பட மூலாதாரம், ANI
முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து மேகாலயா கிரிகெட் வீரர் ஆகாஷ் சௌத்ரி வரலாறு படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆடிய அந்த இன்னிங்ஸில் தொடர்ந்து 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை அவர் விளாசினார்.
முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் அவர்.
வேகப் பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை பிளேட் டிவிஷனின் குரூப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார். சூரத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மேகாலயா அணியின் ஸ்கோர் 576/6 என இருந்தபோது அவர் களமிறங்கினார்.
மேகாலயா அணி முதல் இன்னிங்ஸில் 628/6 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்ய, தொடர்ந்து விளையாடிய அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ் சாதனை சமன்
ஆகாஷ் சௌத்ரிக்கு முன்னதாக முதல் தரப் போட்டிகளில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தவர்கள் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ் மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் மட்டுமே. . தென்னாப்பிரிக்காவின் மைக் ப்ராக்டரும் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால், இருவேறு ஓவர்களில் அவர் 6 சிக்ஸர்களை அடித்தார்.