கோவை: “அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை. பாஜகவை திட்டுவதையே நோக்கமாக கொண்டுள்ளனர்,” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று (மார்ச் 8) சென்னைக்கு புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளரும் தெளிவாக கூறி இருக்கிறோம். அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை. விவாதத்துக்காக நான் கூறியதையும், அதிமுக பொதுச் செயலாளர் கூறியதையும் பரபரப்புக்காக திரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜகவின் நிலையை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதிமுகவை பற்றி அதன் பொதுச் செயலாளர் தெளிவாக பேசியுள்ளார். நான் தொலைக்காட்சிளில் வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்த விவாதங்களைப் பார்ப்பதில்லை. விவாதங்களில் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கலந்து கொண்டு, பாஜகவை திட்டுவதையே சிலர் நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை. அவர்களுக்கு திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் குறிக்கோள்.
எது போன்ற கூட்டணி வர வேண்டும் என அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கின்றனர். அப்படி என்றால் நானும், எடப்பாடி பழனிசாமியும் எப்படி அதைப்பற்றி தொடர்ந்து பேச முடியும். பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால், விவாதங்களில் விமர்சனம் என்ற பெயரில் அமர்ந்து பேசுபவர்களுக்கு கள நிலவரம் என்ன தெரியும். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பத்திரிகையில் ஒரு பத்தி செய்தி எழுதுகிறார்கள். அதை தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும்?” என்று அவர் கூறினார்.