திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் வேறு இடங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் கேட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் இம்முடிவு, ஆந்திரப் பிரதேசத்தில், பக்தர்களிடம் நிதி பெற்று நடத்தப்படும் பிற கோவில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
திருமலையில் உள்ள திருப்பதி பாலாஜி கோவிலில் இந்து அல்லாத ஊழியர்களை நியமிக்க வேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சமீபத்தில் முடிவு செய்துள்ளது.
இந்து அல்லாதவர்களை, வேறு துறைகளில் நியமிக்க அல்லது விருப்ப ஓய்வு (VRS) எடுத்துக்கொள்ள அவர்களை அனுமதிக்குமாறு மாநில அரசை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேவஸ்தான தலைவர் கூறியது என்ன?
திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், 2018-ல் தெலங்கானா உயர் நீதிமன்றம், ‘இந்து அல்லாத ஊழியர்களுக்கு பாகுபாடு காட்ட முடியாது, அவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள்’ என்று இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்தது.
“இந்த சர்ச்சையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். ஒருதலைப்பட்சமாக எந்த முடிவையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை” என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி ஆர் நாயுடு பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
“இந்து அல்லாத பணியாளர்கள் குறித்த லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கை கிடைத்ததும், அவர்களை எப்படி மற்ற துறைகளில் பணியமர்த்தலாம் அல்லது அவர்கள் எப்படி விருப்ப ஓய்வு எடுக்கலாம் என்று அவர்களைச் சந்தித்து ஆலோசிப்பேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“அவர்களை எங்கு அனுப்புவது என்பது அடுத்த விஷயம். இந்த விவகாரத்தில் அரசின் உதவியை பெறுவோம்,” என்றும் அவர் கூறினார்.
நாயுடு கூறுகையில், “தேவஸ்தானத்தில், இந்துக்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கோவிலின் புனிதம் குறித்து பக்தர்களிடையே சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
முன்னாள் அதிகாரி என்ன சொன்னார்?
“திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள விதிகள் மற்ற அனைத்து இந்து கோவில்களுக்கும் பொருந்தும்” என ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ், பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
இந்து அல்லாதவர்கள் திருப்பதி கோவிலில் பணியாற்றவில்லை என்றால், அவர்களால் ஸ்ரீசைலம், அன்னவரம் அல்லது ஸ்ரீகாளஹஸ்தியிலும் பணி செய்ய முடியாது என்பது அவரது கருத்து.
2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணிபுரிய முடியும் என தனது கருத்தை நியாயப்படுத்துகிறார் கிருஷ்ணா ராவ்.
1988-ஆம் ஆண்டு தான் முதன் முறையாக தேவஸ்தானத்தில், இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தில் பணியாற்ற தடை பிறப்பிக்கப்பட்டது.
அப்போது தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனங்களுக்கு இதில் இருந்து விதிவிலக்கு கிடைத்தது .
ஆனால், 2007-ஆம் ஆண்டு, கல்வி நிறுவனங்களிலும் இந்து அல்லாதவர்களை நியமிக்க தடை விதித்து, அரசு உத்தரவு பிறப்பித்தது.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ரகசிய ஆய்வு நடத்தி ஒளிபரப்பிய செய்தியைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஞாயிறன்று தேவாலயம் செல்ல தேவஸ்தான அதிகாரி ஒருவர் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வாகனத்தைப் பயன்படுத்தினார் என்பதே அந்த செய்தி.
இதைத் தொடர்ந்து, சில ஊழியர்கள் தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதற்குப் பிறகு, இந்து அல்லாத ஊழியர்களை தேவஸ்தானத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரசாரம் வேகமெடுத்தது.
நீதிமன்றம் என்ன சொன்னது?
தெலங்கானா உயர்நீதிமன்றத்தில், அரசு ஊழியர்களிடையே மதத்தின் அடிப்படையில் தேவஸ்தானம் பாகுபாடு காட்ட முடியாது என்று நீதிபதிகள் ரமேஷ் ரங்கநாதன் மற்றும் கே.விஜய லட்சுமி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
“தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தேவஸ்தானம் மேல்முறையீடு செய்ய வேண்டும். இது நீதிமன்றத்தின் தவறான முடிவு என்று தான் கூறுவேன்” என இந்த உத்தரவு குறித்து கிருஷ்ணாராவ் கூறினார்.
“தேவஸ்தான ஊழியர்களுக்குப் பல இடங்களில் பதவி வழங்கப்பட்டுள்ளது. எங்களின் மத நம்பிக்கை வேறு, ஆனால் நாங்கள் ஒரு இந்து கோவிலில் வேலை செய்ய விரும்புகின்றோம் என நீங்கள் கூற முடியாது,” என்று மேற்கோள் காட்டிய கிருஷ்ணாராவ் , “கோவிலின் செயல்பாட்டிற்கு அரசின் நிதி பயன்படுத்தப்படவில்லை. தேவஸ்தானம் அல்லது இதர கோவில்களுக்கு கிடைக்கும் வருமானம் பக்தர்களிடமிருந்தே வருகிறது,” என்றும் குறிப்பிட்டார்.
“இதன் அடிப்படையில் இந்துக்கள் மட்டுமே இங்கு பணியாற்ற வேண்டும்” என்றார் அவர்.
அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) செய்தித் தொடர்பாளர் என்.வி.சுபாஷ், தேவஸ்தானத்தின் முடிவை வரவேற்றுள்ளார்.
“இந்து அல்லாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படப் போவதில்லை. மாறாக அவர்கள் வேறு பணிகளுக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்,” என்று கூறினார்.
“ஜெகன் மோகன் ஆட்சியின் போது தேவஸ்தானத்தில் பணியாற்றிய சிலர் இந்து மதத்தை சாராதவர்கள். இது கோவிலின் புனிதத்தை சீர்குலைத்துள்ளதால், பக்தர்களின் நம்பிக்கை உடைந்துள்ளது” என்று அவர் கூறினார்.
“இந்து ஒருவர் தர்கா அல்லது தேவாலயத்தில் வேலை செய்ய முடியுமா?”என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான தலைவராக பணியாற்றிய ஒய்.வி.சுப்பா ரெட்டி, இந்த கூற்றுகளை மறுத்துள்ளார்.
இந்து அல்லாதவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் நியமிக்கப்படவில்லை என்று பிபிசி ஹிந்தியிடம் ரெட்டி கூறினார்.
பாலாஜியை தரிசனம் செய்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களுக்கு பைபிள் விநியோகம் செய்யப்பட்டதாக பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
“இது எப்படி சாத்தியம்? இதை நாங்கள் எப்படி அனுமதிப்போம் என்று நினைக்கிறீர்கள்?”என ரெட்டி கேட்டார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசில் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது.
ஜூன் மாதம் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு முக்கிய கருத்தை தெரிவித்திருந்தார்.
“ஜெகன் மோகன் ரெட்டி காலத்தில் களங்கப்பட்ட அரசு நிர்வாகத்தை சுத்தப்படுத்துவேன். திருமலை திருப்பதி கோவிலில் விவகாரத்தில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்கும்” என்று சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காலத்தில் திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேவஸ்தான ஊழியர்கள் கூறுவது என்ன?
தேவஸ்தான ஊழியர் சங்கத் தலைவர் கந்தாரப்பு முரளி (Kandarapu Murali) இந்த விவகாரம் குறித்து பிபிசி ஹிந்தியிடம் வேறுவிதமாகத் தெரிவித்தார்.
“ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைப் பரப்புவதில் சிலர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அது உண்மை இல்லை. இந்து அல்லாத ஊழியர்கள் அவர்களின் கடமையை மட்டும் செய்கின்றனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அழுத்தத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினாலும் அதில் தவறில்லை,” என்று அவர் கூறினார்.
முரளி மேலும் கூறுகையில்,”சம்பந்தப்பட்ட 31 இந்து அல்லாத ஊழியர்கள் மருத்துவமனைகள், பள்ளிகள், தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். சிலர் ஓட்டுநர்களாக உள்ளனர். அவர்களது பணி கோயிலின் செயல்பாட்டில் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது,” என்று தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்து அல்லாதவர்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றில்தான் வேலை செய்கிறார்கள்.” என சுப்பா ரெட்டியும் கூறுகிறார்.
“எங்களிடம் முதல் நிலை தரவுகள் மட்டுமே உள்ளன. மேலும் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். இந்தத் தரவுகள் லஞ்ச ஒழிப்புத் துறையுடன் பகிரப்படும். பின்னர் அவர்களால் விசாரிக்க முடியும்” என திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் நாயுடு, பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
“தனிப்பட்ட முறையில் நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல. எனது அலுவலகத்தில் இந்து அல்லாத பல ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கோவிலின் சேவையில் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் பங்கைக் குறைத்ததன் மூலம், பக்தர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த விரும்புகிறோம். அதற்கே முன்னுரிமை அளிக்கின்றோம்” என்றும் அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.