• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

அரசியல் பழிவாங்கல்களைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை | மஹிந்த

Byadmin

Aug 24, 2025


அரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் தலைவர்கள் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நீங்கள் அரசியலில் ஈடுபட்டால், அது உங்கள் வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி. தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலைக் கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறொன்றும் இல்லை. மக்கள் அரசியல் தலைவர்களை தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், “நாம் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை  (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை (23) காலை சென்றிருந்தார். இதனையடுத்தே மஹிந்த ராஜபக்ஷ  மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin