2
வலிகளாலும் வேதனைகளாலும் உழலும் ஒரு உயிரின் துடிப்புகள் வரிகளால் சிதம்பி வழிகிறது. ஓர் தேசத்து போராளியின் வெதும்பித் தகிக்கும் குமுறல்களை கவிதைகளில் வெடிக்கவைத்து விடுகிறார். பார்த்தது கேட்டது அற்று அனுபவித்த ரணங்களை பூட்டி வைத்து விட்டு வரிகளில் கொட்டி வாசிப்பவர் மனதினை உடைத்து உருக்குலைத்து விடுகிறது.
கனவுகள் எட்டிடாமல் சிதைந்து போன போராட்டங்கள் இழப்புக்களின் வலிகளை சொல்ல வேண்டிய இடத்தில் கச்சிதமாக உணர்த்துகிறது கவிதைகள் ஒவ்வொன்றும். மண்ணில் நடந்த போராட்டத்தில் மரணித்து போன மக்கள்,தோழர்கள்,தோழிகள் மீண்டு வருவார்களா? சரணடைந்த மக்கள் தோழர்கள் தோழிகளுக்கு என்ன நடந்தது, மக்களின் துயரங்கள் எனும் ஏக்கம் வாசிப்பவர் நெஞ்சங்களை அவாவிச் செல்கிறது.
சில கவிதைகள் நேரடியாக ஆழமான வலிகளை குறிப்பிடுவது போல சில கவிதைகள் ஆழஊடுருவி இழப்புக்கள் , புறக்கணிப்புக்கள் ஏக்கங்கள்,தேடல்கள் என்று உயிரின் ஆழ்வலியை பொதித்து வைத்திருக்கிறது. உதாரணமாக
உனக்கான தவம் கவிதையில்…….
வீதியெங்கும் நிறைந்திருக்கும்
முட்களை பொறுக்கி
வெள்ளைப் பூக்களோடு உனக்காக காத்திருக்கின்றேன்
கோபத்தை விடுத்து வந்துவிடு
வாகாய் இணைந்து பாசமாய் இருப்போம்
இதய ஓசை கவிதையில்…….
பகைவர்களின் கண்களிற்கு விருந்தாகாது
உனது பெயரை மீட்டு பதியமிடுகின்றேன்
எந்தன் இதய ஓசை
உன்னை அழைக்கிறது
வா மீண்டும் ஒரு முறை
வானம் நமக்கு பூத்துவ
வலசை பறவையாகி
திக்கெட்டும் திசையெங்கும் பறந்து செல்வோம்
அழகான வரிகளில் ஆழமான கருத்துக்களை புகுத்தப்பட்டு வாசிப்பவரை கிறங்கடிக்க செய்து விடுகிறது. வாசிப்பு முடியமுன்பே தேச போராட்டம் மௌனிக்கப்பட்டது போல் மனதும் மௌனிக்கப்பட்டு கொண்டே சென்றுவிடுகிறது. இறுதியில் “விதையானவன்’ கவிதையில் வீரியம் மிக்க வரிகள் ஒட்டு மொத்த கவிதைகளையும் மீட்டிட வைத்து விடுகிறது.
ஒரு ஆத்மாவின் தவிப்புக்களையும் உணர்வின் உக்கிரங்களையும் வரிகளில் கொட்டித்தீர்த்து விட்டார் பிரபாஅன்பு. ஒவ்வொரு கவிகளும் சத்தம் இல்லாமல் கொன்று விடுகிறது. என்னை பொறுத்த வரை கவிதைகளின் அணுகுமுறை வித்தியாசமாகவும் மிக நுட்பமாகவும் உள்ளது.போராட்டத்தின் பின்னரான சாயைகளை இக்கவிதைகளில் காணலாம்
ஆன்மாவின் ஆலாபனை – தவிப்பு.