ஆவுடையார்கோவில் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தீயணைப்பு நிலைய புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில், அரசு ஒப்பந்தததாரரை திமுக முன்னாள் எம்எல்ஏ அரிவாளைkd காண்பித்து மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள பூங்குடியில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
அப்போது, அங்கு வந்த திமுக முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், அடிக்கல் நாட்டு விழாவுக்கு தன்னை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டு, அங்கிருந்த அரசு அலுவலர்கள், கட்சியினரை கடிந்துகொண்டார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி, அரிவாளை கொடுத்து தேங்காயை உடைக்குமாறு கேட்டுக் கொண்டனர். பிறகும் சமாதானம் அடையாத அவர், விழா குறித்து தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று அரிவாளை காட்டி அங்கிருந்த ஒப்பந்ததாரரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அடுத்தடுத்து சர்ச்சை: அறந்தாங்கி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக எஸ்.டி.ராமச்சந்திரன் (திருநாவுக்கரசர் மகன்) இருக்கும் நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கக்கூடாது என்று அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உதயம் சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ முன்னிலையில் ஒப்பந்ததாரரை அவர் அரிவாளால் மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.