• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் | பிரதமர் ஹரிணி 

Byadmin

Oct 1, 2025


ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்வித் துறையில் இடமாற்றங்களை நிராகரிப்பது நீண்ட காலமாக நிலவும் நடைமுறையாக உள்ளது. இது இடமாற்றங்களுக்கு இணங்காத பொதுச் சேவையில் உள்ள ஒரே துறையாகும். இத்தகைய இடமாற்றங்களுக்கு இணங்கத் தவறிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பது தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துத் துறைகளுக்கும் ஒரு ஒதுக்கீட்டு முறைமையின் அடிப்படையில் இந்தக் கொள்கை செயற்படுத்தப்படுவதுடன், இயலாமையுடைய மாணவர்களுக்கு தகுதி அடிப்படையிலான மாவட்ட ஒதுக்கீட்டு முறைமையின் மூலமாகவும் அனைத்துத் துறைகளுக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் கல்வி தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

By admin