• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதில் தமிழக அரசின் நிலை என்ன? – அன்புமணி | Anbumani slams govt over online gambling issue

Byadmin

Mar 30, 2025


சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த தற்கொலைகளில் 77 உயிரிழப்புகள் திமுக ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? உச்ச நீதிமன்றத்தை அணுகியோ, புதிய சட்டத்தை இயற்றியோ ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கப் போகிறதா? அல்லது தற்கொலைகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவரது குடும்பம் கடனுக்கும், வறுமைக்கும் ஆளானதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெண்ணிலாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த மதன்குமார் ஒவ்வொரு நாளும் வேலை செய்து ஈட்டும் ஊதியத்தை ஆன்லைன் சூதாட்டம் விளையாடி இழந்ததாகக் கூறப்படுகிறது. ஊதியம் தவிர வெளியில் கடன் வாங்கியும் ஆன்லைனில் சூதாடியுள்ளார். அதனால், ஒருபுறம் கடன் அதிகரித்த நிலையில், மறுபுறம் வறுமையால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்த வெண்ணிலா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் அதை விளையாடுபவர்களை மட்டுமின்றி குடும்பத்தையும் அழிக்கும் என்பதற்கு இது தான் சான்று.

ஆன்லைன் சூதாட்டத்தின் காரணமாக நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெண்ணிலாவின் தற்கொலை கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10-ஆம் தற்கொலை ஆகும்.திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 87 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதும், அதன் மூலம் தற்கொலைகளைத் தடுப்பதும் இயலாத காரியமல்ல. ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு சலனமின்றி இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த தற்கொலைகளில் 77 உயிரிழப்புகள் திமுக ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளன. அதனால், ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு திமுக அரசுக்கு தான் உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன? உச்ச நீதிமன்றத்தை அணுகியோ, புதிய சட்டத்தை இயற்றியோ ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கப் போகிறதா? அல்லது தற்கொலைகள் தொடரட்டும் என்று வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.



By admin