பட மூலாதாரம், Getty Images
துபை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.
இந்த வெற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அழைக்கப்படுகிறது. காரணம், 40 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது.
இந்த முறை நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. சூர்யகுமார் தலைமையில், இந்தியா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்து, இறுதிப் போட்டி உட்பட 7 போட்டிகளையும் வென்றது.
இந்த முழு தொடரிலும் இந்தியா உண்மையான சாம்பியனாக செயல்பட்டது. முதல் போட்டியில் இருந்து இறுதி வரை இந்தியா ஒருபோதும் பின்னடைவைச் சந்திக்கவில்லை.
இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியா சற்று பின்தங்கியதாகத் தோன்றினாலும், சூழ்நிலையை நேர்மறையாக சமாளித்து வெற்றியை வசமாக்கியது .
இந்தத் தொடரில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் இறுதியில் மீண்டு எழும் என எதிர்பார்க்கப்பட்டாலும், திலக் வர்மா அவர்களின் நம்பிக்கையை முறியடித்தார்.
இந்தியா திட்டமிட்டு, நம்பிக்கையுடன் விளையாடி தொடரை வென்றது. அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு காரணமான ஐந்து முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
1. தன்னம்பிக்கை நிறைந்த அணி
இந்தத் தொடரின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு எதிரணியை எதிர்கொள்ளும் போதும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி வந்தது.
விராட், ரோஹித் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், புதிய பேட்டிங் மற்றும் பந்துவீச்சுத் திட்டத்துடன் இந்திய அணி இந்த தொடரில் இறங்கியது குறித்து பேசப்பட்டது.
எந்த சூழ்நிலையிலும் இந்தியா வெற்றி பெறுவதற்கான முயற்சியையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியாக இருந்தாலும் சரி, இலங்கைக்கு எதிரான சூப்பர் ஓவர் போட்டியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு முறையும் வெற்றிக்காக இந்திய அணி கடைசி வரை போராடியது.
இறுதிப் போட்டியின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அந்த நம்பிக்கை பலனளித்தது.
பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் ஒரு கட்டத்தில் 1 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தபோதிலும், இந்திய பந்து வீச்சாளர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடி, விக்கெட்டுகளைக் வீழ்த்த தொடங்கி, பின்னர் பாகிஸ்தானை 146 ரன்கள் என்ற நிலைக்குக் கொண்டு சென்றார்.
பேட்டிங்கில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சீக்கிரமே ஆட்டமிழந்தாலும், திலக், சஞ்சு, சிவம் மூவரும் பொறுப்பை ஏற்று, வெற்றியை எளிதாக்கினார்கள்.
அணியின் ஒவ்வொரு வீரரும் தங்கள் மீதும், சக வீரர்கள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை, இந்த வெற்றி வெளிப்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
2. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு
இந்தத் தொடர் முழுவதும் இந்தியாவின் பந்துவீச்சு குறித்து அதிகம் பேசப்பட்டது.
குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடினர்.
இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றார். 7 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தத் தொடரின் சிறந்த பந்து வீச்சாளராகவும் குல்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வருண் சக்ரவர்த்தியும் அக்சர் படேலும் அதிக விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும், மிடில் ஓவர்களில் துல்லியமாகப் பந்து வீசி பேட்ஸ்மேன்களை அழுத்தத்தில் வைத்தது குல்தீப்பிற்கு பெரும் ஆதரவாக இருந்தது.
பல போட்டிகளில் இவர்களின் பந்துவீச்சு, இந்திய பேட்ஸ்மேன்கள் அழுத்தமின்றி விளையாட உதவியது.
இந்த மூவரின் சுழல் பந்துவீச்சுக்கு எந்த ஆசிய அணியின் பேட்ஸ்மேன்களாலும் தப்ப முடியவில்லை. ஒரு கட்டத்தில் பும்ராவின் பந்துவீச்சை சமாளித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும், இறுதியில் இந்திய சுழற்பந்து வீச்சுக்கு அடிபணிய வேண்டியிருந்தது.
இறுதிப் போட்டியில் 10 பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் 8 பேர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்தில் சிக்கினர்.
பட மூலாதாரம், Getty Images
3. வலிமையான பேட்டிங்
இந்தத் தொடரின் முக்கியமான போட்டிகளில், திறமையான பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை இந்தியா அணியில் சேர்க்கவில்லை. இதைப் பற்றி அதிகமாக விவாதம் நடந்தாலும், இது திட்டமிட்ட முடிவாக இருந்தது.
போட்டியில் வெற்றி பெற, வலிமையான பேட்டிங் அவசியம் என்பதால், இந்தியா எட்டு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்தது.
இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு, இந்தத் தொடர் முழுவதும் பயனுள்ளதாக இருந்தது. பல போட்டிகளில், அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே அடித்து ஆடி, மற்ற பேட்ஸ்மேன்கள் மீது இருந்த அழுத்தத்தை குறைத்தார்.
வலிமையான பேட்டிங், முந்தைய சில போட்டிகளில் பயனளித்திருந்தாலும், இறுதிப் போட்டியில் விக்கெட்டுகள் வேகமாக விழுந்தபோது இந்த முடிவின் முக்கியத்துவம் உணரப்பட்டது.
இந்தியாவின் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவாக சரிந்தபோதிலும், சஞ்சு சாம்சனும், சிவமும், திலக்கும் அணியை நிலைநிறுத்தினர்.
இதன் மூலம், பேட்ஸ்மேன்கள் விக்கெட்டைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் சிறப்பாக விளையாடத் தேவையான மன அமைதி கிடைத்தது.
4. வெற்றி பெற்ற சிவம் துபேயின் முயற்சி
பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டி உட்பட, இந்தத் தொடரில் பல பேட்ஸ்மேன்களும் பந்து வீச்சாளர்களும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
ஆனால், சிவம் துபேயின் ஆட்டம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
குறிப்பாக இறுதிப் போட்டியில் அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை கையாண்ட விதம், முக்கிய ஆயுதமாக அவரை மாற்றியது.
இறுதி போட்டியில் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்தது இந்தியாவுக்கு பெரிய சிக்கலாக இருந்தது. பும்ராவைத் தவிர, அணியில் இருந்த ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யாதான். ஆனால் அவரது காயம் காரணமாக, அர்ஷ்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கும், இந்தியா ஏழு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் என்ற பேச்சு எழுந்தது.
ஆனால் எட்டு பேட்ஸ்மேன்களை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணி நிர்வாகம் சிவம் துபேவுக்கு இறுதியில் வாய்ப்பு கொடுத்தது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அவர் பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றினார்.
முதல் இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பேட்டிங்கில் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணை நின்றார்.
செப்டம்பர் 21-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடி, சரியான நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், சிவம் துபே வடிவில் இந்திய அணிக்கு மற்றொரு திறமையான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
பட மூலாதாரம், Getty Images
5. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா
இந்திய அணிக்காக விளையாடிய அனைவரும் ஆசியக் கோப்பையை வெல்வதற்கு சமமாக பங்களித்தனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இறுதிப் போட்டியில் திலக்கின் 69 ரன்கள் இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றிருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் இந்தியா வெறும் 20 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்த நிலையில் திலக் களமிறங்கினார். அவர் சஞ்சு சாம்சனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸை நிலைநிறுத்தினார்.
பின்னர் ஷிவம் துபேயின் உதவியுடன் வெற்றியை நிறைவு செய்தார்.
மிகுந்த நிதானத்துடன் விளையாடி, பந்துகளை கவனமாகக் கையாண்ட திலக், இறுதி வரை போராடி இந்தியாவுக்காக வெற்றியை வசப்படுத்தினார்.
53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் விளையாடி, திலக் 69 ரன்கள் எடுத்தார்.
இது இறுதிப் போட்டியில் நடந்த சாதனை. ஆனால் முழுத் தொடரிலும் திலக் வர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடியுள்ளார். அபிஷேக் சர்மாவின் அபாரமான பேட்டிங் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், இந்திய அணிக்காக இரண்டாவது முறையாக சிறந்த ஆட்டத்தை திலக் வெளிப்படுத்தியுள்ளார்.
திலக் இந்தத் தொடரில் 213 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராகவும் உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் இந்தியாவுக்காக சராசரியாக 71 ரன்கள் எடுத்துள்ளார்.
இதனால், 2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு திலக் வர்மா முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன் மூலம், இந்தியா வெற்றிக்கு உதவும் ஒரு புதிய வீரரை கண்டுபிடித்துள்ளது எனலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு