பட மூலாதாரம், Getty Images
எல்லா கண்டுபிடிப்பாளர்களும் அவ்வளவு அதிர்ஷ்ட்டக்காரர்கள் கிடையாது.
சிலர் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக உலகளவில் அறியப்படுகின்றனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு தங்களின் பெயர்களே வைக்கப்பட்டு வரலாற்றில் இடம்பெறுபவர்களும் உண்டு.
ஏகே 47 ரக துப்பாக்கி அதை கண்டுபிடித்தவரான மிக்கல் கலாஷ்னிகோவ்-ன் பெயரால் அறியப்படுகிறது. அதே போன்று, சாக்ஸஃபோனை கண்டுபிடித்தவர் அடோல்ஃப் சாக்ஸ், ‘நான்காம் எர்ல் ஆஃப் சாண்ட்விட்ச்’ என்ற அரச பட்டத்தைப் பெற்றவரின் பெயரால் சாண்ட்விட்ச் என்ற உணவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அதேபோன்று, சிலரது பெயர்களை யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை, ஆனால் அவர்களது கண்டுபிடிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, கேன்களை திறப்பதற்கான ஓபனரை உருவாக்கிய ராபர்ட் யேட்ஸ், தட்டை அடிபாகம் கொண்டு காகித பையைக் கண்டுபிடித்த மார்க்கரெட் நைட் உள்ளிட்டோரை நாம் நினைவில் கொள்வதில்லை.
இந்த இரண்டு பட்டியலில், மேலும் சிலர் உள்ளனர். அவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளினாலேயே தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
அவர்களில் ஐந்து பேரின் கதைகளை தெரிந்துகொள்வோம்.
வானிலிருந்து விழுந்தவர்
பறவைகளை போல பறக்க வேண்டும் என்பது மனிதனின் பழங்கால கனவாகும்.
கிரேக்க புராணங்களில் அறியப்படும் டீடலஸ் எனும் திறமை மிக்க கைவினைஞரும், சிற்பியுமானவர் பறப்பதற்கு ஒரு சாதனத்தை உருவாக்கினார். இறகுகள் கொண்டு இறக்கைகளை செய்து, தான் உருவாக்கிய மெழுகைக்கொண்டு அதை தனது முதுகிலும் அவரது மகன் இகரஸ் முதுகிலும் ஒட்டிக்கொண்டு பறந்தார். இகரஸ் சூரியனுக்கு மிக அருகில் பறந்து சென்றதால் அவரது மெழுகு உருகி, இறக்கைகளை இழந்து வானிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இகரஸை போல வரலாற்றில் பலரும் வானிலிருந்து கீழே விழுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சூரியனுக்கு மிக அருகில் பறந்ததற்காக கீழே விழவில்லை.
பாராசூட், பலூன் போன்று பறப்பதற்கு ஏதோ ஒன்று இருந்த போதிலும், பூமியின் புவி ஈர்ப்பு சக்தி அவர்களை விட்டுவைக்கவில்லை.
அவர்களில் ஒருவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ராபர்ட் காக்கிங். அவரது படைப்புகளுக்காக அவர் நினைவுகொள்ளப்படவில்லை. ஆனால், வரலாற்றில் முதல் பாராசூட் விபத்தில் உயிரிழந்தவர் என்பதற்காக நினைவுகொள்ளப்படுகிறார்.
1785-ம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் ஜ்யான் பியர் ப்ளான்சார்ட், நவீன பாராசூட்டில் முதல் முறையாக குதித்துக் காட்டியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஐம்பது ஆண்டுகள் கழித்து பல விதமான பாராசூட்கள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், காக்கிங் இந்த பாராசூட்களின் வடிவங்களை மேம்படுத்த விரும்பினார். அந்த பணியில் பல ஆண்டுகள் மும்முரமாக ஈடுபட்ட அவர், தனது கண்டுபிடிப்பை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தார்.
1834-ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி, லண்டன் நகரின் வானில் ராயல் நாசா ஹாட் ஏர் பலூனிலிருந்து (அதிக உயரத்தில் பறக்கக்கூடிய பலூன்கள்) தொங்கிய தனது பாராசூட்டில் பறந்தார்.
கிரீன்விச் என்ற இடத்தில் அவர் தரையிறங்க வேண்டும். அந்த இடத்தை அவர் நெருங்கியபோது அவர் 1,500 மீட்டர் உயரத்தில் இருந்தார். சூரியன் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருந்தது. அவர் பலூனை விட்டுவிட்டு தனது பாராசூட்டில் பறந்து காட்ட வேண்டும். அதை செய்வதற்கு அதுவே அவருக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பாகும்.
அவர் பலூனை விட்டுவிட்டார். அவர் வேகமாக சென்றாலும், ஒரு நொடி எல்லாம் சரியாக நிகழ்ந்தது போல் தோன்றியது. ஆனால், திடீரென பாராசூட்டின் துணி எதிர் திசையில் திரும்பியது, அது கிழியத் தொடங்கியது, பின்னர் முழுவதுமாக சேதமடைந்தது.
காக்கிங் தரையிறங்கிய போதே உயிரிழந்தார். அவர் பறப்பதற்கான அறிவியல் கணக்குகளை போடும் போது, பாராசூட்டின் எடையை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார்.
சுமார் 80 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தையல்காரர் ஒருவருக்கு இதே சம்பவம் நிகழ்ந்தது.
விமானிகளுக்கான பாராசூட் ஆடையை உருவாக்க முயன்றவர்
பட மூலாதாரம், Getty Images
ப்ரான்ஸ் ரேய்சால்ட் கீழே விழுந்த சம்பவமும் பிரமிக்கத்தக்க வகையிலேயே நிகழ்ந்தது என்று கூறலாம். காக்கிங் விழுந்த காட்சியை கார்ட்டூன் கலைஞர்கள் படமாக்கியிருந்தனர். ரேய்சால்ட் விழுந்ததை கார்ட்டூன் கலைஞர்கள் மட்டுமல்லாமல் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒரு முழு காட்சிப் படக்குழுவே ஆவணப்படுத்தியது.
விமானிகள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விமானத்திலிருந்து வெளியே குதிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால், அவர்கள் அணிந்திருக்கும் ஆடையே பாராசூட்டாக மாறும் வகையில் உடையை வடிவமைக்க வேண்டும் என்று ரேய்சால்ட் விரும்பினார்.
பட்டுத்துணியில் மடிக்கக்கூடிய இறக்கைகள் கொண்ட அவரது ஆரம்ப கால வடிவமைப்புகள் சற்று நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தன. அவற்றை, பாரிஸில் உள்ள தனது இடத்திலிருந்து மனித உருவபொம்மைகளை கொண்டு பரிசோதித்துப் பார்த்தார்.
ஆனால், அவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வது எளிதாக இல்லை. எனவே, அவரது வடிவமைப்பில் மேலும் சில மாற்றங்களை செய்தார். புதிய வடிவமைப்பு தயாரானபோது, இந்த முறை அதிக உயரம் கொண்ட இடத்திலிருந்து பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். பாராசூட் வேகம் பிடித்து பறப்பதற்கும், மெதுவாக தரையிறங்குவதற்கும் அது வசதியாக இருக்கும் என்று நினைத்தார்.
தரையிலிருந்து 57 மீட்டர் உயரத்தில் இருந்த ஈஃபில் கோபுரத்தின் முதல் தளம் அதற்கு பொருத்தமாக இருந்தது. அந்த இடத்திலிருந்து சோதனை செய்ய அனுமதி பெற்றார். 1912-ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இதை அறிவிக்க செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர் ஓர் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்: இந்த முறை மனித உருவ பொம்மைகள் அல்ல, தானே அந்த பாராசூட்டில் பறக்கப் போவதாகக் கூறினார்.
இதை அவர் செய்வதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை எச்சரித்தனர். அவரது நண்பர்கள், இந்த பரிசோதனையை அவர் செய்து பார்க்க வேண்டாம் என்று தடுத்தனர். எனினும் எல்லாவற்றையும் மீறி, அவர் ஈஃபில் கோபுரத்தின் மீது ஏறினார். தனது பாராசூட்டை மாட்டிக் கொண்டு குதித்தார்.
அந்த பாராசூட் முழுவதும் திறந்து பறக்கவேயில்லை. ரேய்சால்ட் பார்வையாளர்கள் சூழ கீழே விழுந்து உயிரிழந்தார்.
கலங்கரை விளக்கத்தில் உயிர் நீத்தவர்
ஒரு வசதியான நாற்காலியென்றால், அது அமர்வோரை தனது கைகளால் அரவணைத்துக் கொள்ளும். இனிப்புகளோடு நகர்ந்துவரும் தேநீர் மேசை, மந்திரத்தால் உயரத்தில் மிதக்கச் செய்யும்.
இங்கிலாந்தின் எக்செசில், ஹென்றியும், ஜேன் வின்ஸ்டான்லியும் வாழுமிடத்தில் “வொண்டர் ஹவுஸ்” என்று அறியப்படும் இடத்துக்கு வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும் பல ஈர்ப்புக்குரிய விசயங்களில் இவை இரண்டு. இந்த இரண்டும் ஓவியரும், செதுக்குபவருமான வின்ஸ்டான்லியுடைய படைப்புகளாகும். அவருக்கு இயந்திரங்களும், நீரியல் சாதனங்களும் மிகுந்த விருப்பத்துக்குரியவை.
1690களில் அவர் லண்டனில் ஒரு கணித நீர் அரங்கத்தைத் திறந்தார். அந்த அரங்கம் அவருடைய சொந்த வடிவமைப்புகளிலேயே உச்சமான, புத்திசாலித்தனமான படைப்புகளால் நிரம்பியிருந்தது.
அவரின் புகழ் காரணமாக, கப்பல்களில் அவரால் முதலீடு செய்ய முடிந்தது.
இங்கிலாந்தின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள எடிஸ்டோன் பாறைகளில் அவருடைய இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளாகின. ஹென்றி வின்ஸ்டான்லி அந்தப் பகுதியில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாகவும், பல நூற்றாண்டுகளாக பல மாலுமிகள் அங்கே பலியாகி வருவதாகவும் தெரிந்துகொண்டார். “நான் ஏதாவது செய்ய வேண்டும்” என நினைத்தார்.
பட மூலாதாரம், Getty Images
பாறைகளில் ஒரு கலங்கரை விளக்கத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை வரைந்து அவற்றை கப்பல்கள் நிர்வாகத்துறையினரிடம் கொண்டு சென்றார். ஆனால், அதற்கு அதிகாரிகளை ஏற்கச் செய்வது கடினமாக இருந்தது. உயர் கடலில், அதிலும் உயர் அலைகளின்போது கடலில் மூழ்கும் பாறைகளின் மீது ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டதே இல்லை.
1696-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆனால், வின்ஸ்டான்லி, பிரெஞ்சு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டதும் மீண்டும் அந்தப் பணிக்குத் திரும்பினார்.
1698-ம் ஆண்டில் 27 மீட்டர் உயரமான கோபுரத்தில் 60 மெழுகுவர்த்திகளை ஏற்றினார். வலுவான காற்றில் அது அலைந்தது. ஆனால், அலைகள் மிகப் பெரியதாக இருக்கும்போது அது தெரியவில்லை என்பதைக் கவனித்த அவர், கட்டமைப்பை மறுவடிவமைத்து, சுவர்களை வலுப்படுத்தி, அதன் உயரத்தை 40 மீட்டராக உயர்த்தினார்.
வரலாற்றில் முதல் கடலோர கலங்கரை விளக்கமான தனது கண்டுபிடிப்பின் பாதுகாப்பு குறித்து சந்தேகமே எழவில்லை அவருக்கு. வின்ஸ்டான்லி, “இதுவரை இல்லாத மிகப் பெரிய புயலின்” போது அங்கு ஓர் இரவை மகிழ்ச்சியுடன் கழிப்பேன் என்று அறிவித்தார்.
அவ்வாறே அவர் சொன்னதை செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
1703 ஆம் ஆண்டில், வரலாற்றில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகக் கடுமையான புயல் பிரிட்டிஷ் தீவுகளைத் தாக்கியது, காற்றின் வேகம் மணிக்கு 120 மைல்களை எட்டியது, இந்தப் புயலின் காரணமாக கடலிலும் நிலத்திலும் 15,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வின்ஸ்டான்லி தனது கலங்கரை விளக்கம், அத்தகைய சோதனையை தாங்கி நிற்கிறதா என்பதைப் பார்க்க செல்லும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்தார், புயல் ஓய்ந்ததால் நவம்பர் 27 ஆம் தேதி அவரால் அங்கே செல்ல முடிந்தது. கலங்கரை விளக்கம் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அவர், இரவை அங்கேயே கழிக்கப் போவதாகவும், காலையில் தன்னை அழைத்துச் செல்ல வரும்படியும் தனது நண்பர்களிடம் கூறினார். அவர்கள் அவரை மீண்டும் சந்திக்கவே இல்லை.
அந்த இரவில், காற்று இன்னும் வலுவாக வீசியது, கலங்கரை விளக்கம், அதை உருவாக்கிய படைப்பாளியின் எல்லா அடையாளங்களையும் அடியோடு எடுத்துச் சென்றது என, “தி மினிஸ்ட்ரி ஆஃப் ஹிஸ்ட்ரி” கூறுகிறது.
ஆனால் அவரது பணி வீண் போகவில்லை. அந்த கலங்கரை விளக்கம் பயன்பாட்டில் இருந்த 5 ஆண்டுகளில், அந்தப் பகுதியில் எந்த கப்பல் விபத்தும் பதிவு செய்யப்படவில்லை, இது போன்ற ஆபத்தான இடத்தில் ஒரு அசாதாரண சாதனையாக அது அமைந்தது.
அதனால்தான் இன்றும் எடிஸ்டோன் பாறைகளில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது.
இடியும் மின்னலும்
பட மூலாதாரம், Getty Images
1740களில், மின்சாரத்தைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்குவதில் பல விஞ்ஞானிகளுக்கு ஆர்வம் அதிகரித்தது. 1745-ம் ஆண்டில் தற்செயலாக லெய்டன் ஜார் (ஆயவகங்களில் பயன்படுத்தப்படும் ஒருவித மின்கருவி) கண்டுபிடிக்கப்பட்டதற்கு இந்த ஆர்வம் மேலும் அதிகரித்தது.
அப்படியொரு ஆர்வமிக்க விஞ்ஞானிகளில் ஒருவர், ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட ரஷ்ய இயற்பியலாளர் ஜார்ஜ் வில்ஹெல்ம் ரிச்மான். அவர் மின்சாரத்தைக் கொண்டு பல முன்னோடி பணிகளை மேற்கொண்டுள்ளார் .
1752-ம் ஆண்டில் பெஞ்சமின் ஃபிரான்க்லின் மின்னல் என்பது மின்சார நிகழ்வு என்றும் அதை ஒரு பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியும் என்றும் கூறியபோது, ரிச்மானுக்கும் அதை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை. அதன் மூலம், அவர் கண்டுபிடித்த மின் அளவியில் வளிமண்டல மின்சாரத்தை அளக்க விரும்பினார்.
அவரது இல்லத்தில் மேற்கூரையில் பொருத்தப்பட்ட கம்பியுடன் ஒரு இரும்பு கம்பியை இணைத்தார். அந்த இரும்பு கம்பியில் தனது மின் அளவியை பொருத்தியிருந்தார்.
1753-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, ஒரு புயல் உருவானது. ரஷ்ய அறிவியல் அகாடமியிலிருந்த ரிச்மான் அவசர அவசரமாக வீட்டுக்குப் புறப்பட்டார். அகாடமியில் செதுக்கும் பணியை மேற்கொண்டு வந்த நபரை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றார். அந்த செதுக்குபவர் தான், அதன் பின் நிகழ்ந்தவைக்கான சாட்சியாக மாறியுள்ளார்.
வீட்டுக்கு வந்த ரிச்மான், அந்த மின் அளவியையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்னலின் ஒரு துளி இரும்பு கம்பியிலிருந்து ரிச்மானின் நெற்றிப்பொட்டில் விழுந்தது, அதை அவரை தரையில் கீழே தள்ளிவிட்டது.
அதன் பிறகு ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது, தீப்பிழம்புகள் பரவ தொடங்கின.
மின் ஆராய்ச்சியில் உயிரிழந்த முதல் நபராக ரிச்மான் ஆனார்.
“எல்லா மின் ஆராய்ச்சியாளர்களாலும் ரிச்மானை போல இவ்வளவு அழகான முறையில், பொறாமைப்படும் வகையில் உயிரிழக்க முடியாது” என்று பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜோசப் ப்ரீஸ்ட்லி 1767-ம் ஆண்டில் கூறியிருந்தார்.
எட்டி உதைத்து உயிரிழந்தவர்
19ம் நூற்றாண்டு பதிப்பக சாம்ராஜ்யங்களின் தொடங்கிய காலமாகும். பதிப்பகங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அப்போதிருந்த மின் சுழற்சி அச்சுகள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தன.
1860களில் அமெரிக்கன் வில்லியம் புல்லக் அச்சு துறையில் புரட்சியை உருவாக்கினார். வெப்-ஃபெட் அச்சு முறையை அவர் கண்டுபிடித்தார். அதற்கு முன்பு வரை அச்சிடப்பட வேண்டிய தாள்கள் ஒவ்வொன்றாக கையால் அச்சு இயந்திரத்தின் உள்ளே செருக வேண்டியிருக்கும். ஆனால், வில்லியம் புல்லக் உருவாக்கிய அச்சுமுறையில் தாள்கள் தானாகவே அச்சு இயந்திரத்துக்குள் இழுத்துக் கொள்ளப்படும். இதனால் மனித உழைப்பு கடுமையாக குறைக்கப்பட்டது, பல தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.
அதோடு மட்டுமல்லாமல், அச்சு இயந்திரம் தானாகவே சரி செய்துகொள்ளும், இரு புறங்களிலும் அச்சிடும், தாள்களை மடித்து, சரியான இடத்தில் துண்டித்துவிடும். இவை அனைத்தையும் விரைவாகவும் செய்தது.
1867-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், அவர் தனது புதிய அச்சு இயந்திரங்களில் ஒன்றை, பிலடெல்ஃபியா பப்ளிக் லெட்ஜர் நாளிதழுக்காக (அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்ஃபியா நகரிலிருந்து வெளிவந்த பிரபல நாளிதழ்) நிறுவும் பணியை செய்துகொண்டிருந்தார். அப்போது ஓடிக்கொண்டிருந்த அந்த அச்சு இயந்திரத்தில் சில மாற்றங்களை செய்தபோது, அதிலிருந்த ஒரு பட்டை நழுவி கீழே விழுந்துவிட்டது.
அச்சு இயந்திரத்தை நிறுத்துவதற்கு பதிலாக, பலரும் பொதுவாக செய்ய நினைப்பது போல, வில்லியம் புல்லக் காலால் எட்டி உதைத்து பட்டையை இயந்திரத்துக்குள் செருக நினைத்துள்ளார்.
அப்படி செய்தபோது அவரது கால் இயந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டது. அவரது கால்கள் இயந்திரத்திலிருந்து காப்பாற்றப்பட்டு, காயத்துக்கு சிகிச்சை வழங்கப்பட்டாலும், ரத்த ஓட்டமில்லாமல் கால் தசைகள் அழுகி, அவரது காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துவிட்டார்.
1964-ம் ஆண்டில் “அவரது கண்டுபிடிப்பான சுழற் அச்சு (1863) நவீன செய்தித்தாளை சாத்தியமாக்கியது” என்று எழுதப்பட்ட தகடு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு