மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களால் அர்ச்சகர்கள் தட்டில் போடப்படும் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய கோயில் செயல் அலுவலர் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, கோயில்களில் திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்தல், கோயில் சொத்துகளை மீட்டெடுத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோயிலுக்கு உபயதாரர் நிதி ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பிப்.9-ம் தேதி 7 கோயில்களுக்கும், 10-ம் தேதி 69 கோயில்களுக்கும் என தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை 2,580 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அர்ச்சகர்கள் பணி வரன்முறை செய்யப்படாமல் இருந்தபோது, பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே சிறு பிரச்சினைகள் ஏற்பட்டன. தொடர்ந்து, அப்போதைய ஆணையர் குமரகுருபரனால் அர்ச்சகர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனர். அதன்பின்னர், அர்ச்சகர்கள் ஒன்றுகூடி, பக்தர்களிடம் இருந்து வருகின்ற காணிக்கையை உண்டியலில் செலுத்துவதென்று முடிவெடுத்து செயல்படுத்தி வந்தனர்.
அதில் ஏற்பட்ட சிறு பிரச்சினையின் காரணமாக கோயிலின் செயல் அலுவலர், தக்காரின் அனுமதி பெறாமல் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை தேவையில்லாதது. அதுகுறித்து துறையின் கவனத்துக்கு வந்தவுடன் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் அது திரும்ப பெறப்பட்டுவிட்டது. அதேபோல், செயல் அலுவலர் மீது விசாரணை மேற்கொள்ளும்படி இணை ஆணையரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.