பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், டாலியா வென்டுரா
- பதவி, பிபிசி நியூஸ்
-
கி.மு. 332-ல், மாசிடோனியாவின் மூன்றாம் அலெக்ஸாண்டர் (அலெக்சாண்டர் தி கிரேட் என புகழப்பட்டவர்) எகிப்தை கைப்பற்றுவதில் தனது கவனத்தை செலுத்தியிருந்தார்.
ஆனால், அவரது பயணத்தில் “கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமான” காஸா, தடையாக இருந்தது என கிரேக்க-ரோமானிய எழுத்தாளர் ஃபிளேவியஸ் அரியானஸ் தனது “அனாபாஸிஸ் ஆஃப் அலெக்ஸாண்டர் மக்னஸ்” என்ற நூலில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விவரித்தார்.
பெரும்பாலும் இன்று அந்தப் பகுதியை கவனிக்கப்படுவதற்கான காரணங்களுக்காக அல்லாமல், காஸா அதன் நீண்ட வரலாற்றில் பெரும்பாலான காலங்களில் மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் அந்தப் பகுதியை ஆக்கிரமித்தது, இது அந்த பிரதேசத்தின் ஹமாஸ் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி 62,000 உயிர்களைப் பறித்த மோதலின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
அந்தக் காலத்தில், அரியானஸ் குறிப்பிடுவது போல, காஸா பாலைவனங்களால் சூழப்பட்ட ஒரு பசுமையான பள்ளத்தாக்கில் இருந்தது மட்டுமல்லாமல், “ஃபீனிஷியாவிலிருந்து எகிப்து செல்லும் வழியில் கட்டப்பட்ட கடைசி நகரமாக” இருந்தது.
அதாவது, லெவன்டைன் மத்தியதரைக் கடல் பேரரசுகள் ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையில் எந்த வழியில் பயணித்தன என்பதைப் பொறுத்து, அவர்கள் சினாய் பாலைவனத்திற்குள் நுழைவதற்கு முன்பு அல்லது பின் அவர்கள் வரவேற்கப்பட்ட முதல் அல்லது கடைசி இடமாக இது இருந்தது.
இதன் உத்தி ரீதியான முக்கியத்துவம் காரணமாக, காஸா அடிக்கடி கை மாறிக் கொண்டிருந்தது.
எடுத்துக்காட்டாக, கி.மு. 12-ஆம் நூற்றாண்டில், ஃபிலிஸ்தியர்கள் எகிப்தியர்களிடமிருந்து 300 ஆண்டு ஆக்கிரமிப்புக்குப் பிறகு காஸாவை கைப்பற்றினர், பின்னர் அது ஃபிலிஸ்திய பென்டாபோலிஸின் (ஐந்து நகரங்களின் கூட்டமைப்பு) முக்கிய மையமாக மாறியது.
பைபிளில் குறிப்பிடப்பட்ட வீரன் சாம்சன், ஃபிலிஸ்தியத் தலைவர்களால் லஞ்சம் கொடுக்கப்பட்ட டிலைலவால் முடி வெட்டப்பட்ட பிறகு காஸாவில் சிறை வைக்கப்பட்டார், பின்னர் அங்கு டாகோன் கோவிலை இடித்து உயிரிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஃபிலிஸ்தியர்களுக்குப் பிறகு, காஸா இஸ்ரேலிய மன்னர் டேவிட், அசிரியர்கள், எகிப்தியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது, பின்னர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் பாரசீகப் பேரரசை நிறுவிய சைரஸ் தி கிரேட் மன்னனால் கைப்பற்றப்பட்டது.
பேரரசர் அலெக்ஸாண்டர் மக்னஸ் 336 கி.மு. அரியணையேறியதிலிருந்து இந்தப் பாரசீகப் பேரரசை வெல்ல முடிவு செய்திருந்தார்.
“சாத்தியமற்றது”
அலெக்ஸாண்டர் காஸாவின் உயரமான மேட்டில் அமைந்திருந்த நகரத்தை எதிர்கொண்டபோது, அதைச் சுற்றியிருந்த பாதுகாப்பு மதிலை கடப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆசியாவை வெல்லும் பயணத்தில் இருந்தார்.
கி.மு. 334-ல் ஹெலஸ்போன்ட்டைக் கடந்து, சுமார் 30,000 காலாட்படை வீரர்களும் 5,000-க்கும் மேற்பட்ட குதிரைப்படை வீரர்களும் கொண்ட படையை வழிநடத்தி, அவர் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றிருந்தார்.
அவரது மிகச் சமீபத்திய வெற்றி அற்புதமானதாக இருந்தது, கி.மு. 332 ஜூலையில், ஃபீனிஷியாவின் முக்கிய நகர-நாடான டயரை, பாரசீக கடற்படைத் தளமாக இருந்த அந்த இடத்தை, ஏழு மாதங்கள் முற்றுகையிட்டு, ஒரு தீவில் அமைந்திருந்தாலும், அதன் மதில்கள் கடல் வரை நீண்டிருந்தாலும், வெற்றிகரமாகக் கைப்பற்றினார்.
அந்தப் போருக்குப் பிறகு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை பற்றிய செய்திகள், எகிப்தை நோக்கிய அலெக்ஸாண்டரின் பயணம் எதிர்ப்பு இல்லாமல் செல்ல உதவின… காஸாவை அடையும் வரை.
காஸாவை ஆண்டவர் ஒரு பாரசீகப் பேரரசின் தளபதியான பெட்டிஸ் (அல்லது பேடிஸ்) என்பவர் ஒரு அண்ணகர் ( அரச சேவைக்காக ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்) , அவர் அலெக்ஸாண்டருக்கு அடிபணியாமல், “அரேபிய கூலிப்படையினரின் சேவைகளைப் பயன்படுத்தி, நீண்ட முற்றுகைக்கு போதுமான கோதுமையை சேகரித்தார்,” என்று அரியானஸ் விவரிக்கிறார், “காஸாவை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முடியாது என்று நம்பினார்.”
நகரத்தின் மீது தாக்குதல் நடத்த தேவையானதை கட்டுவதற்காக அலெக்ஸாண்டர் நியமித்த பொறியாளார்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது. “அந்த மேட்டின் உயரம் காரணமாக அந்த மதில்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவது முடியாது” என்று அவர்கள் கூறினர்.
எனினும், “எதிர்பாராத வெற்றி எதிரிகளுக்கு பெரும் பயமுறுத்தலாக இருக்கும்” என்று அலெக்ஸாண்டர் கருதினார்.
மேலும், “காஸாவை கைப்பற்றாவிட்டால், கிரேக்கர்கள் மற்றும் பாரசீக மன்னர் டாரியஸ் முன்பு அவமானகரமான இழிவு ஏற்படும்” என்று அவர் நினைத்தார்.
காஸாவை வெல்ல அலெக்சாண்டர் கடைபிடித்த வியூகம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
தனது முடிவில் உறுதியாக இருந்த அலெக்ஸாண்டர், மதில்களுக்கு இணையாக முற்றுகை இயந்திரங்களை அமைக்க மண்மேடு உருவாக்க உத்தரவிட்டார், மேலும் டயரில் பயன்படுத்திய உபகரணங்களை கொண்டுவரச் செய்தார்.
ஆனால், அவர் தெய்வங்களுக்கு பலி செலுத்தவிருந்த நிலையில், “பறவை ஒன்று பலிபீடத்தின் மேல் பறந்து, அதன் நகங்களில் இருந்த ஒரு கல்லை அவரது தலையில் விழச் செய்தது.”
அவர் தனது விருப்பமான குறிசொல்பவரிடம் இதன் பொருளை வினவினார், “நீங்கள் நகரத்தைக் கைப்பற்றுவீர்கள், ஆனால் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று பதில் வந்தது.
அவர் அதற்கு பணிந்தார்.. ஆனால் சிறிது நேரத்திற்கு மட்டும்.
எதிரிகள் உயரமான இடத்திலிருந்து மாசிடோனியர்களைத் தாக்கியபோது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வெளியேறி வெற்றிகரமாகப் போராடினார், ஆனால் அவரது தோள்பட்டையில் காயமடைந்தார்.
காயம் கடுமையாக இருந்தாலும், முன்னறிவிப்பின் ஒரு பகுதி நிறைவேறியதால், நகரம் வீழும் என்ற மற்றொரு பகுதியும் நிறைவேறும் என்று மகிழ்ந்தார்.
அவ்வாறே நடந்தது. “முடியாது” என்று கருதப்பட்ட அந்தப் பணி முடியாததாக இருக்கவில்லை.
நகரத்தின் மதில்கள் இறுதியாக வீழ்ந்தன; சில பகுதிகள் அடித்து தகர்க்கப்பட்டன, மற்றவை அவற்றை தாங்கி நிற்கும் மண்ணை அகற்றியதால் சரிந்தன.
சுமார் 100 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, படையெடுத்த படைப்பிரிவுகள் ஒவ்வொன்றாக நகரத்திற்குள் நுழைந்து, முழு படைக்கும் வழி வகுத்தன.
“காஸாவைச் சேர்ந்தவர்கள், நகரம் எதிரிகளின் கைகளில் இருந்தபோதும், ஒவ்வொருவரும் தங்கள் இடத்தில் எதிர்த்து போராடி அனவரும் இறக்கும்வரை இறுதிவரை எதிர்த்தனர்,” என்று அரியானஸ் விவரிக்கிறார்.
இரு தரப்பிலும் மனித உயிரிழப்பு பெரிதாக இருந்தது.
“அந்தப் போரில் சுமார் 10,000 பாரசீகர்களும் அரேபியர்களும் இறந்தனர், ஆனால் மாசிடோனியர்களுக்கு வெற்றி ரத்தமின்றி கிடைக்கவில்லை,” என்று ரோமானிய எழுத்தாளர் குயின்டஸ் கர்டியஸ் ரூஃபஸ் தனது “ஹிஸ்டோரியே அலெக்ஸாண்ட்ரி மக்னி” (அலெக்ஸாண்டர் மக்னஸின் வரலாறு) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
அலெக்ஸாண்டரின் கோபம்
பட மூலாதாரம், Getty Images
அலெக்ஸாண்டரின் வாழ்க்கை பற்றிய முக்கிய ஆதாரமாக உள்ள நூலை எழுதிய கர்சியஸின் கூற்றுப்படி காஸாவின் தளபதி பெட்டிஸ் போரில் உயிர் பிழைத்தார். இருப்பினும் பல அறிஞர்கள் இதை சில நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் எழுதப்பட்ட வரலாற்று நாவலாகக்தான் கருதுகின்றனர்.
“பெட்டிஸ் வீரமாகப் போராடினார், காயங்களால் துளைக்கப்பட்டு, தனது கூட்டாளிகளால் கைவிடப்பட்டார்; இருப்பினும், அவரது கைகளில் ரத்தம் மற்றும் எதிரியின் ரத்தத்தால் நனைந்திருந்தபோதும், ஆயுதங்கள் நழுவினாலும், வேகம் குறையாமல் போராடினார்,” என்று கர்டியஸ் கூறுகிறார்.
ஆனால், அவரது முடிவு கொடூரமாக இருந்தது.
“அவரை அலெக்ஸாண்டர் முன் நிறுத்தியபோது, பிற சந்தர்ப்பங்களில் எதிரிகளின் வீரத்தைப் பாராட்டிய இளமையான அலெக்ஸாண்டர், இம்முறை தற்பெருமையான திமிரான மகிழ்ச்சியில் திளைத்தார்.
‘நீ விரும்பியபடி இறக்க மாட்டாய்,’ என்று அவர் கூறினார், ‘மாறாக, எதிரிக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்படும் எல்லா தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.’
பெட்டிஸ், அரசரை அச்சமற்ற, கர்வமான முகத்துடன் பார்த்து, அவரது அச்சுறுத்தல்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதைக் கண்ட அலெக்ஸாண்டர், ‘இவனது பிடிவாதமான மௌனத்தைப் பார்! இவன் மண்டியிட்டானா? ஒரு வார்த்தை கூட வேண்டுதல் செய்தானா?
நான் இவனது மௌனத்தை உடைப்பேன், வேறு வழியில்லையெனில், குறைந்தபட்சம் இவனது புலம்பல்களால் இவனது மெளனத்தை முறியடிப்பேன்,’ என்றார்.
பின்னர், அவரது கோபம் ஆத்திரமாக மாறியது, ஏனெனில் அவரது புதிய செல்வாக்கு வெளிநாட்டு பழக்கவழக்கங்களால் பாதிக்கப்பட்டிருந்தது.
பெட்டிஸ் இன்னும் உயிருடன் இருக்கும்போது, அவரது குதிகால்களில் தோல் பட்டைகள் கோர்க்கப்பட்டு, ஒரு தேருடன் கட்டப்பட்டு, குதிரைகளால் நகரத்தைச் சுற்றி இழுத்துச்செல்லப்பட்டார். அரசர், இத்தகைய தண்டனையை எதிரிக்கு வழங்குவதன் மூலம், தான் அகிலிஸின் வழித்தோன்றல் என்பதைப் பின்பற்றியதாகப் பெருமைப்பட்டார்.
அதன் பின்ன என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
கிரேக்க முதல் நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றாசிரியரும் தத்துவஞானியுமான புளூடார்க், தனது “லைஃப் ஆஃப் அலெக்ஸாண்டர்” என்ற நூலில், “பெரும்பாலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் இறக்கும் போர்கள், பெரிய படைகள், மற்றும் நகர முற்றுகைகளை விட ஒரு குணத்தை விவரிக்க ஒரு கணம், ஒரு தீவிரமான பேச்சு, ஒரு சிறு செயல் உதவுகிறது” என்று குறிப்பிட்டார்.
காஸாவில் அந்த வெற்றிக்குப் பிறகு, அலெக்ஸாண்டர் தனது தாயார் ஒலிம்பியாஸ், கிளியோபாட்ரா மற்றும் நண்பர்களுக்கு பெரும் கொள்ளைப் பொருட்களை அனுப்பினார். மேலும், அவர் இளமையில் தனது ஆசிரியராக இருந்த லியோனிடாஸுக்கு ஒரு பரிசை அனுப்பினார்.
அந்தக் காலத்தில் ஒரு நாள் அலெக்ஸாண்டர் பலிபீட நெருப்பில் கை நிறைய சாம்பிராணியை அள்ளி அள்ளி எறிவதைக் கண்ட லியோனிடாஸ், , “நீங்கள் இந்த மணம்வீசும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலங்களை வெல்லும்போது, இவ்வளவு ஏராளமாக எரிக்கலாம்; இப்போதைக்கு, உங்களிடம் உள்ளவற்றை மிதமாகப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.
அலெக்ஸாண்டர் அதை மறக்கவில்லை, எனவே காஸாவிலிருந்து அனுப்பிய பரிசுடன் ஒரு குறிப்பு இருந்தது:
“உங்களுக்கு மிர்ரா மற்றும் சாம்பிராணியை ஏராளமாக அனுப்புகிறேன், இனி தெய்வங்களுக்கு கஞ்சத்தனம் செய்ய வேண்டாம்.”
காஸாவில்,”அலெக்ஸாண்டர் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக பிடித்தார், அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மக்களைக் கொண்டு நகரத்தை மறுகுடியமர்த்தினார், மற்றும் அதைப் போருக்காக ஒரு கோட்டையாகப் பயன்படுத்தினார்,” என அரியானஸ் விவரிக்கிறார்.
பின்னர், அவர் எகிப்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார், அங்கு அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
25 வயதில், மாசிடோனியாவின் அரசராகவும், கிரீஸின் மேலாதிக்கராகவும், எகிப்தின் பாரோவாகவும் இருந்த அவர், மேடியா மற்றும் பாரசீகத்தின் மகாராஜாவாகவும் மாறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு