• Tue. Aug 26th, 2025

24×7 Live News

Apdin News

ஆன்லைன் சேவையில் ஓடிபிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்! | OTP Ban Petition Dismissed: Madurai High Court Order

Byadmin

Aug 26, 2025


மதுரை: மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆன்லைன் சேவைகளை பெற ஓடிபி எண் பெற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கீரைத்துறையைச் சேர்ந்த தங்கமாரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆன்லைன் வழியாக பெறப்படும் சேவைகளுக்கு ஆதார் எண், ஓடிபி எண் போன்ற விபரங்களை கேட்கப் படுகிறது. குறிப்பாக காவல் துறை குடியுரிமை பிரிவு, மின்னணு சேவைகள், நில ஆவணங்கள் பிரிவு, ஓலா, உபர், ஸ்விகி, சொமாட்டோ உள்ளிட்ட பல்வேறு செயலிகளில் நுழைய இதுபோல மொபைல் எண்களும், ஓடிபி எண்களும் பெறப்படுகின்றன.

இது தனி உரிமை விதிகளுக்கு எதிரானது. உணவு பொருட்களை ஆர்டர் செய்யும் போதும், அவசர தேவைக்காக பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற அவசரத் தேவைகளுக்காக ஓடிபி எண்ணை பகிர வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு பெறப்படும் செல்போன் எண்களுக்கு மனுதாரர்களின் அனுமதி இல்லாமலேயே விளம்பரங்கள் அனுப்பப்படுகிறது. சில நேரங்களில் அரசியல் ரீதியாகவும் ஓடிபி எண் பயன்படுத்தப்படுகிறது. எனவே ஆன்லைன் வழியான மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் சேவைகளுக்கு ஓடிபி எண் அனுப்பவும், பெறவும் தடை விதித்து உத்தர விட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இன்றைய காலக் கட்டத்தில் ஓடிபி எண் பெறாமல், எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது. தரவுகள் பாதுகாப்பு சட்டப்படி ஒவ்வொரு நிறுவனமும் தனிப்பட்ட கெள்கை வகுத்து செயல்படுகின்றன. ஓடிபி பெறும் நிறுவனங்களின் விதிமுறையிலேயே ஓடிபி எண் பெறப்படும் எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஓடிபி எண் பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை குறிப்பிட்டு மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம். அதைவிடுத்து மொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. மனுதாரர் விளம்பர நோக்கத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



By admin