• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

ஆண் போல வேடமிட்டு வாழ முயன்ற லெஸ்பியன் பெண்கள் – 19ஆம் நூற்றாண்டில் எப்படி வாழ்ந்தனர்?

Byadmin

Oct 31, 2026


1800-ஆம் ஆண்டில், பாரிஸில் பெண்கள் கால்சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

    • எழுதியவர், கேத் பவுண்ட்
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த 1800ஆம் ஆண்டில், பாரிஸில் பெண்கள் கால்சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் பல பெண்கள் இந்தச் சட்டத்தை மீறியோ, அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்தோ, ஆண்களைப் போல் உடையணியவும், சில நேரங்களில் ஆண்களைப் போலவே வாழவும் முயன்றனர்.

அவர்களின் தனித்துவமான ஆடை அலங்காரத்தையும் துணிச்சலையும் படம்பிடித்துக் காட்டும் 10 புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

பிரெஞ்சு புரட்சியின்போது (1789-1799), பாரிஸை சேர்ந்த பல பெண்கள் ஆண் போராட்டக்காரர்களுடன் இணைந்து தடுப்பு அரண்களில் போராடுவதற்காக கால்சட்டை அணிந்தனர். ஆண்களுக்கு இணையான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பெற வேண்டும் என்ற அவர்களின் விருப்பம், பெண்களின் உரிமைகள் குறித்த பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்தப் பிரகடனத்தை எழுதிய ஒலிம்ப் டி கூஜ், 1793ஆம் ஆண்டு “இயற்கைக்கு மாறான” பெண் என்று குற்றம்சாட்டப்பட்டு கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், 1800ஆம் ஆண்டில், பாரிஸில் பெண்கள் கால்சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. “பெண்கள் உரிமைகளைக் கோரி, தங்கள் சமூகத்தின் அரசியல் வாழ்க்கையில் பங்கேற்க விரும்பிய காலகட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காகவே” இந்தத் தடை விதிக்கப்பட்டதாக, பாரிஸில் உள்ள பலே கல்லியேராவில் நடைபெறும் ‘ஒருவருக்கான சொந்த ஆடை அலமாரி: 19ஆம் நூற்றாண்டில் மாறுபட்ட பெண்மைகள்’ (A Wardrobe of One’s Own: Dissident Femininities in the 19th Century) என்ற புதிய கண்காட்சியின் கண்காணிப்பாளர் மரின் கிசியல் கூறுகிறார்.

கடந்த 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் பெண்கள், மனைவி மற்றும் தாய் என்ற பாத்திரத்தில் திருப்தியடைந்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டனர். ஓவியர்கள் மற்றும் கவிஞர்களால் போற்றப்படுபவர்களாகவும், பெண்மைக்குரிய ஆடைகளால் அடையாளப்படுத்தப்படுபவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஏராளமான பிரெஞ்சுப் பெண்கள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். குறிப்பாக, 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், பெண்ணியத்தின் முதல் அலை பாரிஸில் வளர்ந்து வந்த லெஸ்பியன் துணைக் கலாசாரத்துடன் இணைந்தபோது இந்த எதிர்ப்பு தீவிரமடைந்தது.



By admin