படக்குறிப்பு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பகிர்ந்த புகைப்படம், அவரும் மற்ற அமெரிக்க அதிகாரிகளும் வெனிசுவேலா மீதான தாக்குதலைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது.
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து இன்று (ஜனவரி 3) புளோரிடாவில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், வெனிசுவேலா அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் “இப்போது அமெரிக்க மண்ணில் நீதியை எதிர்கொள்கிறார்கள்” என்றார்.
“அமெரிக்காவிற்கும் அதன் குடிமக்களுக்கும் எதிரான “கொடிய போதைப்பொருள் பயங்கரவாத பிரசாரத்திற்காக” அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மதுரோ எப்படி சிறைபிடிக்கப்பட்டார் என விளக்கிய அமெரிக்காவின் ஜெனரல் டான் கெய்ன், “மதுரோ எங்கு வசித்தார், என்ன சாப்பிட்டார் என்பது உட்பட அவரைப் பற்றிய விவரங்களைக் கண்டறிய “பல மாதங்கள்” புலனாய்வுப் பணிகள் நடைபெற்றதாக” குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைக்காக 150-க்கும் மேற்பட்ட விமானங்களை சரியான இடத்திலும் நேரத்திலும் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது என்றும் ஜெனரல் கெய்ன் தெரிவித்தார்.
சற்று முன், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், வெனிசுவேலா மீதான தாக்குதல்களையும், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டதையும், அவரும் மற்ற அமெரிக்க அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது.
பட மூலாதாரம், Getty Images
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தத் தாக்குதல் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை விளக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மதுரோவை ‘நீதியின் முன் நிறுத்த’ அமெரிக்கப் படை, வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸின் மையப்பகுதியில் உள்ள ‘மிகப்பெரிய அளவில் பாதுகாக்கப்பட்ட ராணுவக் கோட்டையை’ நோக்கிச் சென்றதாக டிரம்ப் கூறினார்.
“உலகில் எந்த நாடும் அமெரிக்கா அடைந்ததை அடைய முடியாது. அமெரிக்காவின் தாக்குதலில் வெனிசுவேலாவின் அனைத்து ராணுவத் திறன்களும் ‘பலவீனமாக்கப்பட்டன’ என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவிடம் உள்ள “ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் காரணமாக” நடவடிக்கையின் போது கராகஸின் விளக்குகள் அணைக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஜெனரல் டான் கெய்ன்
டிரம்பைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க ஜெனரல் டான் கெய்ன் மதுரோவை ‘சிறைபிடித்தது’ எப்படி என விளக்கினார்.
‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை ‘ரகசியமாக’ மற்றும் ‘துல்லியமாக’ நடத்தப்பட்டது என்று ஜெனரல் டான் கெய்ன் கூறினார்.
இந்த நடவடிக்கையில் ராணுவ வீரர்கள், கடற்படையினர், விமானப் படையினர் மற்றும் பிற வீரர்களை உள்ளடக்கிய கூட்டுப் படைகளின் ‘ஒவ்வொரு பிரிவும்’, புலனாய்வு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்கத் துறையினருடன் ‘இணைந்து’ செயல்பட வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை, ‘நிகரற்ற’ புலனாய்வுத் திறன்களையும் ‘பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் பல ஆண்டுகால அனுபவத்தையும்’ பயன்படுத்திக் கொண்டதாக டான் கெய்ன் தெரிவித்தார்.
மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடிக்கும் நடவடிக்கை மிகவும் துல்லியமாக இருந்தது என்றும், இதற்காக 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் சரியான இடத்திலும் நேரத்திலும் ஒன்றிணைக்கப்பட வேண்டியிருந்தது என்றும் ஜெனரல் கெய்ன் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த ராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்புப் பணிகள் குறித்து பேசிய அவர், மதுரோ எங்கு வசித்தார், என்ன சாப்பிட்டார் என்பது உட்பட அவரைப் பற்றிய விவரங்களைக் கண்டறிய “பல மாதங்கள்” புலனாய்வுப் பணிகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.
வெனிசுவேலாவின் விமான எதிர்ப்புத் தற்காப்பு அமைப்புகளை முடக்கியதன் மூலம், இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவம் “முற்றிலும் எதிர்பாரா தாக்குதல்” என்ற அம்சத்தை தக்கவைத்துக் கொண்டது என்று ஜெனரல் கெய்ன் கூறினார்.
தாக்குதலுக்கு இலக்கான ஹெலிகாப்டர்
ஜெனரல் கெய்ன் கூற்றுப்படி, “நாங்கள் கராகஸ் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.01 மணிக்கு மதுரோவின் வளாகத்தை அடைந்தோம். கைது செய்யும் தரைப்படை மதுரோவின் வளாகத்திற்குள் இறங்கி, வேகத்துடனும், துல்லியத்துடனும், ஒழுக்கத்துடனும் தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்தது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கைது செய்யும் போது, தரைப்படையின் பாதுகாப்பு மற்றும் பத்திரத்தை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. இலக்குப் பகுதியை அடைந்ததும், ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதற்கு அவை தற்காப்புக்காகவும், பெரும் சக்தியுடனும் பதிலடி கொடுத்தன. எங்கள் ஹெலிகாப்டர்களில் ஒன்று தாக்கப்பட்டது, ஆனால் அது பறக்கும் நிலையிலேயே இருந்தது.
இன்று முன்னதாக அதிபர் கூறியது போல், எங்கள் விமானங்கள் அனைத்தும் பத்திரமாகத் திரும்பின, மேலும் அந்த விமானம் இந்தத் திட்டத்தின் மீதமுள்ள நேரம் முழுவதும் பறக்கும் நிலையிலேயே இருந்தது.” என்றார்.
வானிலிருந்து கண்காணிப்பு
ஜெனரல் கெய்ன் விவரிக்கையில், “வளாகத்தில் இந்த நடவடிக்கை நடந்துகொண்டிருந்தபோது, எங்கள் வான் மற்றும் தரை உளவுப் படைகள் தரைப்படைக்கு நிகழ்நேரத் தகவல்களை வழங்கின. இது அந்தப் படைகள் தேவையற்ற ஆபத்து இல்லாமல் சிக்கலான சூழலில் பாதுகாப்பாகச் செல்ல உதவியது.
அந்தப் படைக்கு மேலே இருந்து வான் படைகள் பாதுகாப்பு அளித்தன. குற்றம் சாட்டப்பட்ட மதுரோவும் அவரது மனைவியும் சரணடைந்தனர். அவர்கள் எங்கள் அற்புதமான அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன், அமெரிக்க நீதித்துறையால் தொழில்முறை மற்றும் துல்லியத்துடன் காவலில் எடுக்கப்பட்டனர். இதில் எந்த அமெரிக்க உயிரும் இழக்கப்படவில்லை.” என்றார்.
கைதுக்கு பிந்தைய நடவடிக்கைகளை விவரித்த அவர்,” குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பாதுகாத்த பிறகு, படை புறப்படுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியது. மீட்புப் படையை வெளியேற்றுவதற்காக ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. அதே நேரத்தில் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மேலே இருந்து பாதுகாப்பு வழங்கின. படை வெனிசுவேலாவிலிருந்து வெளியேறத் தொடங்கியபோது பல தற்காப்பு மோதல்கள் நடந்தன.
படை வெற்றிகரமாக வெளியேறி, கடலில் உள்ள தங்கள் ஏவுதளங்களுக்குத் திரும்பியது. மதுரோவும் அவரது மனைவியும் யுஎஸ்எஸ் ஐவோ ஜிமா கப்பலில் ஏற்றப்பட்டனர்.” என்று ஜெனரல் கெய்ன் கூறினார்.
‘மதுரோ இதைத் தவிர்த்திருக்கலாம்’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, “இந்தத் தாக்குதலைத் தவிர்க்க மதுரோவுக்கு ‘பல வாய்ப்புகள்’ இருந்ததாகத்” தெரிவித்தார்.
“மதுரோ சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிபர் அல்ல. இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. முதலாவது டிரம்ப் நிர்வாகமும் பைடன் நிர்வாகமும் இதையே கூறியது” என்று ரூபியோ தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளால் மதுரோ அங்கீகரிக்கப்படவில்லை என்று ரூபியோ கூறினார்.
“வெனிசுலா அதிபர் அமெரிக்க நீதியிடமிருந்து தப்பியோடியவர். அவருக்கு 50 மில்லியன் டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.” என்று குறிப்பிட்டார் ரூபியோ.
“நாங்கள் அந்த 50 மில்லியன் டாலரை மிச்சப்படுத்திவிட்டோம் என்று நினைக்கிறேன்,” என்று ரூபியோ கூறியபோது, டிரம்ப் குறுக்கிட்டு, “நாம் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்… யாரையும் உரிமை கோர விடாதீர்கள்,” என்றார்.
இந்தத் தாக்குதலைத் தவிர்க்க மதுரோவுக்கு “பல வாய்ப்புகள்” இருந்தன, ஆனால் அவர் “காட்டுத்தனமாக செயல்படவும்”, “விளையாடவும்” முடிவு செய்தார் என்று ரூபியோ விவரித்தார்.
‘இரானைத் தனது நாட்டிற்குள் “அழைக்கவும்”, “அமெரிக்காவிற்குள் கும்பல் உறுப்பினர்களை நுழையவிடவும்” முடிவு செய்த ஒரு மனிதர் மதுரோ’ என ரூபியோ குற்றம் சாட்டினார்.
“எதுவும் நடக்காது என்று மதுரோ நினைத்தார். ஆனால், டிரம்ப் இத்தகைய விஷயங்களை விளையாட்டாக அணுகுபவர் கிடையாது. டிரம்ப் ஒரு சிக்கலைத் தீர்க்கப் போவதாகக் கூறினால், அவர் அதைச் செய்து முடிப்பார்” என்று ரூபியோ தெரிவித்தார்.
வெனிசுவேலாவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வெற்றிகரமான ஒன்று என விவரித்த டிரம்ப், “அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை மற்றும் எந்த அமெரிக்க ராணுவத் தளவாடங்களும் அழிக்கப்படவில்லை. அதேசமயம் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்யும் நோக்கம் நிறைவேற்றப்பட்டது.” என்று கூறினார்.