• Mon. Jan 19th, 2026

24×7 Live News

Apdin News

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே – பிரதமர்

Byadmin

Jan 19, 2026


தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமானவையல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே என பிரதமர்  ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கான விஜயத்தின் ஓர் அங்கமாக, நேற்று (17) புத்தளம் ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தைப் பார்வையிடச் சென்றபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அதிபர் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

விஞ்ஞானப் பாடம் மட்டுமல்லாது ஏனைய அனைத்துப் பாடங்கள் தொடர்பாகவும் பிள்ளைகளுக்கு அறிவு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், பிளவுகளைக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிள்ளைகளுக்காகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டும் எனவும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனைகளைப் பாடசாலை மட்டத்தில் கூட்டு முயற்சியாகக் கலந்துரையாடித் தனக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகளாகப் பிரிந்து நின்று பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க இயலாது எனவும், எப்போதும் பிள்ளைகளின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம். ஆயினும் எமக்கு முன்னால் தற்போது ஒரு சிறந்த எதிர்காலம் உருவாகியிருக்கின்றது. எனவே, இதற்கு மேல் அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தீர்மானங்களை எடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

பல்வேறு திறமைகளைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதே சிறந்தது என்பதால், ஒரு பாடத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத, அனைத்துத் துறைகள் குறித்தும் அறிவுமிக்க பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்பதையும் பிரதமர் இங்கே வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக குமார, அஜித் கிஹான், முஹம்மது பைசல் மற்றும் ஹிருணி விஜேசிங்க ஆகியோருடன் புத்தளம் நகர முதல்வர், வடமேல் மாகாணக் கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

 

The post அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே – பிரதமர் appeared first on Vanakkam London.

By admin