பட மூலாதாரம், mayiladuthurai.nic.in
2025, மார்ச் 1-ஆம் தேதி தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
மூன்றரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மூன்றரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 16 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாவட்டத்தில் நேற்று நடந்த போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்து தெரிவித்தார்.
கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்குச் சென்ற மூன்றரை வயது பெண் குழந்தை மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு அந்த குழந்தையே காரணம் என்று பேசியுள்ளார்.
“சீர்காழியில் கடந்த 24-ந் தேதி அங்கன்வாடிக்கு சென்ற அக்குழந்தை 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் அந்த குழந்தையே தவறாக நடந்து கொண்டிருக்கிறது.
எனக்கு கிடைத்த தகவலின்படி அந்த குழந்தை, சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே இரண்டு தரப்பையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஆட்சியரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த சூழ்நிலையில் ஆட்சியர் மகாபாரதியை உடனடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு எந்த பணியும் அறிவிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் சீமான் ஆஜர் – என்ன நடந்தது?
நடிகை ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை ஏமாற்றியதாக 2011-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை சீமான் நாடிய நிலையில், கடந்த மாதம் சீமானின் கோரிக்கையை ரத்து செய்தது.
அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு 12 வாரங்களுக்குள் விசாரணையை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த சூழலில் நேற்று இரவு 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானை காவல் துறை இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் விசாரித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு சீமான் அளித்த பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.
சீமானின் வருகையை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் அத்துமீறினால் கைது செய்து அழைத்து செல்ல பேருந்துகளையும் காவல்துறையினர் தயார் நிலையில் வைத்திருந்தனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பட மூலாதாரம், Hindu Tamil Thisai
சேலம்: குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு பெண் மருத்துவா் சஸ்பெண்ட்
சேலத்தில் தனியாா் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த அரசு பெண் மருத்துவா், செவிலியா்கள் 8 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இடைத்தரகா்கள் மூலம் அழைத்து வரப்படும் கா்ப்பிணிகளுக்கு சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறைக்கு புகாா் சென்றது.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ரமேஷ்குமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஸ்கேன் மையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஸ்கேன் மையத்தை ஆச்சங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவா் முத்தமிழ், தெடாவூா் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் கலைமணி ஆகிய இருவரும் நடத்தி வந்ததும், பல ஆண்டுகளாகவே கா்ப்பிணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து இவா்கள் தெரிவித்து வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஸ்கேன் மையத்தில் இருந்த ஆவணங்கள், பரிசோதனைக் கருவிகள் அனைத்தையும் பறிமுதல் செய்த மருத்துவக் குழுவினா், அந்த மையத்துக்கு சீல் வைத்தனா். இதுதொடா்பாக மருத்துவா் முத்தமிழ், தெடாவூரைச் சோ்ந்த செவிலியா் கலைமணி, சேலத்தை சோ்ந்த செவிலியா் அம்பிகா ஆகியோரிடம் சேலம் மாவட்ட மருத்துவத் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
அதன்பிறகு மருத்துவா் முத்தமிழ், செவிலியா் கலைமணி, இவா்களுக்கு உடந்தையாக செயல்பட்ட7 செவிலியர்களையும் பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ
சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“சூரியனின் புறவெளியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2023-ல் விண்ணில் செலுத்தியது. மொத்தம் 127 நாள்கள் பயணித்து பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘எல் 1’ எனும் லாக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய சுற்றுப் பாதையில் அந்த விண்கலம் கடந்த ஆண்டு நிலைநிறுத்தப்பட்டது.
அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியா் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூட் எனப்படும் ஆய்வுக் கருவி மூலம் சூரியனின் வெளி அடுக்குகளில் இதுவரை அறியப்படாத ஒளி வெடிப்பு உமிழ்வை ஆதித்யா விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது.
ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலாா் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனப்படும் சூட் கருவியானது சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிா்கள் குறித்தும், புற ஊதா கதிா்களுக்கு அருகே ஏற்படும் கதிா் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.
பொதுவாகவே சூரியனின் காந்தப் புலத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களால் ஒளி வெடிப்பு ஏற்பட்டு கதிா் ஆற்றல் வெளிப்படும். இதை சோலாா் ஃப்ளோ் என அழைக்கிறோம். அத்தகைய ஒளி வெடிப்பு அண்மையில் சூரியனின் கீழ் புறவெளியில் நிகழ்ந்ததை சூட் கருவி காட்சிப்படுத்தியுள்ளது,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், www.isro.gov.in
தமிழ் பேசுபவர்களுக்கு போலீஸ் சேவையில் இடம் – பிரதி அமைச்சர் உறுதி
நாட்டின் பாதுகாப்புக்கும் பொது மக்களின் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் திணைக்களத்தின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்று வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழி மூலமான உறுப்பினர்களை போலீஸ் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறதென தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Virakesari
நாடாளுமன்றத்தில் 28-ஆம் தேதி பேசிய அவர், “நாடு என்ற வகையில் முன்னுக்கு செல்ல பொருளாதார ஸ்திரத்ன்மை அத்தியாவசியமாகும். அதேபோன்று சுற்றுச்சூழல் தொடர்பான உணர்வு இருக்க வேண்டும். அதேபோன்று நாட்டின் நல்லாட்சி முக்கியமாகும். இந்த விடயங்களை முன்கொண்டு செல்ல பொலிஸாரின் அர்ப்பணிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். பொலிஸ் திணைக்களம் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் திணைக்களமாகும். அதனால் இந்த திணைக்களத்தின் தேவைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டில் இனவாதம் தலைதூக்க பிரதான காரணமாக அமைவது அரச துறைக்கு சென்று தங்களின் தாய்மொழில் பிரச்னையை தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்போதாகும். குறிப்பாக வட மாகாண உறுப்பினர்கள் இதுதொடர்பில் அவர்களின் கவலையை இந்த சபையில் தெரிவித்திருந்தனர். அதனால் பொலிஸ் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வெற்றிடங்களை நிரப்பும்போது தமிழ் மொழி மூலமான உறுப்பினர்களை இணைத்து வடமாகாண மக்களின் கவலையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்,” என்று கூறியதாக வீரகேசரி இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு