• Wed. Oct 16th, 2024

24×7 Live News

Apdin News

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் குறிக்கோளுடன் இலங்கை

Byadmin

Oct 16, 2024


இந்தியாவில் நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் குறிக்கோளுடன் இலங்கை பங்குபற்றவுள்ளது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 அத்தியாயங்களில் இலங்கை ஆறு தடவைகள் சம்பியனாகியுள்ளதுடன் இந்த வருடமும் சம்பினாவதற்கு முயற்சிக்கவுள்ளது.

கொவிட்-19 தொற்று நோய் தாக்கம் காரணமாக தென் கொரியாவில் நடைபெறவிருந்த 12ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப், இரத்துச் செய்யப்பட்டது.

இப் போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்தபோதிலும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற தன்மை காரணமாக இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை அணி இன்று காலை இந்தியா நோக்கி விமானம் மூலம் புற்பட்டுச் சென்றது.

பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரினி அமரசூரிவை இலங்கை வலைபந்தாட்ட அணியினர் நேற்று மாலை சந்தித்தனர்.

இலங்கை அணியன் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றிவந்தவரும் வலைபந்தாட்ட உலகில் மிகவும் உயரமானவருமான தர்ஜினி சிவலிங்கம் இம்முறை அணியில் இடம்பெறவில்லை.

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற உலக கிண்ண வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்புடன் அவர் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் இலங்கை வலைபந்தாட்ட அணிக்கு குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் பாடசாலையின் முன்னாள் வீராங்கனையும் ஹட்டன் நெஷனல் வங்கி வீராங்கனையுமான துலங்கி வன்னித்திலக்க தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வீராங்கனைகளும் முன்னாள் தலைவிகளுமான கயனி திசாநாயக்க, கயஞ்சலி அமரவன்ச ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர்.

திசலா அல்கம, ஹசித்தா மெண்டிஸ், மல்மி ஹெட்டிஆராச்சி, ரஷ்மி பெரேரா ஆகியோர் அணியில் இடம்பெறும் அனுபவசாலிகளாவர்.

ஷானிக்கா பெரேரா, சுசீமா பண்டார, காயத்திரி கௌஷல்யா,  சச்சினி ரொட்றிகோ,   குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை வீராங்கனை சலனி நீஷா ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக அணியில் இடம்பெறுகின்றனர்.

‘இலங்கை வலைபந்தாட்ட அணி சமபலம் கொண்டது. சமகால தலைவியுடன் முன்னாள் அணித் தலைவிகள் இருவரும் அனுபவசாலிகள் நால்வரும் அணியில் இடம்பெறுகின்றனர். ஐவர் அறிமுக வீராங்கனைகளாவர். இந்த வருடமும் எம்மால் சாதிக்க முடியும் என நம்புகிறேன். இருப்பினும் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர், மலேசியா, ஹொங்கொங் ஆகிய அணிகளிடம் சவாலை எதிர்கொள்ள நேரிடும்’ என அணியின் பயிற்றநர் பி.டி.என். ப்ரசாதி தெரிவித்தார்.

இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலா உள்ளக அரங்கில் அக்டோபர் 18ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஏ குழுவில்  பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, இந்தியா, முன்னாள் சம்பியன் மலேசியா, ஜப்பான், மாலைதீவுகள் ஆகிய அணிகளை லீக் சுற்றில் இலங்கை எதிர்த்தாடும்.

பி குழுவில் முன்னாள் சம்பியன் சிங்கப்பூர், தாய்லாந்து, ஹொங்கொங், புருணை, பாஹ்ரெய்ன், ஈராக் (பங்குபற்றுவது உறுதியில்லை), சைனீஸ் தாப்ப்பே ஆகியன இடம்பெறுகின்றன.

லீக் சுற்று முடிவில் நிரல்படுத்தல் போட்டிகள், அரை இறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன நடைபெறும்.

By admin