பட மூலாதாரம், Navya nair/Facebook
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
அபராதத்தைச் செலுத்துவதற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். விமானத்தில் மல்லிகைப் பூவை அணிந்து செல்வதில் என்ன சிக்கல்? ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது?
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மெல்போர்ன் சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அதில், ‘நான் மெல்போர்ன் வருவதற்கு முன்பு என் தந்தை மல்லிகைப் பூவை வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொடுத்தார்’ எனக் கூறியுள்ளார்.
’15 செ.மீ மல்லிகைப் பூ, 1.14 லட்ச ரூபாய்’
பட மூலாதாரம், Navya nair/Facebook
கொச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் நேரத்தில் மல்லிகைப் பூ வாடிவிடும் என்பதால் ஒன்றை தலையிலும் இரண்டாவது பூவை கைப்பையில் உள்ள கேரி பேக்கிலும் வைக்குமாறு தனது தந்தை கூறியதாக, நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
“15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்” என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
“நான் அறியாமையில் செய்திருந்தாலும் அதை ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. பூ கொண்டு வந்தது சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இதை வேண்டும் என்றே செய்யவில்லை. இதற்கான அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர்” எனவும் நவ்யா நாயர் கூறியுள்ளார்.
விக்டோரியா மாகாணத்தில் நடந்த ஓணம் திருவிழாவில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட நவ்யா நாயர், “ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மல்லிகைப் பூவை தலையில் அணிந்திருக்கிறேன்” என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
பூ, பழங்களுக்கு தடை ஏன்?
பட மூலாதாரம், Navya nair/Facebook
“ஆஸ்திரேலியாவுக்கென்று தனித்தன்மை வாய்ந்த சூழலியல் உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பூ, பழம், விதைகள் உள்ளே நுழைந்துவிட்டால் தங்கள் நாட்டின் சூழல் மாறிவிடும் எனக் கருதுகின்றனர்” எனக் கூறுகிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. இவர் கடந்த 22 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வர்த்தகம் செய்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” விமானம் மூலம் பழங்கள் (Fresh Fruits) மற்றும் காய்கறிகளைக் கொண்டு வர அனுமதியில்லை. பூ கொண்டு வருவதை அனுமதிப்பதில்லை. நெய்யால் தயாரிக்கப்பட்ட பொருள் எதையும் கொண்டு வரக் கூடாது என்பது விதியாக உள்ளது” எனவும் குறிப்பிட்டார்.
“ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் உணவு வாங்கி சாப்பிட்டாலும் மீதமான உணவை விமானத்தில் கொண்டு வரலாம். ஆனால், குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்குச் செல்வதற்கு முன்பாக அதனை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்” எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.
ஆஸ்திரேலிய நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகளை எல்லைப் படை அதிகாரிகள் (Australian Border Force) எனக் கூறுகின்றனர். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகளின் உடைமைகைளை ஆய்வு செய்கின்றனர்.
பட மூலாதாரம், Jayachandran Thangavelu Handout
ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் சொல்வது என்ன?
தங்கள் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள், தண்டனைகளை தவிர்ப்பதற்காக கொண்டு வரக் கூடிய மற்றும் கொண்டு வரக் கூடாத பொருட்கள் குறித்த பட்டியலை (studyaustralia.gov.au) அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
* அனைத்து உணவு, தாவரப் பொருட்கள் மற்றும் விலங்கு பொருட்கள்
*துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்
* சில வகையான மருந்துகள்
* ஆஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பில் 10 ஆயிரம் டாலர்கள்
– இதனை வருகை அட்டையில் (incoming passengers Arrival card) தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டு அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரி பாதுகாப்பு (bio security) என்ற பெயரில் கொண்டு வரக் கூடாத பொருட்களையும் ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி,
* புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்
* கோழி இறைச்சி, பன்றி இறைச்சி
*முட்டை, பால் பொருட்கள்
* தாவரங்கள் அல்லது விதைகள்
– ‘இவை ஆஸ்திரேலியாவில் பூச்சிகள் மற்றும் நோய்களை அறிமுகப்படுத்தி தனித்துவமான சூழலை அழிக்கக் கூடும்’ என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ‘நாட்டின் உள்ளே வரும் பயணிகள் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் அறிவிக்க (Declare) வேண்டும்’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அவ்வாறு அறிவிக்கவில்லையென்றால் 5,500 ஆஸ்திரேலிய டாலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்’ எனக் கூறியுள்ள அந்நாட்டு அரசு, ‘விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் நாட்டில் இருந்து புறப்படும் வரை காவலில் வைக்கப்படலாம்’ எனவும் கூறியுள்ளது.
இதனைத் தவிர்க்கும் வகையில், ‘தங்களின் உடைமைகள் குறித்து எல்லைப் படை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கலாம்’ எனவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
‘பூ கொண்டு வரத் தடை…ஆனால்?’
” ஆஸ்திரேலியாவுக்குள் விமானம் மூலம் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மல்லிகைப் பூ விற்கப்படுகிறது” எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.
“ஒரு முழம் மல்லிகைப்பூ 40 டாலர் வரை விற்கப்படுகிறது. அதையும் தமிழர் ஒருவர் தான் இறக்குமதி செய்து விற்று வருகிறார்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பூக்களை இறக்குமதி செய்யும்போது தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. பூவின் தன்மை, சாகுபடி விவரம், பயன்படுத்தப்பட்ட உரம் என அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழுடன் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
‘மோப்ப நாய்கள் மூலம் சோதனை’
‘கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை நாட்டின் உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்வது சட்டவிரோதம்’ என அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, ‘போதைப் பொருள் அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தன்மையைக் கண்டறிய பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன’ எனக் கூறியுள்ளது.
இதைப் பற்றி பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் ஜெயச்சந்திரன் தங்கவேலு, “சில பொருட்களை அறிவிக்காமல் கொண்டு வரும்போது மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்துவார்கள். இதற்காக பயணிகளை வரிசையாக நிற்க வைப்பது வழக்கம். தற்போது இதை அனைவருக்கும் செய்வதில்லை” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து, விமான நிலையத்துக்குள் நுழைந்த பிறகு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை அவர் பட்டியலிட்டார்.
சோதனை நடைமுறைகள் என்ன?
” ஆஸ்திரேலிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரலாம். ஆனால், அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது அவற்றை அறிவிக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
“விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது கிரீன் சேனல், ரெட் சேனல் என இரண்டு நுழைவாயில்கள் இருக்கும். பயணிகள், அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு வருவதைப் பொறுத்து அதிகாரிகள் சேனலை முடிவு செய்கின்றனர்” எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.
“கிரீன் சேனல் என்றால் எந்தவித சோதனையும் இல்லாமல் வெளியில் சென்றுவிடலாம்” எனக் கூறும் அவர், “ரெட் சேனலாக இருந்தால் கொண்டு சென்றுள்ள அனைத்து பொருட்களையும் சோதனை செய்வார்கள். அதில், திருப்தியடைந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்” என்கிறார்.
தடை செய்யப்பட வேண்டிய பொருளாக இருந்தால் பயணியின் அனுமதியுடன் அதை குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
” அவ்வாறு எறிவதற்கு பயணி எதிர்ப்பு தெரிவித்தால், அந்தப் பொருளை தனிமைப்படுத்தி (quarantine) செய்து வேறொரு துறைக்கு அனுப்புவார்கள். பிறகு ஒருநாள் அதற்குரிய அதிகாரியை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருவார்கள்” எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.
அப்போதும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அந்தப் பொருள் குப்பைத் தொட்டிக்கு சென்றுவிடும் என்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘மண் ஒட்டியிருந்தால் கூட அபராதம் தான்’
பட மூலாதாரம், Ashok Raja Handout
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா.
உயிரி பாதுகாப்பு என்பதை மிக முக்கியமானதாக ஆஸ்திரேலிய அரசு கருதுவதாகக் கூறும் அவர், “மாறுபட்ட புவியியல் மற்றும் உயிரினங்கள் உள்ளதால் எந்தவித உயிரினங்களோ பொருட்களோ ஊடுருவிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்” என்கிறார்.
ஆஸ்திரேலியாவில் தனது உறவினர் ஒருவர் கிரிக்கெட் மட்டையை எடுத்துச் சென்றபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் அசோக் ராஜா, “கிரிக்கெட் மட்டையில் மண் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணமாக கூறினர். எந்த நாட்டின் மண்ணும் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன” எனவும் தெரிவித்தார்.
“செருப்பு அணிந்து செல்லும்போது அதில் மண் எதுவும் ஒட்டியிருக்கக் கூடாது. தங்கள் நாட்டு மண்ணை வெளிநாட்டு மண் கெடுத்துவிடக் கூடாது என்பது தான் அடிப்படையான நோக்கம்” என்கிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு.
தற்காத்துக் கொள்வது எப்படி?
” ஒரு நாட்டில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பற்றி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் கூற மாட்டார்கள். விமான நிலையத்தில் இறங்கியதும் உறுதிமொழி படிவத்தில் அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தகவல்களைத் தெரிவித்துவிட்டால் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார், முன்னாள் விமானி அசோக் ராஜா.
“ஒரு பொருளை அறிவிக்காமல் கொண்டு வந்தால் முதல்முறையான தவறாக இருந்தால் மன்னிப்பு அல்லது அபராதம் விதிப்பார்கள்” எனக் கூறும் ஜெயசந்திரன் தங்கவேலு, “இது அந்தந்த அதிகாரிகளைப் பொறுத்தது. சிலர் மன்னிப்பு மட்டும் வழங்குவார்கள். தொடர்ந்து தவறு நடந்தால் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகள் வரை செல்லும்” என்கிறார்.
” உடைமைகளைக் கொண்டு செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதைக் கொண்டு சென்றாலும் நூறு சதவீதம் அதனை வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் எல்லைப் படை அதிகாரிகள் உதவுவார்கள்” எனக் கூறுகிறார், ஜெயசந்திரன் தங்கவேலு.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு