9
ஈரானில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு வெளியே மாணவி ஒருவர் உள்ளாடைகளுடன் நடமாடிய நிலையில் கைதுசெய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் இந்நடவடிக்கை, ஈரானில் உள்ள கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் என்று மாணவர் குழுக்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் கூறியுள்ளன.
சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்தக் காணொளியை, சர்வதேச மன்னிப்பு சபையும் பகிர்ந்துள்ளது.
அதில், அந்தப் பெண் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ளாடையுடன் மற்றும் தலைமுடியை அவிழ்த்த வண்ணம் அமர்ந்திருப்பதையும் பின்னர் நடமாடுவதையும் காட்டுகிறது.
தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறைகேடான நடைமுறைக்கு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், மாணவி கைது செய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
2022ஆம் ஆண்டில் ஈரான் முழுவதும் ஆடைக் கட்டுப்பாடுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், தலையில் முக்காடு சரியாக அணியவில்லை என்று கைதுசெய்யப்பட்ட பின்னர் அறநெறிப் பொலிஸாரின் காவலில் மரணித்த சம்பவமும் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், பல ஈரானியப் பெண்கள் பொது இடங்களில் தங்கள் முக்காடுகளை அகற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து இடம்பெற்ற வன்முறைகளின்போது பலர் கொல்லப்பட்டனர்.