• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

‘ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கி’ கடனில் மூழ்கிய ஆற்காடு நவாப் முகமது அலி என்ன ஆனார்?

Byadmin

Mar 5, 2026


ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கி கடனில் மூழ்கிய ஆற்காடு நவாப் முகமது அலி என்ன ஆனார்?

பட மூலாதாரம், Getty Images

“செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் செயின்ட் டேவிட் கோட்டை பிரெஞ்சுகாரர்களால் கைப்பற்றப்பட்டபோது முகமது அலி அளித்த உதவியும் ஆதரவும்தான் ஆங்கிலேயர்களின் வலிமைக்குக் காரணம்.

இன்று இந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆற்காடு நவாபின் உதவியின்றி அது சாத்தியமாயிருக்காது, இந்த நாட்டின் விவகாரங்களில் நம் மக்களுக்கு[ஆங்கிலேயர்கள்] பதிலாக, பிரெஞ்சுகாரர்கள் அதிக அதிகாரத்துடன் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்” – சர் அயர்கூட்

ஆங்கிலேயர் ஆதரவின்றி நவாப் முகமது அலி தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆளுநர் ஜார்ஜ் மக்கர்ட்னி (1781-85) கூறியபோது, பிரெஞ்சுபடையை வந்தவாசி போரில் (1760) தோற்கடித்து இந்தியாவில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமைத் தளபதி சர் அயர்கூட் தெரிவித்த கருத்து இது.

யார் இந்த ஆற்காடு நவாப்?

தக்காணத்தில் மராத்தியர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க ஔரங்கசீப் சுல்பிகர் அலிகான் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார். மராத்தியர்களுடன் நடந்த சண்டையில்(1698) சுல்பிகர் அலி வெற்றி பெற்று செஞ்சி கோட்டையைக் கைப்பற்றினார். அதற்காக அவருக்கு கர்நாடக நவாப் பதவி வழங்கப்பட்டது.

சுல்பிகர் அலி கிழக்கிந்திய கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பு வைத்து, அதன் முக்கிய நிர்வாகிகளுக்கு நிறைய வெகுமதி வழங்கி நட்பை வளர்த்தார். டெல்லியில் அவருக்கு மற்றொரு உயர் பதவி வழங்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக 1701இல் தாவூத் கான் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

By admin