மதுரை: “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுபோன்ற கொடூர செயல்களுக்கு இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளதே முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் தெரிந்தும், தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுவால் தமிழ்ச் சமூகம் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை நாட்டில் உள்ள 4 கோடி பெண்களுக்கும் நடந்த ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியதாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து சில நாட்கள் பேசினோம், பிறகு மறந்துவிட்டோம். தமிழகம் சமூக நீதி மண், பெண் விடுதலை என பேசும் நிலையில் பெண்களுக்கான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கொடுமைகளை தடுக்க மது விற்பனையை முழுமையாக அரசு தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு மாதத்தில் எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) பணிகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பணியில் பூத் அளவிலான அதிகாரிகள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அனைவரின் வீடுகளுக்கும் செல்ல வேண்டும். அவ்வாறு செல்கிறார்களா என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.
எஸ்ஐஆர் படிவங்கள் அரசியல் கட்சியினரிடம் செல்லாமல் இருப்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அப்படிச் சென்றால் பிள்ளையார் பிடிக்கச் சென்று குரங்கை பிடித்த கதையாகிவிடும். எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்வது மிகவும் எளிமையாக உள்ளது. உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபடும் நிலை இல்லை. சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களை நீக்க வேண்டும். எஸ்ஐஆர் பணி தொடர்பாக மக்களுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எஸ்ஐஆர் பணியில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். எஸ்ஐஆர் பணியில் தவறு நடந்தால் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். எஸ்ஐஆர் கணக்கெடுப்பின்போது வாக்குகள் விடுபடும் என திமுகவினர்தான் பேசி வருகின்றனர். தமிழக வாக்காளர்கள் பெயர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்வதில் திமுகவுக்கும் பங்கு உண்டு.
கடந்த தேர்தலின்போது திமுக ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத் துறையில் லஞ்சம் கொடுத்து பணி பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யக் கூடாது. பணத்தை அடிப்படையாக கொண்டு இளைஞர்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டால் திறமையான இளைஞர்கள் எங்கு செல்வார்கள்? நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திமுக அரசு உண்மையை சொல்ல வேண்டும். திமுக அரசு நாடகங்கள் நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை.
சட்டப் பேரவை உறுப்பினரை வைத்து கட்சியின் வளர்ச்சியை கணக்கிடக் கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995-க்கு முன்பு, பின்பு என பிரித்து பார்க்க வேண்டும். புதிய தமிழகம் கட்சி தொடங்கிய பிறகு பட்டியலின மக்களில் ஒருவர் கூட மதமாற்றம் செய்யப்படவில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருந்த பட்டியலின மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி போராட்ட களத்துக்கு வரவழைத்துள்ளோம். தென் மாவட்டங்களில் 1995-க்கு முன்பு வாக்குப் பதிவு குறைவாகவே இருந்தது. புதிய தமிழகம் கட்சி தொடங்கிய பிறகு வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது. கட்சியும் வளர்ந்துள்ளது.
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 7-ல் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டப்பேரவையில் மட்டும் அல்ல, ஆட்சியிலும் பங்கு கொடுக்கும் அளவில்தான் எங்கள் கூட்டணி அமையும். அமைச்சரவையில் பங்கேற்றால்தான் மக்களின் குறைகளை போக்க முடியும். அதற்கான அரசியல் களத்தை அமைப்போம்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.