சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015-ம் ஆண்டு இறுதி முதல் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாத ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்.1-ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு 18 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 9 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை ஓய்வூதியம் உயரும்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் டி.கதிரேசன் கூறியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு செப்.1-ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு 36 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 16 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டியிருக்கிறது.
அதேநேரம், அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு 4 ஊதிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதற்கான தொகையும் வழங்கப்படவில்லை.
அந்த வகையில் ஓய்வூதியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அடிப்படை ஓய்வூதியத் தொகையில் உயரும். இதன் மூலம் அகவிலைப்படியும் உயரும். இவ்வாறு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான ஏராளமான தொகையை வழங்காமல் அரசு மறுப்பது ஏற்புடையதல்ல. இவற்றின் மீது விரைந்து நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.