6
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர், பொதுப் பதவியில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை வளையத்திற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெர்க்ஷயரில் உள்ள ஆண்ட்ரூவின் முன்னாள் இல்லமான ராயல் லாட்ஜில் (Royal Lodge), காவல்துறை அதிகாரிகள் இன்றும் (20) தங்கள் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர். முன்னதாக, அவர் வசித்து வரும் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் மற்றும் பெர்க்ஷயரில் உள்ள இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) இரகசிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் புகார் குறித்து தேம்ஸ் வேலி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும், எப்ஸ்டீன் தொடர்பான எந்தவொரு தவறான செயலையும் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இதேவேளை, தனது தம்பியின் கைது குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த மன்னர் மூன்றாம் சார்லஸ், “சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த விசாரணைக்கு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோரும் மன்னரின் இந்த நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிகிறது.
நவீன வரலாற்றில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்பு 1647ஆம் ஆண்டில் மன்னர் முதலாம் சார்லஸ் தேசத்துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய ஆண்ட்ரூ, தற்போது சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டிற்குத் திரும்பியுள்ளார். அவர் பிணையில் விடுவிக்கப்படவில்லை என்றாலும், பொலிஸ் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தவோ அல்லது மீண்டும் கைது செய்யவோ வாய்ப்புள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் ஆண்ட்ரூவின் மகள்களான இளவரசி பீட்ரைஸ் மற்றும் இளவரசி யூஜினி ஆகியோர் தார்மீக ரீதியாகப் பாதிக்கப்படலாம் என்றாலும், அவர்கள் தொடர்ந்து அரச குடும்ப அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள் என்று அரச குடும்ப நிபுணர்கள் கருதுகின்றனர்.