பட மூலாதாரம், Getty Images
“நீங்கள் சாம்பியன்களாக வெற்றி பெற்றுள்ளீர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால், இந்த தொடரில் பாகிஸ்தான் அணியிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது.
முதலில் நீங்கள் கைகுலுக்கவில்லை. பிறகு கோப்பைக்கான புகைப்படம் எடுக்கவும் வரவில்லை, அதற்குப் பிறகு அரசியல் ரீதியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நீங்கள் நடத்தினீர்கள்.
கிரிக்கெட் வரலாற்றில் அரசியலை கொண்டு வந்த முதல் கேப்டன் நீங்கள்தான் என்று நினைக்கிறீர்களா?” என்று சூர்யகுமார் யாதவிடம் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
“நீங்கள் பேச விரும்புகிறீர்களா இல்லையா. கோபம் வந்துவிட்டதா? உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை, நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு கேள்வி கேட்டுவிட்டீர்கள்” என்று சூர்யகுமார் யாதவ் ஒரு சிரிப்புடன் அந்தப் பத்திரிகையாளரிடம் கேட்டார்.
அந்த நிகழ்வு துபையில் நடைபெற்றது. T20 ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்புதான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சக வீரர் அபிஷேக் சர்மாவுடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அந்த நேரத்தில் சூர்யகுமார் சிரிப்புடன் பதிலளிக்க முயன்றாலும், அதன்பிறகும் பல முறை அவரிடம் இது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
“நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்தோம், கிரிக்கெட் விளையாடினோம். போட்டி முழுவதும் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினோம். முதல் போட்டியில் எடுத்த நிலைப்பாட்டைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சூர்யகுமார் கூறினார்.
“முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். போட்டியின் போது, ஒரு குறிப்பிட்ட நபர் கோப்பையை வழங்கினால் அதை ஏற்கக்கூடாது என்று அரசாங்கத்திலிருந்தோ அல்லது பிசிசிஐயில் இருந்தோ யாரும் எங்களிடம் கூறவில்லை. மைதானத்தில் நாங்கள் தான் அந்த முடிவை எடுத்தோம்.
அவர்கள் (ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள்) மேடையில் நின்றிருந்தார்கள், நாங்கள் கீழே நின்று கொண்டிருந்தோம். அவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தேன், ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. பின்னர் கூட்டத்தில் ஒருவர் கூச்சலிடத் தொடங்கினார். அதன்பிறகு, அவர்களின் பிரதிநிதியாக இருந்த ஒருவர் கோப்பையுடன் வெளியேறுவதைப் பார்த்தோம்”என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியபோது சூர்யகுமார் யாதவ் விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
கேப்டனின் கருத்தும் கிரிக்கெட் வாரியத்தின் கருத்தும்
பத்திரிகையாளர் சந்திப்பில், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெறாதது அணியின் கூட்டு முடிவு என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
அதேநேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் பெற்றபோதிலும் கோப்பை வழங்கப்படாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்த அவர், ஒரு சாம்பியன் அணி கோப்பையைப் பெறாமல் இருப்பதை நான் பார்த்ததில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுவும் கடின உழைப்பால் வென்ற ஒரு கோப்பை. நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். நான் வேறு எதுவும் சொல்ல முடியாது, நான் என் கருத்தைத் தெளிவுபடுத்திவிட்டேன்” என்றார்.
பத்திரிகையாளர் ஒருவர், இந்த முடிவு அதிகாரப்பூர்வமானதா என்று கேட்க, “நாங்கள் மைதானத்திலேயே முடிவெடுத்தோம். யாரும் எங்களுக்கு சொல்லவில்லை. நீங்கள் போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும்போது கோப்பைக்குத் தகுதியானவரா இல்லையா? நீங்களே சொல்லுங்கள்,” என்றார்.
இருப்பினும், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் கூறியதை வைத்து பார்க்கும்போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க வேண்டாம் என்று வீரர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி முடிவு எடுத்ததாக தெரியவில்லை.
“ஏசிசி தலைவரிடமிருந்து 2025 ஆசிய கோப்பை கோப்பையை நாங்கள் ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அவர் பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அதனால்தான் அவரிடமிருந்து அதை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கோப்பையும் பதக்கங்களும் அவரிடம் இருக்கும் என்று அர்த்தமல்ல. அவை விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நவம்பரில் துபையில் ஒரு ஐசிசி கூட்டம் உள்ளது. ஏசிசி தலைவருக்கு எதிராக நாங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்வோம்,” என்று சைகியா ஏஎன்ஐயிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பையில் சர்ச்சை எங்கிருந்து தொடங்கியது?
இந்த ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்தது. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளைச் சுற்றி அதிகமான சர்ச்சைகள் எழுந்தன.
செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், டாஸ் நேரத்தில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கவில்லை. போட்டி முடிந்த பிறகும் அவர் கைகுலுக்கவில்லை.
“ஆசியக் கோப்பை தொடரில், ஆரம்பத்திலிருந்தே அரசியல் சூழல் உருவாக்கப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கைகோர்க்காது என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது, இந்த முடிவில் கிரிக்கெட் வாரியமும் அரசாங்கமும் ஒத்துழைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது” என்று கிரிக்கெட் ஆய்வாளர் அயாஸ் மேமன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
‘விளையாட்டில் அரசியலைக் கொண்டுவராதீர்கள்’
முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்தார்.
இந்தியா டுடேவிடம் பேசிய அவர், வீரர்களுக்கு தனிப்பட்ட உணர்வுகள் இருக்கலாம், ஆனால் அரசாங்கமும் பிசிசிஐயும் ஆட்டம் (இந்தியா-பாகிஸ்தான் போட்டி) நடைபெறும் என்று முடிவு செய்தவுடன், கிரிக்கெட் வீரரின் வேலை வெறுமனே சிறப்பாக செயல்படுவதுதான் என்று கூறினார்.
எதிரணி வீரருடன் கைகுலுக்காதது குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாகவும், கோப்பையை ஏற்காதது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்றும், இந்த பிரச்னையை ‘இழுத்தடிக்க’ கூடாது என்றும் அவர் கூறினார்.
”நீங்கள் முன்னேற வேண்டும். அரசாங்கம் அதன் வேலையைச் செய்யட்டும், அரசியல்வாதிகள் அவர்களின் வேலையைச் செய்யட்டும். நமது வேலை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதுதான், இந்திய அணி அதை (ஆசிய கோப்பையில்) ஒரு முறை அல்ல, மூன்று முறை செய்துள்ளது என்று நான் நம்புகிறேன்” என்று கபில் பதில் அளித்தார்.
அயாஸ் மேமனும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
“விளையாட்டை அரசியலுடன் இணைக்கும் போக்கு முடிவுக்கு வர வேண்டும். ஐசிசி, கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் அரசாங்கங்கள் இணைந்து ஒரு தீர்வை காண வேண்டும். ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் இது நடக்க வேண்டும் என வீரர்கள் விரும்புவார்கள் என்று நினைக்கவில்லை. அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் சொந்தமான சுதந்திரமான கருத்து இருக்க வேண்டும்”என்று அயாஸ் மேமன் குறிப்பிட்டார்.
இந்த போட்டி முழுவதும், இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் போட்டியிட்டு சிறப்பாக விளையாடி, ஆசிய கோப்பையை ஒன்பதாவது முறையாக வென்றது. ஆனால், இந்த சாதனை சர்ச்சைகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது.
“ஆசியக் கோப்பையில் இந்தியா எடுத்த நிலைப்பாடு, அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் எதிர்வினை மற்றும் இறுதிப் போட்டியின் உச்சக்கட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுத் தளத்தில் இது நடக்கக்கூடாது” என்று அயாஸ் மேமன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் நடத்தை குறித்து பாகிஸ்தான் என்ன சொன்னது?
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் இந்த தொடர் முழுவதும் இந்தியாவின் நடத்தை குறித்து கேட்கப்பட்டது.
அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும், சூர்யகுமார் யாதவ் அணியின் நடத்தை “அவமரியாதைக்குரியது” என்று அவர் விவரித்தார்.
“இந்தப் தொடரில் நடந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஒரு நல்ல அணி ஒருபோதும் அவர்கள் செய்தது போல் நடந்து கொள்ளாது. நாங்கள் பதக்கங்களைப் பெற காத்திருந்தோம். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே கோப்பையுடன் தனித்தனியாக புகைப்படங்களை எடுத்தோம். அவர்கள் ஆட்டத்தை அவமதிக்கிறார்கள். நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் இது அவமானகரமானது”என்றார்.
மேலும், சூர்யகுமார் யாதவ் தொடர் தொடத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் நடுவர்கள் கூட்டத்திலும் தன்னுடன் கைகுலுக்கியதாக சல்மான் கூறினார்.
ஆனால் கேமரா முன்னிலையில் மட்டும் கைகுலுக்க மறுக்கிறார்கள் என்றும், இந்திய வீரர்கள் யாரோ ஒருவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுகிறார்கள் என நம்புகிறேன் என்றும், ஆனால் முடிவு அவரிடம் இருந்தால் அவர் நிச்சயமாக கைகுலுக்குவார் என்றும் தெரிவித்தார்.
அடுத்து என்ன?
துபையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் ஏற்பட்ட சர்ச்சைகள், எதிர்காலத்தில் கிரிக்கெட் தொடர்பாக இரு நாடுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.
“இன்னும் சில நாட்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் உலகக் கோப்பையில் மோத உள்ளன. அங்கேயும் இதே போன்ற சூழ்நிலை உருவாகுமா?” என்று அயாஸ் மேமன் கேட்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் அக்டோபர் 5-ஆம் தேதி இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் மோதவுள்ளன. இது தவிர, 2026 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இந்தியா T20 உலகக் கோப்பையை நடத்தவுள்ளது. அப்போது மீண்டும் இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உள்ளது.
“இது ஐசிசி போட்டியாக இருந்தால், இரு நாடுகளின் அணிகளும் விளையாடவேண்டும். ஆனால், ஐசிசி பிசிசிஐ மற்றும் இந்திய அரசாங்கத்துடன் பேசி, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் ஒரு தீர்வை காண வேண்டும்” என்கிறார் அயாஸ் மேமன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.