0
ஒரு தனிமனிதன் பிறப்பில் இருந்து இறப்பு வரை பல்வேறு கட்டங்களை கடந்து செல்கிறான் மறந்தும் செல்கின்றான். அதில் அவனுக்கு பல படிப்பினைகளையும் பல மாற்றங்களையும் உண்டுபண்ணுகிறது. சில மனிதர்கள் காலமும் கால்களும் செல்லும் போக்கிலே செல்லுகின்றனர் இன்னும் சிலர் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று தெரியாமல் வாழ்கின்றனர்.
ஒவ்வொரு கவி வரிகளிலும் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் நம் முன்னே காட்சிப் பொருளாய் காட்டிவிடுகிறார் கவிஞர்.ஆழமான வாழ்வியலையும் அழகான இழந்துவிட்ட வாழ்க்கை தருணங்களையும் கவிகளில் செம்மையாக நிரப்பியுள்ளார்.
தற்கால சமூகத்திற்கு ஏற்றாற் போல் மனித வாழ்க்கைக்கு தேவையான நிதர்சன உண்மைகளை வரிகளில் காணக்கூடியதாகவே உள்ளது. மக்களின் மனங்கள் எப்போதும் மாறலாம். அவை நல்லதாகவோ கெட்டதாகவோ மாறுவது என்பது மனங்களின் தன்மைகளிலேயே அமைந்து விடுகிறது. இக்கவிதை தொகுப்பில் என்னைப் பொறுத்தவரையில் ஓரிரெண்டு கவிகளை குறிப்பிட்டு கூறிவிட முடியாது. அற்ப வாழ்வினை அழகாக கூறும் கவிகளை ஓரிரு கவிகளை வைத்து கணக்கிட்டு விட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சுயங்களை கொண்டுள்ளான். ஒரே மாதிரியாக இருப்பதில் வாய்ப்புக்கள் இல்லை. நடைமுறை வாழ்க்கையை காட்சிப்பொருளாக்கி
கவிதைகளை உருவாக்கிய ஆசிரியரின் ஆளுமையும் ஆற்றலும் சிறந்த பெண் கவிஞர் நம்மிடத்தே தோன்றியுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது.
வாசிப்போரை ஆழமாக சிந்திக்க வைத்து தூய்மைப்படுத்தி விடுகிறது ஒவ்வொரு கவிதைகளும், காலங்கள் சென்றாலும் சிலரின் அறியாமையும் ஆற்றலின்மையும், குரோத மனப்பாங்கும் அகழ்வதில்லை. அப்பிடியான மனங்களை ஒடித்து தன்னைத்தானே செதுக்கிவிடுகிறது இந்தத்தொகுப்பு.கவிகளின் வனப்பே அணிகள். மிக அழகாக ஊசி போல் ஏற்றியுள்ளார். உதாரணமாக
நீண்ட கண்ணீருக்கு
பிறகான நொடிகளை
தேன் தடவிய
சயனைடு வார்த்தைகள்
தழுவிச்செல்கின்றன.
உயிர்த்தெழும் வரை புரிவதில்லை
பொடியாகும் பாறைக்கு
விதையின் சுயம்
உணர்வுகளோடு அறையப்பட்ட
நினைவெனும் ஆணிகளை
ஒவ்வொன்றாய் கழற்றி எறிகிறாள்
மலைகளுக்கு அப்பால்
கடக்கத் துணிந்தபின்
மலைகூட கடுகளவுதான் கனக்கிறது.
என்று தனித்துவம் மிக்கதாக செதுக்கியுள்ளார் ஆசிரியர்.
கவிஞரின் சொல்லாடல் ஒரு சிறு சரிவும் கூட அல்லாது திறனில் வசப்பட்ட கவிகளை
இறுதிவரை கலக்கம் இல்லாமல் செல்கிறது. இந்நூலை இரண்டு தடவைகள் வாசித்துவிட்டேன். பக்கங்களை புரட்டி விட முடியாமல் கவிதைகள் என்னை ஆரத்தழுவிக்கொள்கின்றன.
கவிஞனாய் இருப்பது வரம்.அவரின் வாசகனாய் இருப்பது கவிஞருக்கு கிடைத்த மிகப்பெரும் வரம்.ஏறத்தாழ 70 கவிதைகள் மிகவும் வீரியம் மிக்க வரிகளை தொகுப்பித்த ஆசிரியருக்கு நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இப் படைப்பை வெளிக்கொணர்ந்த அனைவருக்கும் நன்றியும். வாசிப்பிற்கு வயதெல்லை இல்லை. இப்படைப்பை அனைவரும் வாசிக்க வேண்டும் என்பதே எனது அவா.
கேசுதன்