0
நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக மீறல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் சகல கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை (23) அவசர ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.