துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஹர்திக் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்தது. பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப், பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொள்ளும் பந்துகள் அனைத்தையும் அடித்து ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். முகமது ஹாரிஸ் , பும்ராவின் பந்தை அடித்து ஆட முற்பட்டு ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் அளித்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் பும்ராவின் பந்து வீச்சில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். சர்வதேச T20 போட்டிகளில் பும்ரா பந்துவீச்சில் 2 சிக்சர்களை அடித்த பேட்டர் 6 பேர் மட்டுமே என கிரிக் இன்ஃபோ இணையதளம் கூறுகிறது. இந்த பட்டியலில் ஃபர்ஹானும் இணைந்துள்ளார்.
ஃபர்ஹானின் அதிரடியால், பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. ஆனால் ஃபர்ஹானும் குல்தீப்பின் சுழலில் வீழ்ந்தார்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்தது.
இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலை தாண்டியும், ஷஹீன் ஷா அஃப்ரிடியின் அதிரடியால் பாகிஸ்தான் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
கடைசி ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களை அவர் பறக்கவிட்டார். 16 பந்துகளில் அஃப்ரிடி 33 ரன்களை சேர்த்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்த போட்டி புதிய அத்யாயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி அபாரமான துவக்கம்
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ஷஹீன் ஷா அஃப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சிக்சர் மற்றும் பவுண்டரியை பறக்கவிட்டார்.
சயீம் அயூப் வீசிய கேரம் பந்தில், சுப்மன் கில் பவுல்டு ஆகி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 2 ஓவர்களில் 22 ரன்களை சேர்த்திருந்தது.
13 பந்துகளில் 31 ரன்களை எடுத்து அபிஷேக் ஷர்மா, சயீம் அயூப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் இந்திய அணியின் பேட்டிங் வேகம் குறையவில்லை.
பவர் பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது.
பவர்பிளேவுக்கு பின் நிதானம்
பவர்பிளே முடிந்த பின்னர் இந்திய பேட்டர்கள் நிதான ஆட்டத்திற்கு திரும்பினர். பவர்பிளேக்கு பிந்தைய 6 ஓவர்களில் இந்திய அணி 36 ரன்களை மட்டுமே சேர்த்தது. 12வது ஓவரில் திலக் வர்மா கொடுத்த கேட்சை முகமது நவாஸ் தவற விட்டார்.
இருப்பினும் சயீப் பந்து வீச்சில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். இந்த சூழலில் கடைசி 8 ஓவர்களில் இந்திய அணிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிக்சர் அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.
4.1 ஓவர்கள் மற்றும் 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில், இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. முதல் பந்தில் அயூப்பின் விக்கெட்டை வீழ்த்தியது முதலே தொடங்கிய இந்திய அணியின் ஆதிக்கம் போட்டி முழுமைக்கும் நீடித்தது.
போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கை கொடுக்கவில்லை. பேட்டர்கள் சூர்ய குமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே மைதானத்திலிருந்து வெளியேறினர். பாகிஸ்தான் வீரர்களும் இதனை எதிர்பார்க்காதது போலவே வெளியேறினர். பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே அமைதியற்ற சூழல் மற்றும் இதனைத் தொடர்ந்த ராணுவ நடவடிக்கைகள் இரு தரப்பு உறவை பாதித்தன. இதன் பின்னர் நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத் தக்கது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு விராட் கோலி, ரோஹித் மற்றும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்காத நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்த போட்டி புதிய அத்யாயமாக பார்க்கப்படுகிறது.
டி20 ஆசியக் கோப்பையில், பாகிஸ்தானை 2 முறை தோற்கடித்து இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் ஒரு முறை வென்றுள்ளது. இந்த நிலையில் இன்று இந்திய அணி மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
கேப்டன்கள் கூறியது என்ன?
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங் தேர்வு செய்தார்.
டாஸிற்கு பிறகு பேசிய அவர், முதலில் பேட் செய்து ரன்களை சேர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம். அதனால் டாஸ் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. எங்கள் அணி வீரர்கள் வலிமையாக தயாராகியுள்ளனர். இரவில் பேட்டிங் செய்வது சற்று எளிதாக இருக்கும்” என தெரிவித்தார்.
இதுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ள 13 போட்டிகளில் 10 போட்டிகளில் இந்தியா டாஸ் வென்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் (இன்றைய போட்டியையும் சேர்த்து) பாகிஸ்தான் டாஸ் வென்றுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரு அணிகள் மோதியுள்ள 13 போட்டிகளில் 10 போட்டிகளில் இந்தியா டாஸ் வென்றுள்ளது.
பிளேயிங் XI:
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் தூபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்கரவர்த்தி களமிறங்கினர்.
பாகிஸ்தான் அணியில் சல்மான் ஆகா தலைமையில், ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹரிஸ், ஃபகர் ஸமான், ஹசன் நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், அஃப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமத் களமிறங்கினர்.