சுமார் 18 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் ஒரு படகிலிருந்து தவறி விழுந்த, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு சர்ப்ஃபோர்டு (அலைச்சறுக்கு பலகை), கடலில் சுமார் 2,400 கிமீ (1,490 மைல்கள்) தூரம் மிதந்து சென்று, நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்குத் தீவில் உள்ள ராக்லான் துறைமுகத்தில் கைட்சர்ஃபிங் (kitesurfing) செய்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்வரோ போன் என்பவர், கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பலகையைக் கண்டுபிடித்தார்.
அவர் தான் கண்டுபிடித்தது குறித்துப் பல ஆன்லைன் சர்ஃபிங் குழுக்களில் பதிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பலகையின் உரிமையாளரின் நண்பர் அதைக் கண்டு, இருவரையும் இணைத்து வைத்தார்.
இந்தப் பலகை இந்த வாரம் அதன் ஆஸ்திரேலிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். அந்த உரிமையாளர், லியாம் என்று மட்டுமே அறியப்படுகிறார். மே 2024-இல் இந்தப் பலகை படகில் இருந்து காற்றில் பறந்து சென்றது.
“அவரால் நம்பவே முடியவில்லை,” என்று போன் பிபிசியிடம் கூறினார்.
அதன் வடிவமைப்பாளர் தற்போது சர்ஃப் போர்டுகளைத் தயாரிப்பதில்லை என்பதால், அந்தப் பலகைக்கு மாற்று இல்லை என அவர் மேலும் கூறினார்.
சுமார் பத்து ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வரும் 30 வயதான போன், ராக்லானில் தினசரி கைட்சர்ஃபிங் செய்கிறார். பலகையைக் கண்ட நாளன்று வலுவான நீரோட்டங்கள் காரணமாகத் தன் காற்றாடிச் சறுக்குக் கயிற்றை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
கடலில் அடித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்கொள்வதை விட தனது பட்டத்தை இழப்பது மேல் என்ற என சட்டென அவர் முடிவெடுத்தார்.
அவர் துறைமுகத்தின் தொலைதூரப் பகுதிக்கு சென்றபோது புகுந்தபோது, கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த ஆனால் பெரிதாக எந்தச் சேதமும் இல்லாத, கிரீம் நிறத்தில் இருந்த 7 அடி 6 அங்குல (229 செமீ) பலகையைக் கண்டார்.
அவர் அதை மணல் மேடுகளில் மறைத்து வைத்து, சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்து, அதை துறைமுகத்துக்கு எடுத்துச் சென்றார்.
பலகையைச் சுத்தம் செய்த பிறகு, அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினார். பலகையின் வடிவமைப்பாளரின் தனித்துவமான கையொப்பத்தைக் காட்டும் படங்களை அவர் பதிவிட்டார்.
“நிச்சயமாக இது தினமும் பயன்படுத்தப்படும் பலகை அல்ல… இது கிழக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மிதந்து வந்திருக்க முடியுமா என்று யோசிக்கிறேன்?” என்று அவர் எழுதினார்.
“அந்த செய்தியில் நான் அந்தப் படங்களையும் பதிவிட்டேன். பின்னர் நான் ராக்லானில் மீண்டும் அலைச்சறுக்குச் சாகசத்துக்குச் சென்றேன் என்று நினைக்கிறேன்,” என்று போன் கூறினார்.
திரும்பி வந்தபோது, மர்மமான பலகை பற்றிய பதில்களால் அவரது தொலைபேசி நிரம்பி வழிந்தது. நூற்றுக்கணக்கானோர் அந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், இந்த அசாதாரண கண்டுபிடிப்பு குறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
லியாமின் நண்பர் பலகையைக் கண்ட பிறகு, லியாம் அதன் உரிமையாளர் என்பதைக் நிரூபிக்கப் பலகையின் படங்களை போனுக்கு அனுப்பினார். மேலும், ஒரு குடும்ப நண்பரைத் தொடர்புகொண்டு அதை எடுத்து வர ஏற்பாடு செய்தார்.