சென்னை: விடுமுறைக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் நிறைவடைந்து, தற்போது முடிவுகளும் வந்துவிட்டன. 2025-26-ம் கல்வியாண்டுக்கான பள்ளி திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஏழை, நடுத்தர மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கின்றனர். காமராஜரின் எண்ணங்கள் நிறைவேற, கல்வி அனைவருக்கும் தரமானதாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும்.
தமிழக அரசு மாநிலங்கள் முழுவதும் பள்ளி விடுமுறையின்போது கல்வி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மூலம் பள்ளிக் கட்டடங்களின் தகுதி மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து, உரிய சான்று அளிக்க வேண்டும். பழுதடைந்த கட்டடங்களை இடித்து, புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் வகுப்பறையில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வு செய்து, பாராமரிக்க வேண்டும்.
மாணவா்களின் கல்வியின் தரமும், தோ்ச்சி விகிதமும் அதிகாிக்க வேண்டுமென்றால், தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் மற்ற ஆசிரியர்களுக்கு பணிச் சுமை ஏற்படுகிறது. இது ஆசிரியர்களை மட்டுமல்ல, மாணவர்ளையும் பெரிதும் பாதிக்கும். ஆகவே, நிரப்பபடாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தனியார் பள்ளிகளில் உள்ள பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை பள்ளி விடுமுறை காலத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, அவற்றின் தகுதிக்கு ஏற்பு தரச் சான்று வழங்க வேண்டும். ஒட்டுநா்களுக்கு பாதுகாப்புக்கான உபயிற்சியை அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.