
-
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
டெல்லியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தௌஜ் கிராமத்தின் எல்லையில் காவல்துறையின் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியை கடக்கும் வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்கிறார்கள்.
சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால், வாகன ஓட்டுநரின் தொலைபேசி எண் உள்ளிட்ட கூடுதல் தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது.
கிராமத்தின் எல்லையில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில், பிரதான சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் 70 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான வளாகம் அமைந்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முயலும் பத்திரிகையாளர்கள் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். நுழைவாயிலுக்கு வெளியில் காத்திருக்கும் பத்திரிகையாளர்கள், வெளியே வருபவர்களிடம் தங்கள் மைக்ரோஃபோனை நீட்டியபடியே கேள்விகளைக் கேட்கின்றனர், அவர்களோ பதிலேதும் சொல்லாமல் விலகிச் செல்கின்றனர்.
பத்திரிகையாளர்களில் சிலர் வெளியில் செல்பவர்களை பின் தொடர்ந்து சென்று கேள்வி கேட்டாலும், வெளியே செல்பவர்களின் முகங்களில் தயக்கமும் பயமும் தெளிவாகத் தெரிகிறது, அவர்கள் அமைதியாக கடக்கிறார்கள்.
அல் ஃபலா பல்கலைக்கழகம்
அக்டோபர் மாத இறுதியில், ஹரியாணா காவல்துறையுடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் நடத்திய கூட்டு நடவடிக்கையில், அல் ஃபலா பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது, தலைப்புச் செய்திகளில் இது இடம் பிடித்தது.
அதன்பிறகு, நவம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்புக்குப் பிறகு, விசாரணையின் முக்கிய மையமாக இந்தப் பல்கலைக்கழகம் மாறியுள்ளது.
புதன்கிழமையன்று, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), ஹரியாணா காவல்துறை, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் உத்தரபிரதேச காவல்துறை ஆகியன அல் ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் சோதனை நடத்தின.
பட மூலாதாரம், Getty Images
இயந்திர பொறியாளர் நிறுவிய பல்கலைக்கழகம்
2014-ஆம் ஆண்டு ஹரியாணா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓர் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், டெல்லியின் ஓக்லா-வில் (ஜாமியா நகர்) பதிவுசெய்யப்பட்ட அல்-ஃபலா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.
1995-ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியியல் பட்டதாரியும், பேராசிரியருமான ஜாவேத் அகமது சித்திக் ஆவார். அல் ஃபலா அறக்கட்டளை 1997-ஆம் ஆண்டு முதல் கல்வி நிறுவனங்களை கட்டமைக்கத் தொடங்கியது.
ஃபரிதாபாத்தின் தௌஜ் கிராமத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றை முதலில் நிறுவிய அல்-ஃபலா அறக்கட்டளை, 2006-ஆம் ஆண்டில் Al Falah School of Education and Training மற்றும் 2008-ஆம் ஆண்டில் Brown Hills College of Engineering and Technology ஆகியவற்றை நிறுவியது.
அதன் பின்னர் அல் ஃபலா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது, 2015-ஆம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. இங்கு மருத்துவப் படிப்புகள் 2016-இல் தொடங்கின, 2019-இல் Al-Falah School of Medical Sciences அங்கீகரிக்கப்பட்டது.
எம்பிபிஎஸ் தவிர, 2023-ஆம் ஆண்டு முதல் இந்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அறிவியலில் முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பல்கலைக்கழக வலைத்தளத்தின்படி, இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) அங்கீகாரம் பெறப்பட்டது. ஆனால், இந்த சான்றிதழ் போலியானது என NAAC தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் மருத்துவ இளங்கலை பட்டப்படிப்பான எம்பிபிஎஸ்-இல் 200 மாணாக்கர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். துணை மருத்துவப் படிப்புகளும் இந்த மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படுகின்றன.
அல் ஃபலா அறக்கட்டளையின் தலைவரும் அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜாவேத் அகமது சித்திக், பொறியியல் பட்டதாரி ஆவார்.
இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பாய் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பில் பி.டெக் பட்டம் பெற்ற முனைவர் ஜாவேத் சித்திக், அல்-ஃபலா அறக்கட்டளை மற்றும் பல நிறுவனங்களை நிறுவியுள்ளார்.
1996-இல் ஜாவேத் சித்திக் நிறுவிய அல்-ஃபலா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் முதலீட்டு மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
2000-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அதே மோசடி வழக்கு தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சித்திக், 2005-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை பேராசிரியராக அவர் பணிபுரிந்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
நவம்பர் 10-ஆம் தேதி மாலை டெல்லி செங்கோட்டைக்கு மிக அருகில் நடைபெற்ற கார் வெடிப்பு ‘பயங்கரவாத தாக்குதல்’ என இந்திய அரசாங்கம் கருதுகிறது.
போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் ஹரியாணா காவல்துறையும் அக்டோபர் மாத இறுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் டாக்டர் முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டார்.
2017-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்த டாக்டர் முஜம்மில் ஷகீல், அல்-ஃபலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் உடலியல் துறையில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
முஜம்மில் ஷகீல் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்கள் மீட்கப்பட்டதாக ஃபரிதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 10-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார், “ஃபரிதாபாத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது பெருமளவிலான ஐஇடி தயாரிக்கும் பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன” என தெரிவித்தார். டாக்டர் முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
டாக்டர் முஜம்மில் ஷகீல் அளித்த தகவலின் பேரில், துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணை முகமைகளும் தெரிவித்துள்ளன.
இந்தப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய மற்றொரு மருத்துவர் டாக்டர் ஷாஹீன் சயீத் புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஃபரிதாபாத் காவல் ஆணையரின் மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்பால், பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
2002-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் ஷாஹீன், பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவர் கைது செய்யப்பட்டதை ஃபரிதாபாத் போலீசார் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷாஹீனின் சகோதரர் முகமது ஷோயிப், காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்புப் படையினர் தங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்ததாகத் தெரிவித்தார். ஷாஹீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தான் நம்பவில்லை என அவரது தந்தை கூறினார் .
டாக்டர் ஷாஹீன் கான்பூரிலும் சிறிது காலம் பணியாற்றினார் என்பதால், இந்த வழக்கு தொடர்பாக கான்பூர் காவல்துறையும் பலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஷாஹீன், ஜேஎஸ்எம் கல்லூரியில் கற்பித்து வந்தார் என காவல் துறை இணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) ஜே.சி.பி. அசுதோஷ் குமார் கூறுகிறார்.
டெல்லி செங்கோட்டை அருகே டாக்டர் உமர் நபி ஓட்டிச் சென்ற கார் வெடித்துச் சிதறியது. காரை ஓட்டிச் சென்றது அவர்தான் என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் உமர் நபி, உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். டாக்டர் உமர் நபியின் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
டாக்டர் உமர் நபியின் உறவினர் முஜம்மில் அக்தர் பிபிசியிடம் கூறுகையில், புல்வாமாவின் கோயில் கிராமத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்கு திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் சென்று உமரின் உறவினர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறினார்.
இருப்பினும், இது தொடர்பாக விசாரணை அமைப்புகள் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
மறுபுறம், தங்கள் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த மூன்று மருத்துவர்களுடனான உறவு தொழில்முறையிலானது மட்டுமே என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
பல்கலைக்கழகத்தின் கூற்று
அல்-ஃபாலா மருத்துவ அறிவியல் பள்ளி நிர்வாகியான டாக்டர் பூபிந்தர் கெளர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் புலனாய்வு அமைப்புகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள், பல்கலைக் கழகத்துடன் தொழில்முறை உறவுகளை மட்டுமே கொண்டிருந்தனர், அவர்களுக்கு பல்கலைக்கழகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்த வகையான ரசாயனங்கள் அல்லது வெடிபொருட்களுடன் பல்கலைக்கழகத்திற்கு தொடர்பு இல்லை என்றும், விசாரணை முகமைகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற சம்பவத்துடன் பல்கலைக் கழகத்தை இணைத்துப் பேசுவதால் மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-ஃபலா அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜாவேத் அகமது சித்திக் மற்றும் மருத்துவக் கல்லூரியின் கருத்துகளை பெற பிபிசி முயன்றது, ஆனால் இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
மாணவர்கள் மத்தியில் அச்சம்
டெல்லி வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக, பல்கலைக்கழகம் கண்காணிப்பின் கீழ் வந்ததிலிருந்து மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது
அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வருகிறார்கள்.
மருத்துவ மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி வளாகத்தின் விடுதிகளிலேயே தங்கியுள்ளனர். பிற மாணவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் அல்லது வாடகை அறைகளில் வசிக்கின்றனர்.
டெல்லி தாக்குதல் தொடர்பாக பல்கலைக் கழகம் கண்காணிப்பின் கீழ் வந்ததிலிருந்து பல மாணவர்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்.
அதே பல்கலைக்கழகத்தில் துணை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தற்போது அங்கு மேற்படிப்பு பயின்று வரும் மாணவர் ஒருவர், தனது பெயரை வெளியிடாமல், “கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் எங்கள் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பதால், தற்போது மாணவர்கள் மத்தியில் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரியுடன் இணைந்துள்ள 650 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் தொலைதூர இடங்களிலிருந்தும் நோயாளிகள் வருவது வழக்கம்.
விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நோயாளிகளின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. மருத்துவமனை ஊழியர் ஒருவரின் கருத்துப்படி, “இந்த சம்பவத்திற்குப் பிறகு, சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. இப்போது முன்பு வந்த நோயாளிகளில் பாதி பேர் மட்டுமே வருகின்றனர்”.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விஸ்வாஸ் ஜான்சன் கூறுகையில், “இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த எனக்கு இங்கேயே சுலபமாக வேலை கிடைத்தது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வருகிறார்கள், ஆனால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் இருந்து வருகிறார்கள்” என்றார்.
“இங்கே மருத்துவப் படிப்புகளுக்கான படிப்புச் சூழல் சிறப்பாக உள்ளது. இருப்பினும், துணை மருத்துவ படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை” என்று கூறும் விஸ்வாஸ் பயத்தில் இருக்கிறார்.
“வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. மாணவர்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. டாக்டர் ஷாஹினா சயீத் எங்களுக்கு கல்வி கற்பித்தார், டாக்டர் முஜம்மிலையும் நான் இங்கு பலமுறை பார்த்திருக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.
பெயர் வெளியிட விரும்பாத மருத்துவ மாணவர் ஒருவர், “மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்டால், அது அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கலாம். புதிதாக சேர்ந்த மாணவர்களிடையே இன்னும் அதிகமான பயமும் பதற்றமும் உள்ளது” என்றார்.
“மாணவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது” என மற்றொரு மாணவர் தெரிவித்தார்.
இங்கு 11 ஆண்டுகளாக பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஒருவரின் கூற்றுப்படி, மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களும் அச்சமடைந்துள்ளனர்.
“இங்கு பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற எதையும் நான் கேள்விப்பட்டதே இல்லை. இப்போது, விசாரணை நடந்து வருகிறது, போலீசார் அடிக்கடி வருகிறார்கள். இது இங்கு வேலை செய்பவர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது” என்று அவர் கூறுகிறார்.

வெடிபொருட்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டன?
அல் ஃபலா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில் வாகனங்களை ஒரு போலீஸ்காரர் சரிபார்க்கிறார்.
ஹரியாணா காவல்துறையின் கூற்றுப்படி, டாக்டர் முஜம்மில் அளித்த தகவலின் பேரில், அல் ஃபலா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தௌஜ் மற்றும் ஃபதேபூர் தாகா கிராமங்களில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
தௌஜ் கிராமத்தில் அறை ஒன்றை டாக்டர் முஜம்மில் வாடகைக்கு எடுத்திருந்தார், அங்கிருந்தே அதிக அளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ஹரியாணா காவல்துறையுடன் இணைந்து ஃபரிதாபாத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் விரிவான தகவல்களை வழங்கியிருந்தது.
இதுவரை 2900 கிலோவிற்கும் அதிகமான ஐஈடி தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பிற ரசாயன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு செப்டம்பரில் டாக்டர் முஜம்மில், தௌஜ் கிராமத்தில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்திருந்தார். அங்கும் விசாரணை நிறுவனங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
அந்த வீட்டின் உரிமையாளரையும் போலீசார் விசாரித்தனர், அவரும் அச்சத்தில் உறைந்துள்ளார். ஃபதேபூர் தாகா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டெஹ்ரா குடியிருப்பின் முடிவில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வீடு இப்போது திறந்தே உள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பேசுவதற்கு பயப்படுகிறார்கள்.
அந்த வீட்டிற்கு நேர் எதிரே வசிக்கும் பெண் ஒருவரிடம் பிபிசி பேசியது. “இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் இங்கு வந்தனர். இந்த அறையை மருத்துவர் ஒருவர் வாடகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஊடகங்களில் வெளிவருவதற்கு முன்பு நான் அவரை இங்கு பார்த்ததும் இல்லை, அவரது பெயரைக் கேள்விப்பட்டதும் இல்லை” என்று கூறினார்.
இந்த வீட்டில் வேறு சிலரும் வாடகைக்கு வசிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அப்போது இங்கே இல்லை. வீட்டின் உரிமையாளர் நூர் முகமது இஷ்தியாக், அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உள்ள மசூதியின் இமாமாகவும் உள்ளார், அவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய நூர் முகமது இஷ்தியாக்-இன் சகோதரர், வீட்டிலுள்ள அறைகளில் ஒன்றை டாக்டர் முஜம்மிலுக்கு வாடகைக்கு கொடுத்ததாகக் கூறினார்.
தனது சகோதரனை நிரபராதி என்று கூறிய அவர், “என்னுடைய சகோதரர் மசூதியின் இமாமாக இருபது வருடங்களாக இருக்கிறார். இமாம் என்ற முறையில், பிரார்த்தனை செய்ய வந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்களிடம் அவர் பேசுவார். இதைத் தவிர, அவருக்கு யாருடனும் எந்தவிதத் தொடர்பும் இல்லை” என்றார்.

விசாரணை வளையம் விரிவாகிறது
அல்-ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை தொடர்கிறது. புதன்கிழமை பல மாநில போலீசாரும், மத்திய முகமைகளின் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, விசாரணை முகமைகளின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முதல்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
புதன்கிழமை இரவு நிலவரப்படி, அல்-ஃபலாபல்கலைக்கழக வளாகத்தில் பல புலனாய்வுக் குழுக்கள் இருந்தன. “இப்போது முன்பை விட அதிகமான போலீசார் வருகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது” என்று பல்கலைக்கழக வாயிலில் இருக்கும் பாதுகாவலர் தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில், பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்த ஒருவர், “இங்கே சிகிச்சைக்கான செலவு குறைவாகவே இருக்கும், அதனால் இங்கு வருகிறோம்” என்று கூறினார்.
செங்கோட்டை அருகே நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணை, பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் இந்தக் கேள்விகளால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
“பல்கலைக்கழகத்தின் பெயர் இவ்வளவு பெரிய தாக்குதலுடன் இணைக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது அது எங்கள் அனைவரின் எதிர்காலத்தையும் பாதிக்கும். பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் எங்களைப் போன்ற மாணவர்களையும் பாதிக்கும்” என்று மாணவர் ஒருவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு