படக்குறிப்பு, இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக” இந்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்தம் ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “எங்கள் நடவடிக்கை கவனமிக்கது, அளவிடப்பட்டது மற்றும் ஆத்திரமூட்டாதது. பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு எதுவும் குறிவைக்கப்படவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்தச் சூழலில் தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவது என்ன?
‘பதிலடி கொடுக்க எல்லா உரிமையும் உண்டு’ – பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார்.
இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்களுக்குப் பதிலளித்து பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் உள்ளதாகத் தெரிவித்தார்.
“எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் இந்தத் தாக்குதலை “போர் நடவடிக்கை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், “இந்தப் போர் நடவடிக்கைக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.
அதோடு, பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்துடன் துணை நிற்கிறார்கள், நாட்டின் மன உறுதி வலிமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர், “எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். எதிரியின் தீய எண்ணங்கள் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.
‘ஏழு இலக்குகள் உறுதி’ – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
படக்குறிப்பு, ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் உறுதி செய்துள்ளார்.
பிபிசி உருதுவிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், “தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுகிறேன். அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்று இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இரண்டு மசூதிகளும் அடங்கும். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று சமீபத்திய தரவுகள் தற்போது என்னிடம் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தாக்குதல் நடந்ததாக உறுதி செய்யப்படுள்ள ஏழு இடங்களில் இரண்டு காஷ்மீரிலும் ஐந்து பாகிஸ்தானிலும் உள்ளன, இவை அனைத்துமே பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
படக்குறிப்பு, எந்தத் தவறான செயலும் முழு வீச்சுடன் எதிர்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான் பகுதிகளிலும் பொது மக்கள் இலக்குகள் மீதும் இந்தியா நடத்தியுள்ள கோழைத்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்தகைய ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.
“நமது வீரம் செறிந்த விமானப்படை உள்ளிட்ட பாகிஸ்தானின் துணிச்சலான ஆயுதப் படைகள் உறுதியுடன் பதிலடி கொடுத்து வருகின்றன. எந்தத் தவறான செயலும் முழு வீச்சுடன் எதிர்கொள்ளப்படும். பாகிஸ்தான் ஒன்றுபட்டுள்ளது” என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்திய தாக்குதல்கள் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதுல்லா தரார், “அவர்கள் எங்கள் எல்லையைக் கடந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துகளை தரார் மீண்டும் வலியுறுத்தினார். அவர், “இந்தத் தாக்குதல் நியாயமற்றது. இது முற்றிலும் திட்டமிடப்படாத தாக்குதல். நாங்கள் இதற்குக் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம். எங்கள் பதில் தாக்குதல் வானிலும் நிலத்திலும் தொடரும்” என்று தெரிவித்தார்.