0
கல்வித்துறையில் தற்போது எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று (22) ‘இசுருபாய’ கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் அதிகரிப்பதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமரிடம் முன்வைத்தனர்.
அவ்வேளை கருத்து தெரிவித்த பிரதமர், கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் மாற்றங்களுக்கு அமைய, தேசிய கல்வி நிறுவனம் (NIE), கல்வி ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து எடுத்த கூட்டுத் தீர்மானமே இதுவாகும்.
புதிய சீர்திருத்தங்களின் கீழ், வகுப்பறை மதிப்பீட்டு முறையின் போது ஆசிரியர்கள் மதிப்பீடுகளைச் செய்வதற்கும், மாணவர்கள் கல்வி மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்கும் ஏதுவாக, ஒரு பாடவேளையை 50 நிமிடங்கள் வரை நீடிக்க வேண்டியுள்ளதாக பிரதமர் விளக்கமளித்தார்.
இருப்பினும், இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து மீண்டும் மீளாய்வு (Review) செய்யப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
அண்மைக்காலமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. தற்போது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ள பாடசாலைகளை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து, அப்பிரதேச மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குத் திருப்புவதற்கான துரித நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடலில் பிரதி கல்வி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.







