சென்னை: “அறநிலையத் துறையின் கணக்குகள் வெளிப்படையாக இல்லை என்று குற்றம்சாட்டுகிறேன். இதற்காக 2 முஸ்லிம்களுக்கு துறை நிர்வாகியாக பொறுப்பு கொடுக்க முடியுமா? அதேபோல்தான், வக்பு வாரியத்தில் மட்டும் 2 இந்துக்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?” என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்துக்கு என்ன தனித்த குணத்தை திமுக காட்டிவிட்டது. மத்திய அரசோடு கூட்டணியில் இருந்துவிட்டு, மாநில தன்னாட்சி குறித்து பேசுவது சரியா? இந்தியை திணித்தது காங்கிரஸ். இதை எதிர்த்து நாடு முழுமைக்கும் தமிழன்தான் போராடினான். பின்னர், அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது திமுக.
தேர்தல் வரும்போது தமிழ், தமிழர், தமிழகம் மீது தனி காதல் திமுகவுக்கு வரும். இந்த வார்த்தைகளுக்கு மயங்கும் கூட்டம் இப்போது இல்லை. அறிவும் தெளிவும் அரசியல் புரிதலும் கொண்ட தமிழ்ச் சமூகம் எழுந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிதியைத் தராத மத்திய அரசுக்கு மாநில வரியை தரமாட்டேன் என்றால் அது ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’, ஆனால் வரியை கொடுத்துவிட்டு நிதியை தரவில்லை என புலம்புவது ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ அல்ல ‘அண்டர் கன்ட்ரோல்’.
அறநிலையத் துறையின் கணக்குகள் வெளிப்படையாக இல்லை என்று குற்றம்சாட்டுகிறேன். இதற்காக இரண்டு முஸ்லிம்களுக்கு துறை நிர்வாகியாக பொறுப்பு கொடுக்க முடியுமா? அதேபோல்தான், வக்பு வாரியத்தில் மட்டும் இரண்டு இந்துக்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?
வரும் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவேன். கூட்டணி ஆட்சி அமைக்க விரும்புவது எதிர் தரப்பின் பலவீனத்தால் கிடையாது. ஆனால் அதை நிராகரிக்கும் திமுக, அதிமுக மத்தியில் மட்டும் பதவி வாங்கிக் கொண்டு ஏன் அமர்கிறார்கள். நாடெங்கும் ஒரே கொள்கைதான் இருக்க வேண்டும். என்னிடம் அதிமுக என்ன பேசியதோ அதையேதான் தவெகவிலும் பேசியிருக்கக் கூடும். துணை முதல்வர் பதவி தர முடியாது என சொல்லியிருக்க வாய்ப்பில்லை” என்று சீமான் கூறினார்.