்தை கொண்டாட இருக்கிறோம். அனைத்து  இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளைச் சந்தித்து இந்த திட்டத்தைப் பற்றி  ஆராய எதிர்பார்க்கிறோம். அதனை நடத்தினால் பார்த்துக் கொள்வோம் என யாரோ சொல்லியிருக்கிறார்கள். வந்தால் பார்த்துக் கொள்கிறோம் என்று  நான் சொல்கிறேன். வடக்கு மக்களுக்கும் தெற்கு மக்களுக்கும் கலாசார பரிமாற்றங்கள் தேவையில்லையா? எனவே, இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப எங்கள் இராணுவமும் நாங்களும் ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளோம். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் பொலிஸாரும் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இப்போது அவர்கள் பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது குற்றம் சாட்டி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள். அவர் மீது ஏன் குற்றம் சாட்டப்படுகிறது?

நம் நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்க அவர் இரவு பகல் பாராது உழைக்கிறார். அவர் மக்களின் நண்பன். யாருக்கு அவர் எதிரி?  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது பாரிய விமர்சனங்களை முன்வைப்பதை  நான் அவதானித்தேன். அது தவறு. அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரிகள். அவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக துணிச்சலாக செயல்படுகிறார்கள். அவர்கள் இந்த கொலைகள் மற்றும் குற்றங்களைக் கண்டுபிடிக்க துணிச்சலாக செயல்படுகிறார்கள். அப்படியானால் அத்தகையவர்களை வீழ்த்த இவர்களுக்கு தேவைப்படுகிறது.   நீங்கள் ரவி செனவிரத்னவை விமர்சிப்பதென்பது   குற்றவாளியின் பக்கம் இருப்பதை குறிக்கிறது. ஊழல்வாதிகளின் பக்கம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பக்கம். அதுதான் உண்மையான கதை. அவர்கள் எப்படி எதிரிகளாக இருக்க முடியும்?

அடுத்து, ஷானி அபேசேகர எப்படி எதிரியாக இருக்க முடியும்? எனக்குத் தெரிந்தவரை, ஷானி விசாரணை செய்த  அனைத்து விசாரணையும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பற்றி  தெரிந்தவர்கள் இவர்கள்.

உடதலவின்ன விவகாரத்தில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராஜகிரியவில் நடந்த ரோயல் பார்க் சம்பவத்தில்  தொடர்புபட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மைத்ரி அவரை விடுவித்தார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான முக்கிய விசாரணைகளை நடத்தும் ஒரு அதிகாரி அவர். புதியவர்களுக்கு பயிற்சி அளிக்க இதுபோன்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நமக்குத் தேவை. அவர்கள் எதற்கும் தலைசாய்க்காதவர்கள்.

இவர்கள் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தங்களை அர்ப்பணித்தவர்கள். அவர்களை நாம் பாதுகாக்கிறோம். நாம் அதைச் செய்யக்கூடாதா? ஆனால் இன்று ஏன் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது? விசாரணைகள் தமது பக்கம் திரும்பும் போது  ஷானி ஒரு குற்றவாளியாகிறார்.

அடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவின் ரங்க திசாநாயக்க மீது பாரிய  குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.நமது  நாட்டில், நமக்கு ஒரு துணிச்சலான  அரச சேவை தேவை. இன்று, இந்த அதிகாரிகள் அதற்கு தலையிடுகிறார்கள். ஒரு பாராளுமன்றத்தின் பொறுப்பு என்ன? முழு பாராளுமன்றமும் சேர்ந்து அந்த அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும்.  ஒரு நாட்டின் தேசிய பொறுப்பு அங்கு தான் உள்ளது.

ஆனால், நீங்கள் இங்கே என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? அவர்கள் தைரியமாக வேலை செய்தால், அவர்கள் ஒழுக்கமாக வேலை செய்தால், அவர்கள் ஊழலில் ஈடுபடவில்லை என்றால், அந்த அதிகாரிகளை வீழ்த்துவது தான் இவர்களின் நோக்கம். இந்த பாராளுமன்றம் அத்தகைய திறமையான, துணிச்சலான அதிகாரிகளைப் பாதுகாக்க ஒரு பொதுவான கூட்டுச் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும்.  நீங்கள் உங்கள் பணியைச் சரியாகச் செய்யுங்கள். கடமையிலும் வெளியேயும் அவர்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் முன்நிற்கிறோம்.

அடுத்து, உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு யார் ஆளாக நேரிடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.  பொலிஸ் மா அதிபர் தான் அது. அடுத்து, சி.ஐ.டி.யில் பணியாற்றும் கரவிட்ட. நீங்கள் செய்த மோசடிகள், ஊழல்கள் மற்றும் குற்றங்களை பின்தொடர்கையில், அவர்களை பின்தொடர்வது தான் ஊழல் குற்றவாளிகளின் பணியாக உள்ளது. அதனை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எழுபதுகளின் பிற்பகுதியையும் எண்பதுகளின் முற்பகுதியிலும், கிராமங்களில் பொதுவாக குண்டர்கள் இருந்ததை நாம் அறிவோம். சட்டவிரோத மதுபானம் தயாரித்து கஞ்சா விற்கும் சாதாரண போதைப்பொருள் வியாபாரிகள் இருந்தனர். அந்த குண்டர் சிறைக்குச் சென்றபோது, கிராமமே சுதந்திரமாக இருந்தது. சமூகமும் அவர்களை வெறுத்தது. அவர் ஒரு திருமணத்திற்கோ அல்லது விழாவிற்கோ அழைக்கப்படமாட்டார், அவர் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவராக மாறினார்.

ஆனால், இந்த குண்டர்கள் பின்னர் அரசியலுக்கு வந்தார்கள். குறிப்பாக 1977 இல் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஒவ்வொரு எம்.பி.யும் அவரை நண்பராக்கிக் கொண்டது. அங்குதான் அவருக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கத் தொடங்கியது.   அவர் அரசியல் பாதுகாப்புடனான ஒரு குண்டர் ஆனார். அவர் முதலில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. அதன் பின்னர் உலகில் ஒரு பெரிய போதைப்பொருள் விநியோக வலையமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் போதைப்பொருள் வலையமைப்பில் நுழைந்தனர். இப்போது அவர்களிடம் அரசியல் அதிகாரம் உள்ளது. அவர்கள் போதைப்பொருள் வர்தகத்தில்  நுழைந்தார்கள். போதைப்பொருட்களிலிருந்து அதிக அளவு பணம் கிடைக்கத் தொடங்கியது. இந்தப் பண உருவாக்கத்தின் மூலம், அவர்களால் அரச பொறிமுறையை வாங்க முடிந்தது.  சமூக மரியாதையைப் பெறத் தொடங்கியது.  சமூகப் பாதுகாப்பும் கிடைத்தது.

அவர்கள்  பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கத் தொடங்கினர்.  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ,சுங்கம் என்பவற்றுக்கு லஞ்சம் வழங்கத் தொடங்கினர். அரசு இயந்திரமும் அதனுடன் இணைந்தது. அவர்கள் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர். அதன்படி, பணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு வர்த்தக வலையமைப்பு உருவாக்கப்பட்டது. சில தொழிலதிபர்கள் ஊடகங்களில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர்.

இது வெறும் குண்டர் வலையமைப்பிலிருந்து  வோறொரு வலையமைப்பாக வளர்ந்துள்ளது. அரசியல் அதிகாரம், போதைப்பொருள் வியாபாரி, ஆயுதமேந்திய குற்றவாளி, ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் மற்றும் ஊடக வலையமைப்பு. ஊடக வலையமைப்புடனான தொடர்பை புலனாய்வு  பிரிவுகள் விரைவில் நமக்கு வெளிப்படுத்தும்.

இது வெறும் போதைப்பொருள் வியாபாரி அல்லது வெறும் குண்டர் என்ற நிலையில் அன்றி ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. சில ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒரு சர்வதேச உறவு நிறுவப்பட்டுள்ளது.  ஹைட்டியின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இது போதைப்பொருட்களுக்கு எதிரான படுகொலை என்று தகவல் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் ஒரு பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் படுகொலை செய்யப்படுகிறார். சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் போராட்டங்களை உருவாக்குகிறார்கள்.

தற்போது பெருமளவான கைதுகள்  மேற்கொள்ளப்படுகின்றன.  முன்னர் இந்த வலையமைப்பு அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டது. சில இளவரசர்கள் கூட்டங்களில் உரையாற்றும் போது, ஜூலம்பிட்டிய அமரே பாதுகாப்புக்காக அங்கு இருந்ததை நான் அறிவேன். தங்கள் பாதுகாப்பிற்காக இந்த பாதாள உலகத் தலைவர்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.

அதேபோல், எங்கள் தோழர் நளிந்த ஜெயதிஸ்ஸ கட்டுவனவில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.  அதை  செய்தவர் ஜூலம்பிட்டிய அமரே.  இந்த தேவையற்ற அதிகாரத்தால், போதைப்பொருள், ஏனைய போதைப்பொருட்கள், பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆயுதமேந்திய குற்றக் கும்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.   இந்த சூழ்நிலையை நாம் தோற்கடிக்க வேண்டும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என  முழு சமூகமும் இதற்கு பலியாகிவிட்டது. அதனால்தான் நமக்கு ஒரு தேசிய நடவடிக்கை தேவைப்பட்டது. இது ஒரு அரசாங்க செயல்பாடு அல்ல. யார் ஆட்சியில் இருந்தாலும், போதைப்பொருட்களையும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களையும் அழிக்க வேண்டும். இதற்காக, எங்கள் பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் பாடுபடவேண்டும்.

இன்று பொதுமக்கள் இதற்கு பெரும் ஆதரவை வழங்குகிறார்கள். இருப்பினும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இதற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இந்த செயல்முறைக்கு எதிராக எந்தவொரு அரசியல் கட்சியும் செயல்பட பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நீண்ட காலமாக இதை ஆசீர்வதித்து ஆதரித்த அரசியல் பொறிமுறையை பொதுமக்கள் அழித்துவிட்டனர். இதுபோன்ற நாசகரமான நடவடிக்கைகளுக்காக இதுபோன்ற அரசியல் இயக்கங்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிக்கக் கூடாது என்பதே எங்கள்  எதிர்பார்ப்பாகும்.

எனவே, ஆபத்து எங்கே இருக்கிறது என்பதை நாங்கள் கணித்து வருகிறோம். அந்த கணிப்புகளின்படி திட்டங்களை உருவாக்கும் ஒரு சட்டபூர்வ பொறிமுறை எங்களிடம் உள்ளது. அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இன்று, பாதுகாப்புச் செயலாளரை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். முன்பிருந்த பாதுகாப்புச் செயலாளர்களிடம் அமைச்சர்கள் சென்று மண்டியிட்டனர். அத்தகைய நாட்டில், இன்று, எதிர்க்கட்சி ஆளும் கட்சியைச் சேர்ந்த எவரும் எந்த நேரத்திலும் பாதுகாப்புச் செயலாளரிடம் பேசலாம். பொலிஸ்மா  அதிபரும் அப்படித்தான். எனவே, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சு மற்றும்   பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், இந்த நாட்டில்  பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர்கள் செய்து வரும் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். வேறு எந்த வேலையையும் விட, அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர்.  பழிவாங்கப்படலாம் என்ற சந்தேகத்துடன் வேலை செய்கிறார்கள்.இந்த நாட்டில் ஓய்வுக்குப் பின் வாழ முடியுமா என்ற பயத்துடன் வேலை செய்கிறார்கள்.  அரசாங்கமென்ற வகையில்  நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம் என்று நாங்கள் அனைவருக்கும் கூறுகிறோம்.அவர்கள் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது நாட்டில் அரசப பாதுகாப்பையும் பொதுமக்கள்  பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், பாதாள உலகம், குற்றம் மற்றும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும், ஒரு சிறந்த நாட்டைக்  கட்டியெழுப்புவதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

By admin