6
நம் வீதியில் நடந்து விட்டால்
நம் வலி புரிந்திடுமா
கை அசைத்தவர்கள் கதை சொன்னால்
எம் வலி மறைந்திடுமா…
கொட்டிடும் மழையிலும் வீசிடும் புயலிலும்
இடிந்திடுமோ சுவர், கூரை பறந்திடுமோ என
பதை பதைத்திடும் எம்மனம் எவர்க்கது புரிந்திடும்
வாளிகள் அனைத்திலும் தேடிய பின்னரும்
சமைத்திட எதுவெனும்
கிடைத்திடுமோ என
அழுதிடும் எம்வலி தினம் தினம் தொடருது.
இரவென்ன பகலென்ன
குழிரென்ன வெயிலென்ன
உடல்நிலை எதுவென்ன
பாராமல் உழைத்திட்ட –
பணம் ஒருவேளை உணவிற்கும்
மாதாந்த தவணைக்கும்
செலுத்திடும் பரிதாபம்
மாறாதே யார் கேட்பார்
கோரங்கள் பல கண்டு
வாழ்வே பாவமாய் ஆயினும்
நம் நம்பிக்கை காத்திடும்
தெய்வங்கள் கூட இங்கே வாழ்ந்திட வழி இல்லை
திடீரென முளைத்திடும் சிலை
அதற்கெனவே காத்திருக்கும் தொல்லியல் படை
கேள்வி கேட்டால் என்றுமே கிடைக்காத விடை
இதுதானே எம் வாழ்வின் நிலை…
போராட்டம் போராட்டமாய்
வாழ்வியல் என்றுமே தீர்வு இன்றிய
மாறாத நிலை ஆட்சிகளும் மாறிடும் ஆட்சியாளர்களும்
ஆனாலும் எம் மக்கள் எப்போதும் அப்படியே
நம் மக்கள் மனம் புரிந்து
உரிமைகள் அவை தெரிந்து மனங்களை ஆட்சி செய்ய
அவர் போல யாரும் இல்லை
என்றும் மறவோம் உமை…
டர்சன்