18
பிரான்ஸின் சனரி-சுர்-மெரில் (Sanary-sur-Mer) அமைந்துள்ள ஒரு பாடசாலையில் 60 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மாணவரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதுடைய குறித்த மாணவன், ஆசிரியரை பலமுறை கத்தியால் குத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த ஆசிரியர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆசிரியரின் உடலில் மூன்று அல்லது நான்கு கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக உள்ளூர் சட்டத்தரணி ரபேல் பாலண்ட் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குறித்த மாணவன் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவருக்கு முன்னதாக எந்தக் குற்றப் பதிவும் இல்லையெனவும், இந்தச் சம்பவம் மத அல்லது அரசியல் நோக்கங்களுடன் தொடர்புடையதல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் பிரான்ஸ் பாடசாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.