பட மூலாதாரம், Getty Images
2025 ஆசிய கோப்பை போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கி நடந்துவருகிறது. இந்தநிலையில், எந்த அணி எந்த பிரிவில் உள்ளது, இந்தியா–பாகிஸ்தான் ஆட்டம் எப்போது, முக்கிய அணிகளின் பலம், பலவீனம் உள்ளிட்ட ஆசிய கோப்பை குறித்த முக்கிய தகவல்கள் இங்கே.
ஆசிய கோப்பை வரலாறு
பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பை முதல்முதலில் 1984 இல், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடையே நடத்தப்பட்டது. 2004 முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த நிலையில், 2020-ல் கொரோனா காரணமாக தடைப்பட்டது.
கடைசியாக 2023இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி,10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதுவரை இந்திய அணி, எட்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அடுத்தபடியாக, இலங்கை அணி ஆறு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டா? டி20 கிரிக்கெட்டா?
பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் போட்டியாக நடைபெற்று வந்த ஆசிய கோப்பை, சமீப காலமாக ஒருநாள், டி20 என மாறிமாறி நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து நடைபெறும் உலகக் கோப்பை எந்த வடிவம் (format) என்பதைப் பொறுத்து ஆசிய கோப்பையின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. 2026இல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு இந்த ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்படுகிறது.
ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்த முறை எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. துணை அணிகளுக்கான 2024 ACC ஆடவர் பிரீமியர் கோப்பையில், முதல் மூன்று இடங்களை பிடித்த யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை எப்போது?
பட மூலாதாரம், Getty Images
எட்டு அணிகளும் இரு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யூஏஇ, ஓமன் அணிகள் இடம்பிடித்துள்ளன. .
குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தமது குரூப்பில் இடம்பெற்றுள்ள பிற அணிகளுடன் ஒருமுறை மோதும். குரூப் சுற்றில் முதலிரு இடங்களைப் பிடித்த நான்கு அணிகளும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும்.
அந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள், இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக, இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம் என இந்திய அணி அறிவித்துள்ளது.
அதேசமயம், உலகக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகள், சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் விளையாடும் என தெளிவுபடுத்தியுள்ளது.
செப்டம்பர் 14 அன்று (ஞாயிற்றுக்கிழமை) துபையில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும் பட்சத்தில் இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை மோதும் சூழல் ஏற்படும்.
ஆசிய கோப்பையில், இதுவரை ஒருமுறை கூட இரு அணிகளும் ஃபைனலில் நேருக்கு நேர் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது?
பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி, சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, டி20 தரவரிசையில் முதன்மை பேட்டராக உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வேலைப்பளுவை கருத்தில்கொண்டு 3 டெஸ்ட்களில் மட்டும் விளையாடிய பும்ரா, உலகக் கோப்பைக்கு பிறகு முதல்முறையாக டி20 தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தானை பொறுத்தவரை, நட்சத்திர வீரர்கள் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இல்லாத நிலையில், புத்தம் புதிய அணுகுமுறையுடன் புத்தம் புதிய அணியாக களமிறங்குகிறது.
சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணி மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது.
எப்போது, எங்கே நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
17-வது ஆசிய கோப்பை போட்டி, செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் இந்த போட்டியின் (Tournament) ஆட்டங்கள் துபை, அபுதாபியில் நடக்கின்றன.
உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு ஆட்டங்கள் தொடங்குகின்றன. அதாவது இந்திய நேரப்படி இரவு 8.30 மணி ஆகும்.
ஒரேயொரு நாள் மட்டும் இரு போட்டிகள் (Double-Header) நடைபெறுகின்றன. உள்ளூர் நேரப்படி முதல் ஆட்டம் மாலை 4 மணிக்கும் இரண்டாவது ஆட்டம் 6.30 மணிக்கும் (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி மற்றும் இரவு 8 மணி) தொடங்குகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
இந்தமுறை ஆசிய கோப்பையை இந்தியா நடத்தினாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எல்லா ஆட்டங்களும் நடைபெறுகின்றன.
பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாக பிரச்னைகள் தொடர்வதால், இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் அந்த நாடு விளையாட முடியாத சூழல் உள்ளது.
பாகிஸ்தானில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் போது, இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோல, ஏற்பாடு வசதிகளை கருத்தில்கொண்டு, எல்லா ஆட்டங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகின்றன.
கவனம் ஈர்க்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்
பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பையில் இந்தமுறை, இந்திய வம்சாவளி வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளில் தலா ஆறு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர ஹாங்காங் அணியிலும் 3 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யூஏஇ(ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங் கவனம் ஈர்த்துள்ளார்.
பஞ்சாபில் பிறந்த இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். கொரோனா காலத்தில் துபையில் மாட்டிக்கொண்ட சிம்ரன்ஜீத் சிங், யூஏஇ அணியையே தனது தேசிய அணியாக மாற்றுக்கொண்டுவிட்டார்.
யூஏஇ அணியின் பேட்டர் ஆர்யான்ஷ் சர்மாவும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய வம்சாவளி வீரர்கள் வரிசையில் உள்ளார்.
உத்தரபிரதேசம் காஸியாபாத்தை சேர்ந்த இவர், சிறு வயதிலேயே, குடும்பத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
புனேவை பூர்விகமாக கொண்ட பராஷர் மீதும் கிரிக்கெட் உலகின் பார்வை திரும்பியுள்ளது. நான்கு வயதிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய அவர், தற்போது யூஏஇ அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.
பஞ்சாபின் லூதியானாவில் இருந்து ஓமனுக்கு குடிபெயர்ந்த ஜடிண்டர் சிங், ஓமன் அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர் மீது கிரிக்கெட் உலகின் பார்வை விழுந்துள்ளது.
போபாலில் இருந்து கிளம்பிச் சென்று தற்போது ஓமன் அணியின் லெக் ஸ்பின்னராக உள்ள ஸ்ரீவஸ்தவாவும் அந்நாட்டு ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற வீரராக மாறியுள்ளார்.
போட்டி அட்டவணை
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை (குரூப் ஏ பிரிவு)
- செப்டம்பர் 10 : இந்தியா Vs யூஏஇ, துபை– இரவு 8.00 IST
- செப்டம்பர் 14: இந்தியா Vs பாகிஸ்தான், துபை– இரவு 8.00 IST
- செப்டம்பர் 19: இந்தியா Vs ஓமன் , அபுதாபி– இரவு 8.00 IST
பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை (குரூப் ஏ பிரிவு)
- செப்டம்பர் 12: பாகிஸ்தான் Vs ஓமன், துபை – இரவு 8.00 IST
- செப்டம்பர் 14: பாகிஸ்தான் Vs இந்தியா, துபை– இரவு 8.00 IST
- செப்டம்பர் 17: பாகிஸ்தான் Vs ஐக்கிய அரபு அமீரகம், துபை– இரவு 8.00 IST
சூப்பர் ஃபோர் அட்டவணை
- செப் 20: B1 Vs B2 (துபை) – இரவு 8:00 IST
- செப் 21: A1 Vs A2 (துபை) – இரவு 8:00 IST
- செப் 23: A2 Vs B1 (அபுதாபி) – இரவு 8:00 IST
- செப் 24: A1 Vs B2 (துபை) – இரவு 8:00 IST
- செப் 25: A2 Vs B2 (துபை) – இரவு 8:00 IST
- செப் 26: A1 Vs B1 (துபை) – இரவு 8:00 IST
இறுதிப்போட்டி எப்போது?
- செப் 28: ஃபைனல் (துபை) – இரவு 8:00 IST
ஆசிய கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி கோப்பை வெல்லும் அணிக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் 2.6 கோடி) இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 150,000 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி) கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
களமிறங்கும் வீரர்கள் யார் யார்?
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி:
சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்
பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது , ஃபஹீம் அஷ்ரப் , ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப் , ஹசன் அலி, ஹசன் நவாஸ் , ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா , முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது சவாஸ், முகமது நவாஸ், முகமது வஸீம் ஜுனியர், ஃபர்ஹான், சைம் அயூப் , சல்மான் மிர்சா, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுஃப்யான் மொகிம்
இலங்கை அணி:
சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, கமில் மிஷாரா, தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, மஹீஸ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, நுவான் துஷாரா, மதீஷா பதிரானா
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு