• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி | Respect the Supreme Court verdict and make temporary employees permanent Anbumani demands Tamil Nadu government

Byadmin

Aug 22, 2025


சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும்.

உத்தரப் பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது.

அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கண்டனமும், அறிவுரைகளும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடியவை.

பணியாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் சுரண்டக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘வேலை வழங்கும் விஷயத்தில் அரசுகள் வெறும் சந்தைப் பங்கேற்பாளர்கள் அல்ல; மாறாக, அவை அரசியல் சட்டப்படியான வேலை வழங்கும் அமைப்புகள். அரசு அலுவலகங்களில் அடிப்படையான பணிகளை தொடர்ந்து செய்யும் அவர்களின் முதுகில் அரசின் நிதிப்பற்றாக்குறை என்ற சுமையை சுமத்தக்கூடாது. தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்த்து விட்டு, அவர்களிடமிருந்து நிரந்தரமான ஊழியர்களுக்கான வேலைகளை காலம் காலமாக பிழிந்தெடுப்பது பொது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதுடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தையும் பாதிக்கிறது’’என்றும் அறிவுறுத்தினர்.

அந்த பணியாளர்கள் அனைவரையும் 2002ஆம் ஆண்டு முதல் பணி நிலைப்பு செய்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் உண்மை.

தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தற்காலிக நியமனங்களை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனவோ, அவற்றில் பாதி, அதாவது கிட்டத்தட்ட 50% தற்காலிக நியமனங்கள் ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய வாடிக்கையாகவும், கலாச்சாரமாகவும் திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர்; அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர்.

மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை குப்பையில் வீசி விட்டு, தற்காலிக ஊழியர்களை சுரண்டும் பணியில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் இந்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.

தற்காலிக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தங்களுக்கு பணிநிலைப்பு வேண்டும் என்று போராடிய போதெல்லாம் அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதையும், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையும் தான் திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அரசுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை படித்தாவது திமுக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்; பின்பற்ற வேண்டும்.

அரசுத்துறைகளில் பகுதி நேரப்பணிகள், ஒப்பந்தப்பணிகள், தற்காலிக அடிப்படையிலான பணிகள் போன்றவை அதில் ஈடுபடுவோரை சுரண்டுவதுடன், அவர்களின் கண்ணியத்தையும் குலைக்கின்றன. எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்



By admin