ஊட்டி / கோவை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆபத்தான பகுதிகளில் யாரும் நடமாட வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மதியம் 1 மணிக்கு பைக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டாவது மைல் என்ற இடத்தில் மரம் முறிந்து விழுந்ததில், கேரள மாநிலம் முகேரிவடகரையை சேர்ந்த பிரசித் என்பவரது மகன் ஆதிதேவ் (15) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அஞ்சலி செலுத்தினார்.
கனமழையால் ஓவேலி காட்டாற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானையை விரட்டும் காவலராக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவர், கேரளாவை சேர்ந்த தனது நண்பர்கள் ஆண்டோதாமஸ் (53), அருண்தாமஸ் (44) ஆகியோருடன் நேற்று நள்ளிரவு ஓவேலி அண்ணா நகர் – தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, ஆற்றை கடக்க முயன்றபோது, கார் வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் காரின் மீது ஏறி நின்று, தங்களை காப்பாற்றுமாறு சத்தமிட்டனர். தகவலின்பேரில் கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, மூவரையும் உயிருடன் மீட்டனர்.
மரங்கள் விழுந்தன: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுக்கு மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையில் இருந்த கற்பூர மரம் சாலையின் நடுவே விழுந்தது. வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து கம்பிச்சோலை செல்லும் சாலையில் கற்பூர மரம் விழுந்தது. மரக்கிளைகள் மின் கம்பங்கள் மீது விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனுக்குடன் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர்.
மழை அளவு விவரம்: கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி- 215, எமரால்டு- 94, பந்தலூர்- 93, சேரங்கோடு- 90, தேவாலா- 87, அப்பர் பவானி, கூடலூர்-74 செருமுள்ளி, ஓவேலி, பாடந்தொரை- 60 மில்லிமீட்டர் மழை அளவு பதிவானது.
அருவிகளில் குளிக்கத் தடை: தென்மேற்கு பருவமழை காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆழியாறு கவியருவி, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நடுமலை ஆறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக 160 அடி உயரம்கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 12.11 அடியாக உயர்ந்தது. வால்பாறையில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆறுகளில் இறங்கி குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக வால்பாறையில் பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் முகாமிட்டுள்ளனர். நேற்று ஆழியாறு சுற்றுப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையோரம் இருந்த மரம் வேருடன் சாய்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது.
போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி காரை மீட்டனர். ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆழியாறு மற்றும் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலாபயணிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் காற்று அடிக்கும் போது மரத்தின் அருகில் நிற்கவோ காரை நிறுத்தவோ கூடாது எனவும் மீட்புக் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த 5 மாதங்களாக நீரின்றி காணப்பட்ட கவியருவியில் தற்போது நீர் வரத்து அதிகரித்து, தடுப்பு வேலிகளை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): சோலையாறு – 73, வால்பாறை – 54, மேல் நீராறு – 137, கீழ்நீராறு – 95, காடம்பாறை -9, வேட்டைக்காரன்புதூர்-14.2, மணக்கடவு-31, தூணக்கடவு-40, பெருவாரிப்பள்ளம்-42, பொள் ளாச்சி-42.4, பரம்பிக்குளம்-30, ஆழியாறு-30.4.
பரளிக்காடு சூழல் சுற்றுலா: கோவை மாவட்டம், பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பரளிக்காடு என்ற இடத்தில் வனத்துறை சார்பில் சனி ,ஞாயிற்றுகிழமைகள் மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “காரமடை வனச்சரகம் பரளிக்காடு மற்றும் பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்த சென்னை மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் பரளிக்காடு சுற்றுலா தலத்திற்கு நேற்று வந்துவிட்டனர். இதனால் பரிசல் பயணம் மட்டும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆற்றில் குளிக்க யாரையும் அனுமதிக்கவில்லை” என்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு மும்மூர்த்தி வழிபாடு நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள தோணி ஆற்றின் நடுவே பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழை நீர், இந்த அருவியின் வழியாக திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. கோடை காலங்களில் அருவியில் குளிப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாகவே அருவியில் பாதுகாப்பான அளவில் நீர்வரத்து இருந்த நிலையில், கடந்த 24-ம் தேதி கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. அன்றைய தினம் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படவில்லை. இன்றும் அதே நிலையே நீடித்ததால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்படுவதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். எனினும் கோயில் வழிபாடு வழக்கம்போல நடைபெற்றது.
வீடுகள் சேதம்: கனமழை காரணமாக கோவை நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சித்திரைச்சாவடி தடுப்பணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வால்பாறை தேவிப்பட்டணம் மற்றும் சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் இரு வீடுகள் சேதமடைந்தன. கிணத்துக்கடவில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.