அ.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வைகைச்செல்வன் கடிதம் ஒன்றை அனுப்பிள்ளார். அக்கடிதத்தில்,
அதிமுக விலகி சென்றுவிட்டது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்.
ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.
திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம் திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்துவிட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதால் வெற்றிப்பாதையில் இருந்து அதிமுக விலகி சென்றுவிட்டது.
மேலும் தேர்தல் களத்தில் தான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றினேன். ஆனால் மரணத்தை விடக்கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
கடுமையான வலி
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று- என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன்.
மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப்பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.
நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன்.
‘புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப்போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப்போல்’ இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை…, என்று கூறியுள்ளார்.