படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் தலைவர் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தனது ராணுவம் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளது.
ஜெய்சங்கரின் கருத்துகள் “ஆத்திரமூட்டுபவை, ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று நடந்த ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில்’ ஆசிம் முனீர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “இன்று பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது அதன் 80 ஆண்டுகால வரலாற்றின் பிரதிபலிப்பாகும்” என்று கூறியிருந்தார்.
மேலும், “பாகிஸ்தானில் ஏதோ ஒரு விதத்தில் ராணுவமே ஆட்சி செய்கிறது. சில நேரங்களில் ராணுவம் வெளிப்படையாக இதைச் செய்கிறது, சில நேரங்களில் திரைக்குப் பின்னால் இருந்து செய்கிறது,” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
பிபிசி உருதுவின்படி, “பாகிஸ்தான் ஒரு பொறுப்புள்ள நாடு, ஆயுதப்படைகள் உட்பட அதன் அனைத்து அமைப்புகளும் தேசிய பாதுகாப்பின் வலுவான தூண்களாகும். இந்த அமைப்புகள் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உறுதியுடன் உள்ளன,” என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி தெரிவித்தார்.
“மே 2025-இல் நடந்த மோதல் பாகிஸ்தான் ராணுவத்தின் தொழில்முறை திறன் மற்றும் தாய்நாட்டைப் பாதுகாக்கும் அதன் உறுதியைத் தெளிவாக நிரூபித்துள்ளது. எந்தவொரு தவறான பிரசாரமும் இந்த உண்மையை மறுக்க முடியாது,” என்று அந்த செய்தித் தொடர்பாளார் தெரிவித்தார்.
“பாகிஸ்தானின் அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்த இந்தியத் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு திட்டமிட்ட தவறான பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். இத்தகைய ஆத்திரமூட்டும் கருத்துகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான இந்தியாவின் அக்கறை இல்லாமையைக் காட்டுகின்றன,” என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜெய்சங்கர் பாகிஸ்தான் பற்றி என்ன கூறினார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, ஆசிம் முனீருக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமையன்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில்’ ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, “நல்ல பயங்கரவாதிகள் மற்றும் கெட்ட பயங்கரவாதிகள் என்ற பேச்சு இருப்பதைப் போல, நல்ல ராணுவத் தலைவர்கள் மற்றும் அவ்வளவு நல்ல ராணுவத் தலைவர்கள் அல்லாதவர்கள் என்ற பேச்சும் உள்ளது,” என்று கருத்து தெரிவித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் விவகாரம் மற்றும் பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது ஜெய்சங்கர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
“பாகிஸ்தானில் புதிய பாதுகாப்புப் படைத் தளபதியின் கைகளில் அதிகாரம் குவிந்திருப்பதாகக் காணப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஆசிம் முனீர் இவ்வளவு ஆழமாக அதிகாரத்தில் வேரூன்றியிருப்பது இந்தியாவுக்குச் சாதகமா அல்லது பாதகமா?” என்று ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது.
“நமது பெரும்பாலான பிரச்னைகள் அங்கிருந்துதான் (பாகிஸ்தான் ராணுவம்) எழுகின்றன,” என்று அவர் கூறினார்.
“இந்தியா ராஜ்ஜிய அழுத்தத்தில் உள்ளதா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “பாகிஸ்தானின் நிலைமையை பாருங்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான திறன்கள் மற்றும் நற்பெயரில் வேறுபாட்டையும் பாருங்கள். நாம் நம்மை அதனுடன் (பாகிஸ்தானுடன்) அதிகமாக இணைத்துக் கொள்ளவோ அல்லது அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்படவோ தேவையில்லை. ஆம், சில பிரச்னைகள் உள்ளன, அவற்றை நாங்கள் கையாள்வோம்,” என்றார்.
‘ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா வேறுவிதமாக எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தனவா’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, இந்தியா போன்ற ஒரு நாடு சில விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
“பாருங்கள், இதை நான் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் செய்யும் சில விஷயங்கள் உள்ளன, மேலும் நாம் செய்யாத சில விஷயங்கள் உள்ளன. அதனால்தான் நாம் இந்தியா. நமக்கு நமது சொந்த விதிகள், நமது சொந்த தரநிலைகள் உள்ளன. நாங்கள் ஒரு நடவடிக்கை எடுத்தால், இந்த நாட்டில் அதற்குக் கணக்கு கூற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு, ஊடகங்களுக்கு மற்றும் சமூகத்திற்கு. இதுபோன்ற விஷயங்களைச் சொல்வது மிகவும் எளிது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆகஸ்ட் 2024 இல் தனது அரசாங்கம் வீழ்ந்ததிலிருந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.
ஷேக் ஹசீனா விவகாரம்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில், பதவியில் இருந்து அகற்றப்பட்ட வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது தொடர்பான கேள்விக்கும் ஜெய்சங்கர் பதிலளித்தார்.
“ஷேக் ஹசீனா இந்தியாவில் எத்தனை காலம் வேண்டுமானாலும் தங்க முடியுமா?” என்று ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “பதவியில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது, அவர் கடந்த ஆண்டு டெல்லிக்கு வந்த ‘சிறப்புச் சூழ்நிலைகளைப்’ பொறுத்தது,” என்று கூறினார்.
கடந்த மாதம் வங்கதேசத்தில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டங்கள் மற்றும் அவரது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியா வந்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
“அவர் ஒரு ‘சிறப்புச் சூழ்நிலையில்’ புதுடெல்லிக்கு வந்து சேர்ந்தார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“அந்தச் சூழ்நிலைதான், அவருக்கு அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இறுதியில், இது அவர் (ஷேக் ஹசீனா) எடுக்க வேண்டிய முடிவு,” என்று ஜெய்சங்கர் கூறினார்.
தீர்ப்புக்குப் பிறகு, ஷேக் ஹசீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தத் தீர்ப்பு தவறானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.
இதையடுத்து, ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் இந்தியாவைக் கேட்டுக்கொண்டது.
நாடு கடத்தல் ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு, இரு தலைவர்களையும் திரும்ப ஒப்படைக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது என்று வங்கதேசம் கூறியது.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்த இந்தியா, இந்தத் தீர்ப்பைத் தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகக் கூறியது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், “நெருங்கிய அண்டை நாடாக, அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கிய வங்கதேச மக்களின் சிறந்த நலன்களை காக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.