பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாக தோன்றும் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி விழுந்து இறப்பதை பற்றிய செய்திகள் அவ்வப்போது வருகின்றன. திருமண வீட்டில் மகிழ்ச்சியோடு நடனமாடியவர் மரணம், வாகனம் ஓட்டியபடி சொந்த வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் சுருண்டு விழுந்து பலி என செய்திகளை படிக்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர், வாகனம் ஓட்டும்போதே மாரடைப்பால் உயிரிழந்தார், கண்டக்டரின் துரிதமான செயல்பாட்டால் பேருந்து விபத்து தவிர்க்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், மேற்கு தாம்பரத்தில் 20 வயது பொறியியல் மாணவர், கல்லூரி விடுதியில் மயங்கி விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
இதய கோளாறு காரணமாக திடீர் மரணங்கள் இளைஞர்களிடையே அதிகமாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். இந்த மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக மாரடைப்பு நோய், மரபியல் காரணி, இதய தசை தடிமனாதல் என பலவிதமானவை உள்ளன. இவற்றில் மிகவும் பரவலாக நடப்பது மாரடைப்பு நோய்தான்.
இவ்வாறான மரணங்கள் அதிகரிப்பதை அடுத்து, கர்நாடகா மாநில அரசு திடீர் மரணங்களை, குறிப்பாக 45 வயதுக்கு உட்பட்டோரின் மரணங்களை அறிவிப்புச் செய்ய வேண்டியதாக, அறிவித்துள்ளது. இதன் பொருள், மருத்துவமனைக்கு வெளியே இத்தகைய மரணங்கள் நடந்தால், அவற்றை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மரணங்களுக்கு சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை செய்ய வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் இந்த புதிய முடிவு இந்தியாவில் இவ்வாறான முதல் முயற்சியாகும்
மாரடைப்பு நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இளைஞர்கள் திடீரென்று அதனை எதிர்கொள்கிறார்கள். அதற்கு காரணமாக உள்ள வாழ்க்கை முறை சார்ந்த நான்கு அம்சங்களை பார்க்கலாம் என்கிறார் சென்னையில் உள்ள இதயவியல் மருத்துவரும், பேராசிரியருமான ரெஃபாய் ஷெளகதலி. அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொடர் மன அழுத்தம்
இதய பாதிப்புகளுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
தினசரி வேலையிலோ அல்லது வீட்டிலோ கோபப்படுவது, பதற்றம் ஏற்படுவது இயல்பானது தான். அது பிரச்சனையல்ல. ஆனால் ஒரு விசயத்தைப் பற்றி தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பது, தொடர் கவலைக் கொண்டிருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
தொடர் மன அழுத்தம், உடலில் கார்டிசால் மற்றும் அட்ரீனலின் ஆகிய ஹார்மோன்களை சுரக்கக் செய்யும். இவை அதிக அளவில் சுரக்கும் போது, அது ரத்த நாளங்களை சேதப்படுத்தும், ரத்தக்கட்டு உருவாகும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இருதய பாதிப்புகளுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
வயிற்றுப்பகுதி பருமன்
வயிற்றுப்பகுதி பருமன் என்பது ஆங்கிலத்தில் abdominal obesity எனப்படுகிறது. வயிறு, கல்லீரல், குடல் உள்ளிட்ட உறுப்புகளை கொண்ட நெஞ்சுக்கு கீழ், இடுப்பு எலும்புக்கு மேல் உள்ள பகுதி ஆங்கிலத்தில் abdomen எனப்படுகிறது. உடலில் எல்லா பகுதிகளும் அல்லாமல், வயிற்றுப்பகுதி மட்டும் பருமனாக இருப்பது பிரச்னைக்கான அறிகுறியாகும். அப்படி பருமனாக இருந்தால் அந்தப் பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு அருகில் கொழுப்பு சேர்கிறது என்று அர்த்தம். இது எதிர்காலத்தில் மாரடைப்பு உட்பட இதய கோளாறுகளுக்கு இட்டுச் செல்லும் முக்கிய காரணியாகும்.
மேல் வயிறு-இடுப்பு சுற்றளவு விகிதம், வயிற்றுப்பகுதி பருமனின் முக்கிய குறியீடாக உள்ளது. மேல் வயிற்றின் சுற்றளவை, இடுப்பின் சுற்றளவு கொண்டு வகுக்கும் போது, மேல்வயிறு-இடுப்பு விகிதம் (Waist-Hip Ratio) என்பது கிடைக்கும். இது ஆண்களில் 0.9க்கு அதிகமாகவும், பெண்களில் 0.85க்கு அதிகமாகவும் இருந்தால், அவர்களுக்கு வயிற்றுப்பகுதி பருமன் இருப்பதாக கருதப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மேல் வயிறு-இடுப்பு சுற்றளவு விகிதம், வயிற்றுப்பகுதி பருமனின் முக்கிய குறியீடாக உள்ளது.
தூக்கமின்மை
தூக்கம் சமீப காலம் வரை முக்கியமான விசயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, ஆனால் இனியும் அப்படியான நிலை இல்லை. நான்கு மணி நேரம் தூங்கினாலே என்னால் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று கூறுபவர்கள் இருக்கலாம். அவ்வாறாக சிலர் விதிவிலக்கானவர்கள். அதே சமயம், பெரும்பாலான மக்கள் தொகையை எடுத்துக் கொள்ளும் போது ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியமாகிறது. இதற்கு உலக அளவில் பல ஆய்வுகள் சான்றளிக்கின்றன.
குழந்தைகள் தூங்கும் போது அவர்களின் வளர்ச்சிக்கு காரணமான ஹோர்மோன்கள் சுரக்கின்றன. பெரியவர்களில் மெலடோனின் போன்ற உடலை அமைதியாக்கும் தூக்க ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இரவில் தூங்கும் போது இயல்பாகவே ஒருவரது ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். ஆனால் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால், அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத்துக்கு தேவையான ஓய்வு கிடைக்காது. அதே போன்று ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்தும் இன்சுலின் சுரத்தலிலும் இடர்பாடுகள் ஏற்படும். நாள்பட்ட தூக்கமின்மை இருந்தால், இவை மற்ற காரணிகளுடன் சேர்ந்து மாரடைப்புக்கு இட்டுச் செல்ல வாய்ப்புண்டு.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால், அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, ஒவ்வொரு முறை ரத்தம் பம்ப் செய்யப்படும் போதும், ரத்த நாளங்களில் உள்ள மெல்லிய திசுக்கள் சேதமடைய ஆரம்பிக்கும். இது நாளடைவில் plaque உருவாக வழிவக்கும். Plaque எனப்படுவது கொழுப்பு, சுண்ணாம்பு, செல் கழிவுகள் உள்ளிட்டவை கொண்ட படிமங்கள் ஆகும். இவை ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது இளம் வயதினர், குறிப்பாக 30களில் இருப்பவர்களிலேயே உயர் ரத்த அழுத்தம் அதிகம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகமான உப்பு எடுத்துக் கொள்வது. ஒரு நாளுக்கு சராசரியாக 5 கிராம் அளவுக்கு உப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியர்கள் சராசரியாக 15 முதல் 16 கிராம் உப்பு தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்தல் அதிகமாகியிருப்பதால் இளைஞர்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகமாக உள்ளது.
உடல் அசைவின்மை நாளடைவில் இதய கோளாறுகளுக்கு இட்டுச் செல்லும். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை புகைப்பிடித்தலுக்கு சமம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 10 முதல் 12 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள், பல நேரங்களில் உணவும் கூட அதே இடத்தில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இவ்வாறு இருப்போருக்கு போதிய அளவு உடல் அசையாத போது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, வயிற்றுப்பகுதி பருமன் என எல்லாமும் ஏற்பட வாய்ப்புண்டு. இது metabolic syndrome என்றழைக்கப்படுகிறது. இந்த நோயாளிகளுக்கு மாரடைப்பும், பிற இருதய கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம்.