• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு | Police on high alert in Chennai

Byadmin

May 9, 2025


`ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் `ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இதையடுத்து நாடு முழுவதும் 200 இடங்களில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு, பல்வேறு பகுதிகளில் போர் ஒத்திகை நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு கல்பாக்கம் அணுமின் நிலையம், துறைமுகத்தில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அண்ணாசாலை, ஈவெரா பெரியார் சாலை, காமராஜர் சாலை, வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், முக்கிய கோயில்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் கூடாரங்கள் அமைத்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



By admin