பட மூலாதாரம், Getty Images
இருண்ட வால் நட்சத்திரங்கள், நமது சூரிய மண்டலத்தில் உள்ள சில விசித்திரமான பாறைகள், சிறுகோள்கள் அல்ல, அவை வால்மீன்களும் அல்ல. ஆனால், இவை இரண்டின் விநோதமான கலவையாகும். “இருண்ட வால்மீன்களை” என்ன செய்வது என்றும் யாருக்கும் தெரியாது.
இருப்பினும், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்மமான விண்வெளிப் பாறைகள் சூரிய மண்டலத்தில் முற்றிலும் புதிய வகைப் பொருளாக இருக்கலாம், அவை பூமியில் நீர் எவ்வாறு தோன்றியது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் என்று அவை குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவை நமது கிரகத்துக்கு இதுவரை அடையாளம் காணப்படாத அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக்கூடும்.
இப்போது இந்த விசித்திரமான பொருட்களைப் பற்றி மேலும் அறிய ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. ஜப்பானிய விண்கலம் ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கு செல்வதால் இந்த அரிய வாய்ப்பு தற்போது நமக்கு கிடைத்துள்ளது. 2031இல் அது அங்கு சென்றடையும்போது, இந்த பொருட்கள் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் உறுதியாகக் கண்டறியலாம்.
2016ஆம் ஆண்டு வானியலாளர்கள் வால் நட்சத்திரம் போல இருக்கும் ஒரு சிறுகோள் என்று நினைத்த ஒன்றைக் கண்டுபிடித்தபோது, இருண்ட வால் நட்சத்திரங்கள் தொடர்பான முதல் குறிப்பு வெளிப்பட்டது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள பரந்தவெளியில் பொதுவாகக் காணப்படும் சிறுகோள்கள், பாறைகள் நிறைந்ததாகவும், செயலற்றதாக இருந்தாலும், வால் நட்சத்திரங்கள் பாறை மற்றும் பனிக்கட்டியால் உருவானவை. அவை மில்லியன் கணக்கான மைல்கள் நீளமுள்ள பெரிய வால்களைக் கொண்டுள்ளன என்பதும், சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்திலிருந்து உருவாகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அது மிகவும் விசித்திரமானது. அதுவொரு வால் நட்சத்திரம் போல நகர்வது போல் தோன்றியது, இருப்பினும் அதன் வழக்கமான பண்புகள் எதுவும் இல்லை. சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, ஈர்ப்பு விசையைத் தவிர வேறு ஏதோ ஒன்றிலிருந்து அவ்வப்போது, திடீரென அது உந்துதலைப் பெறுவது போல் தோன்றியது. இந்த உந்துதலானது, அதன் இயக்கத்தை மிகச் சிறிய அளவில் மாற்றியது. இயக்கங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் (விநாடிக்கு ஒரு மீட்டரின் பின்னங்கள் மட்டுமே), பூமியில் தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும்போது கவனிக்கத்தக்கதாக இருந்தது.
இந்த வகையான “ஈர்ப்பு விசையற்ற முடுக்கம்” என்பது வால்மீன்களுக்கு இயல்பானது. அங்கு பனி, சூரியனை நெருங்கும்போது வேகமாக வெப்பமடைகிறது, இதனால் வாயு மற்றும் தூசி வெளியிடப்படுவதால் இது உந்துவிசை போல செயல்படுகிறது. இருப்பினும், 2016இல் காணப்பட்டதில், புலப்படும் தூசி அல்லது பனிப் பாதை எதுவும் இல்லை, மேலும் அந்தப் பொருள் ஒப்பீட்டளவில் மந்தமானதாகத் தோன்றியது.
அதன்பின்னர் ஒரு வருடம் கழித்து, வானியலாளர்கள் இதேபோல் நடந்துகொள்ளும் மற்றொரு பொருளைக் கண்டனர். 115-400 மீ (377-1,312 அடி) நீளமுள்ள ஒரு சுருட்டு வடிவ பாறை, உலோகம் மற்றும் பனிக்கட்டியின் கட்டிக்கு, ‘ஓமுவாமுவா’ என்று பெயரிடப்பட்டது.
பட மூலாதாரம், ESO/M Kornmesser
பின்னர் 2023ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் டாரில் செலிக்மேன் தலைமையிலான வானியலாளர்கள் குழு, வால்மீன் போன்ற வால்கள் இல்லாத ஆனால் அசாதாரண வேக வெடிப்புகளுக்கு உட்பட்ட, சிறுகோள் போன்ற, சுற்றுப்பாதைகளில் நமது சூரியனைச் சுற்றி வரும் ஆறு ஒத்த பொருட்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது.
இந்த இருண்ட வால்மீன்கள் அனைத்தும், 4 மீ (13 அடி) மற்றும் 32 மீ (104 அடி) அகலத்துக்கு இடையில், விநாடிக்கு ஒரு நானோமீட்டர் வேகத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன. இது மிகச் சிறிய அளவுதான். ஆனால், ஒவ்வொரு சில வருடங்களுக்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து நகர போதுமானது.
கிட்டத்தட்ட அதே நேரத்தில், செலிக்மேனும் அவரது சகாக்களும் 2003 RM எனப்படும் 300 மீ (984 அடி) அகலமுள்ள பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள், ஒரு இருண்ட வால்மீனைப் போல நடந்துகொள்வதைக் காட்டும் ஆராய்ச்சியை வெளியிட்டனர்.
2024 டிசம்பர் மாதத்தில், அவர்கள் இந்தப் பொருள்களைப் பற்றிய இன்னும் பல தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டனர். இதனையடுத்து, சூரிய மண்டலத்தில் அறியப்பட்ட இருண்ட வால்மீன்களின் மொத்த எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது. இருப்பினும், அவற்றின் ஒழுங்கற்ற இயக்கங்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.
“உண்மையில் அதற்கு என்ன காரணம் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என்கிறார் செலிக்மேன்.
பட மூலாதாரம், Alamy
புதிய வகை பொருள்
பெரும்பாலான சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள், 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தில் கிரக உருவாக்கம் நிகழ்ந்த தொடக்க காலத்தின் எச்சங்கள் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர். சில சிறுகோள்கள் ஒருபோதும் கிரகங்களாக ஒன்றிணைக்காத பொருட்களின் துண்டுகளாகும், அதே நேரத்தில், வால்மீன்கள் சூரியனில் இருந்து வெகு தொலைவில் உள்ள பனி மற்றும் தூசியின் விளைவாக உருவாகின்றன.
பொதுவாக இந்த பொருட்களை வல்லுநர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கின்றனர். ஒருபுறம் செயலற்ற சிறுகோள்கள் மற்றும் மறுபுறம் கொந்தளிப்பான வால்மீன்கள், பனியாகவோ அல்லது திடப்பொருளிலிருந்து வாயுவாக மாறியோ, விண்வெளியில் பொருட்களை வெளியேற்றி வியத்தகு வால்களை உருவாக்குகின்றன.
இருண்ட வால்மீன்களின் இருப்பு, இந்த இரண்டு வகையான பொருட்களுக்கும் இடையே எப்போதும் வலுவான பிளவுக்கோடு ஒன்று இருக்காது என்பதைக் குறிக்கிறது. “இது தொடர்ச்சியாக சிறுகோள்கள் மற்றும் வால்மீன்களின் புரிந்துகொள்ளத்தக்க ஒரு பகுதியாகும்” என்று நியூசிலாந்தின் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தின் வானியலாளர் மைக்கேல் பானிஸ்டர் கூறுகிறார். “வரலாற்று பார்வையில் பார்க்கும்போது, ஒரு வால்மீன் என்பது மிகவும் முக்கியமான வால் கொண்ட ஒன்று, மற்றும் ஒரு சிறுகோள் என்பது இறுக்கமான பாறை போன்றது மற்றும் வறட்சியான ஒன்று. இப்போது அது முற்றிலும் மாறிப்போய்விட்டது.”
1996 ஆம் ஆண்டு செயலில் உள்ள சிறுகோள்களைக் கண்டுபிடித்ததன் காரணமாக சிறுகோள் அதன் மேற்பரப்பில் இருக்கும் பொருள் வெளியேற்றப்பட்டு, வால் உருவாகிறது. இந்த “செயல்பாடு” சிறுகோளின் மேற்பரப்புக்கு அடியில் உள்ள பனி மற்றொரு சிறுகோளுடன் மோதுவதன் மூலம் வெளிப்படுவதோ அல்லது அதை உடைக்கும் அளவுக்கு வேகமாகச் சுழல்வதோ காரணமாக இருக்கலாம். பனி வெளிப்படும் போது, வெப்பமடைகிறது, இதனால் பொருள் அதன் மேற்பரப்பில் இருந்து வெடித்து, சிறுகோளை “செயல்பட” வைக்கிறது.
“அவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போல நடந்து கொள்கின்றன” என்று ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் சோலார் சிஸ்டம் ரிசர்ச் அமைப்பில் பணிபுரியும் வானியலாளர் ஜெசிகா அகர்வால் கூறுகிறார், அவர் பல ஆண்டுகளாக செயலில் உள்ள சிறுகோள்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
இருப்பினும், இருண்ட வால்மீன்கள் வேறுபட்டவை. செயலில் உள்ள சிறுகோள்களைப் போல இல்லாமல், அவை அவற்றின் மேற்பரப்பில் இருந்து பொருள் வெளியேற்றப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருப்பினும், அவை தெளிவாக ஒருவித வால்மீன் போன்ற முடுக்கத்துக்கு உட்படுகின்றன.
அவற்றின் முடுக்கம் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அவற்றிலிருந்து வெளியேறும் வெப்பம், அவற்றை வேகமாகச் சுழற்றுகின்றன. இது ‘யார்கோவ்ஸ்கி’ விளைவு என்று அழைக்கப்படுகிறது. “யார்கோவ்ஸ்கி விளைவை விட அவை வேகமாக நகர்வதை நாங்கள் காண்கிறோம்,” என்று அரிசோனாவில் உள்ள லோவெல் ஆய்வகத்தின் வானியலாளர் டெடி கரேட்டா கூறுகிறார்.
இருண்ட வால்மீன்களை நன்கு புரிந்துகொள்ள, நாம் அவற்றை நெருங்க வேண்டும். நல்வாய்ப்பாக, ஒரு முழுமையான தற்செயல் நிகழ்வு அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நிகழவிருக்கிறது, அது சரியான வாய்ப்பைக் கொடுக்கிறது.
பட மூலாதாரம், ESA/ Rosetta/ NAVCAM
தற்செயலான செயல்
2020 டிசம்பரில், ஜப்பானின் ஹயாபுசா2 விண்கலம், 2019ஆம் ஆண்டு ரியுகு என்ற சிறுகோளிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சுமந்துகொண்டு பூமியைத் தாண்டி பறந்தது. அது மாதிரிகள் அடங்கிய ஒரு காப்ஸ்யூலை இறக்கிவிட்டதால், பூமியில் நீர் மற்றும் உயிர்களின் தோற்றம் குறித்த விலைமதிப்பற்ற தகவல்கள் கிடைத்தன. இதனிடையே, முக்கிய விண்கலத்தில் இன்னும் எரிபொருள் மீதமுள்ளதால், ஜப்பானிய விண்வெளி நிறுவனம் ஜாக்சா, அதை 1998 KY26 என்ற சிறுகோளுக்கு செல்வதற்காக விண்கலத்தின் பயணத்தை நீட்டிக்க முடிவு செய்தது.
ஆச்சரியப்படும் விதமாக, செலிக்மேன் மற்றும் அவரது சகாக்களால் அடையாளம் காணப்பட்ட ஆறு இருண்ட வால்மீன்களில் 1998 KY26 ஒன்றாகும். “நீட்டிக்கப்பட்ட பணி திட்டமிடப்பட்ட நேரத்தில் இருண்ட வால்மீன்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது” என்று ஹயாபுசா 2 இன் திட்ட மேலாளரான ஜாக்சாவைச் சேர்ந்த யுச்சி சுடா கூறுகிறார். “இது மிகவும் உற்சாகமானது.”
சில இருண்ட வால்மீன்களைப் போன்ற பண்புகளைக் கொண்டிருந்த 1998 KY26வின் தனித்துவமான பண்புகள் காரணமாகவே ஜாக்சா அதனைத் தேர்ந்தெடுத்தது. அதாவது, ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அதன் விரைவான சுழற்சி மற்றும் அதன் சிறிய அளவு 30 மீ (98 அடி) அகலம் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. ஹயாபுசா 2 வெற்றிகரமாக வந்து சேர்ந்தால், 1998 KY26 உண்மையில் ஒரு விண்கலத்தால் பார்வையிடப்பட்ட மிகச்சிறிய அண்டப் பொருளாக இருக்கும்.
2031ஆம் ஆண்டில் ஹயாபுசா2, 1998 KY26ஐ அடையும். ஆரம்பத்தில், விண்கலம் அதன் இலக்கை விட பல கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் என்று சுடா கூறுகிறார். இங்கிருந்து, அது சிறுகோள் மற்றும் உருகும் பனியின் புகைப்படங்களையும் எடுக்கும். “முடுக்கங்களுக்குக் காரணம் வால்மீன் போன்ற வாயு வெளியேற்றம் என்றால், ஹயாபுசா2 நிச்சயமாக அதைக் கண்டறியும்” என்று செலிக்மேன் கூறுகிறார்.
இந்த பயணத்தின் பிற்பகுதியில், ஹயபுசா2 சிறுகோளை நோக்கி இறங்கி, அதன் மீது தரையிறங்கும் வாய்ப்புகளும் இருக்கக்கூடும் என்று சுடா கூறுகிறார். ரியுகுவிலிருந்து ஒரு மாதிரியைச் சேகரிக்கப் பயன்படுத்திய ஒரு தோட்டா அளவிலான எறிபொருளை சுடும் ஒரு பொறிமுறை உட்பட சில உபகரணங்கள் விண்கலத்தில் இன்னும் உள்ளன.
இது 1998 KY26-இன் மேற்பரப்பை உடைத்து ஒரு சிறிய பள்ளத்தை உருவாக்கி, அடியில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறியக்கூடும். “தாக்கத்தால் வெளியேற்றப்பட்ட துகள்களைக் கண்காணிப்பதன் மூலம், சிறுகோளின் உள் அமைப்பை நாம் மதிப்பிட முடியும்” என்று சுடா கூறுகிறார்.
இன்னும் சிறிது காலத்தில், JWST போன்ற சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் இருண்ட வால்மீன்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தக்கூடும் என்று வானியலாளர்கள் நம்புகிறார்கள். “JWST அற்புதமாக இருக்கும்” என்று கரேட்டா கூறுகிறார், இருப்பினும் செலிக்மேன் முன்பு இருண்ட வால்மீன் ஆராய்ச்சிக்கு தொலைநோக்கியைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பித்ததாகவும், ஆனால் அவை வெற்றி பெறவில்லை என்றும் கூறுகிறார்.
பிற தொலைநோக்கிகள் இன்னும் பயனுள்ளதாக இருக்கலாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு லோவெல் டிஸ்கவரி தொலைநோக்கியை கரேட்டா அணுக முடியும், இது அறியப்பட்ட இருண்ட வால்மீன்களை அவதானிக்க அனுமதிக்கும். “நாங்கள் அவற்றைத் தொடர்ந்து பின்தொடர்ந்து அவற்றின் ஈர்ப்பு விசையற்ற முடுக்கத்தின் வலிமையைப் புரிந்துகொள்வோம்” என்று அவர் கூறுகிறார். சூரியன் அவற்றை வெப்பப்படுத்தும்போது சில பொருட்கள் அடுத்த சில ஆண்டுகளில் பிரகாசிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கரேட்டாவும் அதன் சகாக்களும் எதனால் ஆனவை என்பதை அளவிட அனுமதிக்கும்.
பட மூலாதாரம், Alamy/ Nasa
இந்த ஆய்வுகள் இருண்ட வால்மீன்கள் தொடர்பான சில ரகசியங்களை வெளிப்படுத்தும் என்று உறுதியளிக்கின்றன. ஆனால், இதற்கிடையில், அவற்றைச் சுற்றியுள்ள மர்மம் தொடர்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணரும், செலிக்மேனின் குழுவுடன் இணைந்து பணியாற்றுபவருமான ஆஸ்டர் டெய்லர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, இருண்ட வால்மீன்கள் சிறுகோள் பெல்ட்டில் அவற்றின் மேற்பரப்புக்கு அடியில் பனிக்கட்டியில் இருந்து உருவாகியிருக்கலாம் என்றும், ஆனால் பின்னர் வியாழனின் ஈர்ப்பு விசையால் சூரியனை நோக்கித் தள்ளப்பட்டிருக்கலாம் என்று முன்மொழியும் ஒரு ஆய்வை வெளியிட்டது.
“பின்னர், ஒரு கட்டத்தில் அவை பிரிந்து செல்கின்றன, அதற்குக் காரணம் வேகமாகச் சுழல்வதாலோ அல்லது தாக்கப்படுவதாலோ இருக்கலாம். அது பனிக்கட்டிகளை வெளிப்படுத்தி அவற்றை இருண்ட வால்மீன்களாக மாற்றுகிறது” என்று டெய்லர் கூறுகிறார். இந்த செயல்முறை அத்தகைய பொருட்களை அதிக வேகத்தில் சுழற்றும்.
இரு வகையான இருண்ட வால் நட்சத்திரங்கள்
டிசம்பர் 2024இல் அதிக இருண்ட வால்மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து , இந்த பொருள்கள் இரண்டு வடிவங்களில் வரக்கூடும் என்பதற்கான அறிகுறியும் உள்ளது: வெளிப்புற இருண்ட வால்மீன்கள், அவை சுமார் 100 மீ-1 கிமீ (330-3,300 அடி) அளவுள்ளவை மற்றும் வியாழனுக்கு அருகில் உருவாகின்றன. மற்றும் சிறிய, உள் இருண்ட வால்மீன்கள் 10-20 மீ (30-60 அடி) அளவுள்ளவை, அவை பூமியைப் போன்ற வட்ட சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன.
உட்புற இருண்ட வால்மீன்கள் உடைந்து, அவற்றின் பனியை வெளிப்படுத்தும் சிறுகோள்களாக இருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது, அதே நேரத்தில் அதிக தொலைதூர இருண்ட வால்மீன்களின் இருப்பு மற்றொரு செயல்முறையால் விளக்கப்படலாம். ஒருவேளை, அவை அவற்றின் வாழ்க்கையின் அந்தி நேரத்தில் இருக்கும் இறக்கும் வால்மீன்களாக இருக்கலாம்.
“அவற்றின் வாயு தீர்ந்து போகும் நிலையில் நாம் அவற்றைப் பார்க்கிறோம், இது வால்மீன் செயல்பாட்டின் கடைசி முழுமையான மூச்சு” என்கிறார் கரேட்டா. “இந்தப் பொருட்களின் சில, ஆயுட்காலத்தில் மிகக் குறுகிய கட்டம் என்ன என்பதை நாம் காண்கிறோம்.”
இருண்ட வால் நட்சத்திரங்கள் பனியைக் கொண்ட சிறுகோள்கள் என்றால், பூமிக்கு நீர் எவ்வாறு வந்தது என்ற மர்மத்தை அது தீர்க்க உதவும். சூரிய மண்டல வரலாற்றின் ஆரம்பத்தில் நமது கிரகத்தில் மோதிய சிறுகோள்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் வழியாக நீர் இங்கு வந்தது என்பது பிரபலமான கோட்பாடு. இருண்ட வால் நட்சத்திரங்கள் இந்த சூழ்நிலைக்கு ஒரு நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.
பூமியின் கடந்த காலத்தில் அவற்றின் சாத்தியமான பங்கைத் தவிர, இருண்ட வால்மீன்கள் கிரகத்தின் எதிர்காலத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகத் தோன்றும் ஒரு பொருளை நாம் கண்காணிக்கக்கூடும், ஆனால் அது திடீரென்று நமது கிரகத்தின் திசையில் பாயலாம். “அது நாம் எதிர்பார்க்காத தாக்கத்தை பூமியில் ஏற்படுத்தலாம்” என்று டெய்லர் கூறுகிறார்.
பூமிக்கு அருகிலுள்ள பகுதியில் பல இருண்ட வால் நட்சத்திரங்கள் (ஒப்பீட்டளவில் பெரிய 2003 RM உட்பட) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நல்வாய்ப்பாக தற்போதைக்கு, இருண்ட வால்மீன்கள் ஒப்பீட்டளவில் அரிதாகவே தோன்றுகின்றன, அவை அனுபவிக்கும் வெடிப்புகளிலிருந்து திசையில் சிறிய மாற்றங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவற்றிடம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இந்தப் பொருட்களை நாம் சரியாகக் கண்டறிய முடியாவிட்டால், அவை நம்மைத் தாக்கப் போகின்றனவா என்பதை நாம் அறிய முடியாது” என்று டெய்லர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு